பட்ஜெட் 2010 – சாமானியனின் பார்வையில்

பிரணாபமான பட்ஜெட்?

சொல்கிறார்கள் :

அளவுக்கு மீறிய நல்ல பட்ஜெட் – மன்மோகன் சிங்

ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டி.ராஜா

நோக்கம் சரி, ஆனால் சாரம் இல்லை – செல்வி.ஜெயலலிதா

பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட் – இந்திய தொழிலகக் கூட்டமைப்பைச் சேர்ந்த (சிஐஐ) தொழிலபதிர்கள்.

சாமானிய மக்களைக் கடுமையாக பாதிக்கும் – குஜராத் முதல்வர் மோடி

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க வழி செய்யாமல் பெட்ரோல்
விலையை ஏற்றி விட்டார்கள் – ஒரு கல்லூரி மாணவி

வருமான வரி வரம்பு உயர்த்தப்பட்டிருப்பது நல்ல விஷயம் – ஒரு ஐ.டி அலுவலர்

"சிறந்த முறையில் வரி வசூலிக்க விரும்பும் அரசன், உற்பத்தியும் பயன்பாடும் பாதிக்காமல் வரி விதிக்க வேண்டும். அரசின் நிதி வளம் மக்களின் கையில் உள்ள பணத்தைச் சார்ந்துள்ளது — சாணக்கியர்"

******

பிப்ரவரி 26ம் தேதி தொலைக்காட்சியின் முன்பு மத்திய பட்ஜெட்டின் நேரடி ஒளிபரப்பைப் பார்க்க நான் அமர்ந்தேன். "அப்படியென்ன உங்களுக்குப் பெரிய ஆர்வம் பட்ஜெட் மீது? வருமான வரியில் ஏதேனும் சலுகை என்று மட்டும்தானே பார்ப்பீர்கள்?" என்று மனைவி அதட்டினதும் (வழக்கம் போலத்தான்!) ஒரு வகையில் நியாயம்தான்!

உண்மைதானே! நம்மைப் போல மாத ஊதியம் வாங்கும் – சுஜாதா சொல்வதுபோல ‘மத்திமர்’ – எதிர்பார்ப்பது வருமான வரி சலுகைதானே!

புன்னகையை வரவழைக்கும் வகையில் ஆண்டு வருமானம் 1.6 லட்சம் வருமானம் வரை வரி விலக்கு! 5 லட்சம் வரை 10 சதவிகிதம் வரி செலுத்தினால் போதும். 8 லட்சம் வரை 20 சதவிகிதமும், 8 லட்சத்திற்கு மேல் 30 சதவிகிதம் வரி கட்டினால் போதும். (எட்டு லட்சமா..! அது நமக்கு எட்டாத லட்சம்!!)

இதனால் வரி செலுத்துபவர்களில் 60 சதவிகிதம் பேர் பயனடைவார்கள். 5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் 20 ஆயிரமும், 8 லட்சம் வரை வாங்குபவர்கள் 50000மும் சேமிக்க முடியுமாம். பெண்களுக்கு 1.90 லட்சம் வரை, மூத்த குடிமக்களுக்கு 2.40 லட்சம் வரை வரி கிடையாது. இதன் மூலம் மக்களிடம் செலவு செய்ய அதிகமான பணம் கையில் கிடைக்கும். அதனால் செலவு செய்வது அதிகரித்து பொருளாதார வளர்ச்சி மேலும் உயரும் என்பது பிரணாபின் கணக்கு!

இந்தப் புன்னகை நிலைக்குமுன்னே பெட்ரோல் மீதான சுங்கவரியும், உற்பத்தி வரியும் உயர்த்தப் பட்டிருப்பதால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ 2.94ம், டீஸல் ரூ 2.76மாக உயருகிற அறிக்கை வெளிவருகிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயரக் கூடுமாமென்று பேச்சு அடிபடுகிறது. (மனைவியின் பற்கள் நறநறக்கின்றன!) ஏற்கெனவே விலைவாசி உயர்வால் தவிப்பவர்களுக்கு இந்த உயர்வு மேலும் பளு அல்லவா?

இதை அறிவிக்கும்போது பா.ஜ.க வெளிநடப்பு செய்ய, மற்ற எதிர்க்கட்சிகளின் (ஆளும் கட்சி கூட்டணி உறுப்பினர்களையும் சேர்த்தே!) கடுமையான தாக்கு தொடர்கிறது. பெட்ரோலியம் சாராத நுகர்பொருட்களுக்கு (எக்ஸைஸ்) கலால் வரிகளை 8 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதால் டி.வி, ஏ.சி, ஃபிரிட்ஜ், சிமெண்ட், பீடி, சிகரெட் ஆகிய புகையிலைப் பொருட்கள் மற்றும் கார்கள் இவைகளின் விலை கடுமையாக உயர இருக்கிறது.

செல்போன் உதிரிபாகங்கள். மருத்துவ உபகரணங்கள், மின் விளக்குகள், செட் டாப் பாக்ஸ், பொம்மைகள், புத்தகங்கள் ஆகியவற்றின் மீதான கலால் வரிகள் குறைக்கப் பட்டிருப்பதால் இவைகளின் விலைகள் குறையும் என்பது செல்போனர்களுக்கு காதிலே செந்(ல்)தேன் பாயும் விஷயம்.

சேவை வரி (service Tax) இப்போதிருக்கும் 10 சதவிதமாகவே தொடரும். சில குறிப்பிட்ட புதிய சேவைகள், சேவை வரி விதிப்பில் சேர்க்கப்படுகின்றன.

சர்சார்ஜ் 10 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருப்பது பல நிறுவனங்களுக்கு சந்தோஷ சமாச்சாரம்.

உள் கட்டமைப்புத் துறைக்கு அதிகமான சலுகைகள் அறிவிக்கப்பட்டு நெடுஞ்சாலைகளை அமைக்க அதிக நிதி ஒதுக்கி இருப்பது அவசியமான அம்சம்தான்.

ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான (Research and development) வரிச் சலுகைகள் பல புதிய பொருட்களை உருவாகும் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும்.

விவசாயிகளுக்கான வட்டிச் சலுகை ஒரு சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு 5 சதவிகித வட்டியில் பயிர்க் கடன் கிடைக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் பயிர்க் கடனை திருப்பித் தருபவர்களுக்கு 2 சதவிகித வட்டி தள்ளுபடி செய்யப் படும். (அதற்குப் பின்பும் கடனைத் திருப்பித் தர முடியாதவர்களுக்கு, கடனையே தள்ளுபடி செய்யப் படுமா என்பது ஒரு சிலரின் விருப்பமான சந்தேகம்!)

சிறுதொழில் துறைகள், கிராம மேம்பாட்டிற்கான 66000 கோடி ஒதுக்கீடு, கல்விக்கான அதிக (31000 கோடி) திட்ட ஒதுக்கீடு, வேளாண்மை, விவசாய உற்பத்தி வசதிகளுக்கான வரிச் சலுகைகள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு நிதி, பின் தங்கிய பகுதிக்கான மானிய நிதி ஆகியவை சமூக நலக் கண்ணோட்டத்தோடு அறிவிக்கப் பட்டிருக்கும் திட்டங்கள். ஆனால் இவற்றை சரியான முறையில் செயல்படுத்தினால்தான் இந்த அறிவிப்புகளின் நோக்கம் நிறைவு பெறும்!

நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் அதை ஸ்திரப்படுத்தும் நோக்கத்தில் சில சலுகைகளை விலக்கி, சமூக நலன் கருதி சில சலுகைகளை அளித்து, இந்த பட்ஜெட்டைத் தயாரிக்கும் நிர்பந்தம் நிதி அமைச்சருக்கு இருக்கிறது.

கலால் போன்ற மறைமுக வரிகள் மூலம் வரும் 46 ஆயிரம் கோடி வருவாய், நேர்முக வரிகள் மற்றும் சலுகைகள் மூலம் வரும் 20 ஆயிரம் கோடி இழப்பு என ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கி சமாளிக்க வேண்டிய நிலை இருக்கிறது.

எந்த பட்ஜெட்டுமே எல்லா தரப்பினரையும் திருப்திப் படுத்தியதாக இதுவரை சரித்திரமே கிடையாது! கயிறு மேல் நடக்கும் ஒரு கழைக் கூத்தாடியின் நிலைதான் நிதி அமைச்சர்களுக்கு. இதில் பிரணாபின் பட்ஜெட் நல்லதா, கெட்டதா.. என்று கேட்டால், "தெரியல்லியேப்பா!" என்றுதான் என்னைப் போல் சாமானியர்கள் சொல்ல முடியும்.

About The Author