பை! பை! பில்கேட்ஸ்…

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

பில்கேட்ஸ் என்ற (மூன்றாம்) வில்லியம் ஹென்றி கேட்ஸ் தான் அமைத்த அரசாங்கத்திலிருந்து பிரியும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், இந்த வருடம், ஜூன் மாதம், இருபத்தியேழாம் தேதி, மைக்ரோஸாப்ஃடின் அரியணையிலிருந்து இறங்கிவிட்டார். விட்டகுறை தொட்டகுறை என்பது போல், ‘பார்ட்-டைம், நான்-எக்சிக்யூடிவ் சேர்மன்’ என்ற பதவியில் இருக்கிறார்.

இப்பொழுது அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கு பெரிய கேள்வியென்னவென்றால், தன் செல்வங்களையெல்லாம் கேட்ஸ் என்ன செய்யப் போகிறார் என்பதுதான். தனக்குப் பிறந்த மூன்று செல்வங்களைத் தவிர்த்து, கேட்ஸ் கிட்டத்தட்ட ஐம்பத்தியெட்டு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்குச் சொந்தக்காரர்.

கேட்ஸ் தானதர்மங்கள் செய்வதில் பெருந்தன்மையுடையவர் என்பது உலகம் அறிந்த ஒன்றே. அதனால்தானோ என்னவோ, மக்களிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பு கேட்ஸ் தனது சொத்துக்களில் பெரும் பங்கை நற்காரியங்களுக்காக தர்மம் செய்வார் என்று. அவ்வெதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எண்ணத்தில்தான் மனிதர் இருக்கிறார் போலிருக்கிறது

இரண்டாயிரமாம் வருடத்தில் தன் மனைவியுடன் சேர்ந்து ஒரு அறநிலையம் அமைத்தார் கேட்ஸ். அதன் சிறப்புத் தன்மை என்னவென்றால், தர்மம் செய்பவர்கள் தங்கள் தானம் எங்கே போகிறது என்பதை கண்கூடாகப் பார்க்க முடியும். இந்த தன்மை உடைய அறநிலையங்களில், கேட்ஸின் “பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்” உலகின் மிகப் பெரியதாகும். இனி, தன் முழுநேரத்தையும் இந்த சேவை நிறுவனத்திற்காகத்தான் செலவிட எண்ணுகிறார்.

இதைத் தவிர, மற்ற நிறுவனங்களுக்கு நிதி அளிக்க விருப்பம் இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், அந்த நிறுவனங்களில் எந்தப் பொறுப்பும் ஏற்க இஷ்டம் இல்லையென்றும் சொல்லியிருக்கிறார். முழு நேர சேவையில் ஈடுபட எண்ணுகிறார் போலும்!

கேட்ஸ், தனக்கு இதில் ஆர்வம் வந்ததற்கு தன் நெடுங்கால நண்பர் ‘வாரன் பஃபே’வை ஒரு காரணமாகச் சொல்கிறார். இருவருக்கும் தர்மம் செய்வதில் ஒரு போட்டியே நிலவுகிறதென்றால் பெரிய விஷயம்தான்! இவர்கள் வள்ளுவன் வாக்கையே நினைவூட்டுகிறார்கள்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வை புழி

வாழ்க கேட்ஸ்! வளர்க மானுடம்!!

About The Author

1 Comment

  1. Shankar

    ungal vimarsanangal yellam ungal pudthi saali thanattain kaatuvatharkaga yaeludhiyadu pol irukkiradu. iyarkkayaaga yaeluda muyarchikkavum

Comments are closed.