அனாடமிக் தெரபி (69)

பலர் இரவு படுத்தவுடன் தூக்கம் வரவில்லை என்றால் பயப்பட்டு, "நமக்கு ஏதோ நோய் வந்துவிட்டது" என்று எண்ணி மருத்துவரிடம் சென்று ஆலோசனை கேட்கிறார்கள். மருத்துவர்களும், தூக்கத்திற்கும் ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல் தூக்க மாத்திரை கொடுக்கிறார்கள்.

இப்படி யாரெல்லாம் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்குகிறீர்களோ அவர்களெல்லாருடைய புத்தியும் மனமும் தங்களை அடுக்கி வைத்துக் கொள்ளும் வேலையைச் செய்வதே கிடையாது. தூக்க மாத்திரை மூலமாக ஒரு மனிதனுக்கு ஓய்வு கிடைக்காது; ஆனால், தூக்கம் கிடைக்கும். எனவே யார் யாரெல்லாம் ஓய்வு எடுக்க வேண்டிய நேரத்தில் தூக்க மாத்திரை மூலமாய் நேரடியாகத் தூக்கத்தை அனுபவிக்கிறீர்களோ உங்களுடைய மனதும் புத்தியும் தங்களை அடுக்கி வைத்துக் கொள்ளாமலேயே இருக்கும். இப்படிப் பல மாதங்களாகத் தூக்க மாத்திரை சாப்பிட்டு வந்தால், மாதக்கணக்காக நீங்கள் உங்கள் மனதையும், புத்தியையும் அடுக்கி வைக்காமலே இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

இப்படித் தூக்க மாத்திரை மூலமாகத் தூங்கும் அனைவரும் என்னைப் பொறுத்த வரை மனரீதியான நோயாளிகள். அவர்களுக்கு தைரியம் இருக்கவே இருக்காது. எந்த முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. எப்பொழுதும் மனதில் ஒரு குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். எனவே, தயவு செய்து, தூக்க மாத்திரைகளைப் பயன்படுத்தாதீர்கள்! உடம்புக்கு இப்பொழுது தூக்கம் தேவையில்லை என்று அது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும்பொழுது நாம் ஏன் தேவையில்லாமல் தூக்கத்தை விரும்ப வேண்டும்? ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்! நம் உடலுக்கு என்ன வேண்டுமோ அதை அதுவே உடனே கேட்டுக் பெற்றுக்கொள்ளும். நமது உடலே வேண்டாம் என்று நினைக்கும்பொழுது நாம் தூக்கத்தைக் கொடுத்தால் அந்தத் தூக்கம் விஷமாக மாறும்!

தூக்கம் வரவில்லை என்று கவலைப்படுபவர்களே! அதற்கு நான் சில வழிமுறைகளைச் சொல்கிறேன். உங்களால் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்!

தினமும் இரவு மதுபானங்கள் சாப்பிடுவதால் நன்றாகத் தூங்கலாம். செய்வீர்களா? அபின் போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் நன்றாகத் தூங்க முடியும். நீங்கள் பயன்படுத்துவீர்களா!

இப்படி நான் உங்களுக்கு ஆலோசனை சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்னைத் திட்டுவீர்கள். அல்லது, காவல்துறையினரிடம் என்னை ஒப்படைப்பீர்கள். ஆனால், மருத்துவர்கள் தூக்கத்திற்காகக் கொடுக்கும் எல்லா மருந்து மாத்திரைகளிலும் போதை தரும் பொருட்கள்தான் உள்ளன. இவை இல்லாமல் தூக்க மாத்திரைகளைச் செய்யவே முடியாது.

 எனவே, உண்மையில் யார் யாரெல்லாம் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்குகிறார்களோ, அவர்களெல்லாரும் போதைப் பொருளைச் சாப்பிடுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்! பீடி, சிகரெட், சாராயம், கஞ்சா, அபின் போன்றவற்றை விடத் தூக்க மாத்திரை மிகப் பெரிய போதைப்பொருள்!

தூக்க மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு மாத்திரையின் டோஸ் போகப் போக அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணம் என்னவென்றால், குடிகாரர்கள் ஆரம்பத்தில் குவார்ட்டர் அளவில் தொடங்கி, போக போக ஆஃப், புல் என்று குடிக்கிறார்களே, அதைப் போல நீங்களும் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகிறீர்கள். சிறிய போதை உங்களுக்குப் போதாமல் மேலும் மேலும் பெரிய போதையைத் தேடிச் செல்கிறீர்கள். எனவே, தூக்க மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்! அதனால் மனிதனின் உடலுக்கு எந்த நன்மையும் என்றுமே விளைவது கிடையாது. அது நமது நோயை அதிகப்படுத்துமே தவிர குறைய வைக்காது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

தூக்கம் ஒருநாள் வரவில்லையென்றால் தூங்க வேண்டிய அவசியமில்லை. ஒருநாள், இரண்டு நாள் தூக்கம் வராமல் இருந்தால் கவலைப்படாதீர்கள். மூன்றாவது நாள் இரண்டு நாள்களுக்குச் சேர்த்து மொத்தமாக நீங்கள் தூங்கிவிடுவீர்கள். உடலுக்கு அறிவு உள்ளது. கண்டிப்பாக எது வேண்டுமோ அதை நம்மிடம் இருந்து அது கேட்டுப் பெற்றுக் கொள்ளும்.

தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் நமது சிகிச்சைப்படி அனைத்து முறைகளையும் கடைப்பிடித்தால் ஒவ்வொரு மாதமும் தூக்க மாத்திரையின் டோஸைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையச் செய்து, நான்கு மாதத்திற்குள் முழுவதுமாக விட்டுவிட்டு வாழ்க்கை முழுவதும் நிம்மதியாக வாழலாம்.

வாழ்வோம் ஆரோக்கியமாக!

கைதுறப்பு (Disclaimer): இப்பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்கு நிலாச்சாரல் பொறுப்பாக இயலாது. இவற்றைச் செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்!

–அடுத்த அமர்வில் சந்திப்போம்

About The Author