பாபா பதில்கள்

Siva Shankar Babaபரீட்சித் மகாராஜாவிற்கு சுகபிரம்மரிஷி பாகவதம் சொல்லிக்கொண்டே இருந்தபோது, பரீட்சித் மகாராஜாவிற்கு சந்தேகம் ஏற்பட்டது. அதற்கு சுகரின் பதில் பார்க்கலாம்.

1) கோபிகைகள் கண்ணனை தங்களுடைய காதலன் என்று நினைத்துக் கொண்டார்கள். கோபிகைகள் கண்ணனை பரமாத்மா என்று தியானிக்கவில்லை. அப்படி எண்ணியவர்களுக்கு எப்படி மோட்சம் கிடைத்தது என்று சுகரிடம் கேட்டார் பரீட்சித்.

சுகர் அதற்கு பின்வருமாறு பதில் சொன்னார். பிரகலாதன் கதையை உனக்கு எடுத்துரைக்கும் முன், பகை பாராட்டி கண்ணனை மனதில் இருத்திய சிசுபாலன் முக்தி அடைந்தான் என்று உனக்கு உரைத்தேன் அல்லவா? அப்படியிருக்க, அன்போடு அணுகியவர்களுக்கு முக்தி கிடைத்தது என்பதில் என்ன விந்தை? மானுடர் கடைத்தேறவே எங்கும் நிறைந்த பரம்பொருள் கண்ணனாக அவதாரம் செய்தான். எந்த எண்ணத்தைக் கொண்டு கண்ணனை எண்ணினாலும் போதுமானது. அவர்கள் கண்ணனோடு கலந்து கொள்வார்கள். மரம், செடி, கொடிகள் கூட கண்ணனின் அனுக்கிரகம் பெற்று முக்தி அடைந்திருக்கின்றன என்று உபதேசம் செய்தார். எனவே, நினைப்புதான் முக்கியம். கண்ணனை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். மெழுகுவர்த்தி உருகுவது போல நீங்கள் எப்போது இறைவனுக்காக உருகுகிறீர்களோ அப்போது உங்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது பாகவதத்தில் சுகர் பரீட்சித்துக்கு அளித்த பதில்.

அதனால் எந்த பாவனை என்பது முக்கியம் அல்ல. The thought is more relevant. அதாவது எதிரிக்கே, அவன் கண்ணனை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்ததால் மோட்சம் கொடுத்திருக்கிறான். நீங்கள் அன்போடு நினைத்தால் ஏன் மோட்சம் கிடைக்காது?

2)அறத்தை நிறுத்தி அநீதியை அழிக்கவல்லவோ கண்ணன் அவதாரம் எடுத்தான். அப்படியிருக்க ஆயிரமாயிரம் கோபிகைகளுடன் ஏன் ஆடிக் களித்தான்? இது தர்மமாகுமோ? என்று சுகரிடம் வினவினான் பரீட்சித்.

சுகர் இந்த கேள்விக்கு சொன்ன சமாதானம்:

நெருப்பானது எதையும் வாங்கிக்கொண்டு விழுங்கிவிடுகிறது. அதற்கு நல்லது கெட்டது என்ற பேதமும், வேற்றுமையும் கிடையாது. ருத்ரன் விஷத்தை உண்டான். மற்றவர்கள் விஷத்தை அருந்த முடியுமா? கர்மாவினால் கட்டுண்டவனுக்கு விதிக்கப்படும் விதிகள் இறைவனுக்கு விதிக்கலாகுமா?

மாயையை தன் வசமாக்கி அவதாரம் செய்த பரமனுக்கு பந்தமும் இல்லை. பயனும் இல்லை. தன்னை நாடி வருபவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருணையும், அருளும் மட்டுமே உண்டு. ஆயர்பாடியினரின் ஆத்மாவும் அவனே அன்றோ? கண்ணன் காண்பித்தது ஒரு மாயா விலாசம். பிருந்தாவனத்து கோபிகைகள் கண்ணனுடன் களிக்குங்கால் கோபிகைகள் தங்களுடன் இருப்பதாகவே ஆயர்பாடி ஆடவர்கள் கருதினார்கள். அதிகாலையில் கோபிகைகள் வீடு திரும்பியதைகூட அவர்கள் அறியவில்லை.”

About The Author