முப்பெரும் தேவிகள் உண்டாக்கிய சக்தி

பஞ்சபூதேஸ்வரம் என்ற தலத்தில் சுமார் 12 அடி உயரமுள்ள, பார்க்கப் பரவசமாக்கும் திருமேனி கொண்ட அம்பாள் ஐந்து முகம் கொண்டு அருள்புரிகிறாள். இவள்தான் பிரத்தியங்கிரா தேவி.
சாதாரணமாக, எல்லாக் கோயில்களிலும் ஒரு முகம் கொண்டு விளங்கும் பிரத்தியங்கிரா தேவி இங்கு பஞ்சமுகம் கொண்டு விளங்குவது ஒரு தனிச் சிறப்பு. இது போல் திரு உருவம் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த அம்பாளைக் காண நாம் சிவகங்கை மாவட்டம் செல்ல வேண்டும். அங்கு சென்ற பின் மானாமதுரை என்ற இடத்திலிருந்து சுமார் நான்கு கி.மீ தூரம் போனால் இந்த ஆலயத்தை அடையலாம். மிகப் பழமை வாய்ந்த ஆலயம். இங்கிருக்கும் அம்பாள் ஐந்து முகம் கொண்டிருப்பதால் இந்தத் தலத்தைப் பஞ்சபூதேஸ்வரம் என்று அழைக்கிறார்கள்.
இந்த ஆலயத்தில் பக்தர்கள் அனைவருக்கும் சாப்பாடு உண்டு. ஆம், தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. எதிரிகள் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், பில்லி, சூனியம் போன்றவற்றால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள் இங்கு வந்து வேண்டிய பரிகாரம் செய்து பூஜையும் செய்கின்றனர். இங்கு வாராகி அம்மனும் இருப்பதால் தங்களுக்கு ஏற்பட்ட விரோதிகளின் தொல்லையிலிருந்து காப்பாற்ற, பகையை வெல்ல வாராகி ஹோமம் செய்கின்றனர். நினைத்த காரியம் சுமுகமாக முடிய சுதர்சன ஹோமமும் நடைபெறுகிறது. இங்கு கால பைரவர் சன்னிதியும் இருக்கிறது. எனவே, மரணபயம் போக்க ஸ்ரீ காலபைரவ ஹோமமும் செய்துகொள்ளலாம். இங்கு இருக்கும் கணபதி ஸ்ரீ ருண மோக்ஷ கணபதியாகத் திகழ்கிறார். ஆகையால், கடன் தொல்லையிலிருந்து விடுபட இங்கு ஸ்ரீ ருண மோக்ஷ கணபதி ஹோமமும் செய்விக்கின்றனர். இந்தக் காலத்தில் பலவிதமான வியாதிகளின் தொல்லையால் பலர் அவதிப்படுகின்றனர். எத்தனை மருத்துவர்கள் பார்த்தும், மருந்து கொடுத்தும் கூடச் சிலருக்கு அவை சரியாவதில்லை. அப்படிப்பட்டவர்கள் இங்கு வந்து தன்வந்திரி ஹோமம் செய்ய, நலன் பெறுகிறார்கள். குழந்தைச் செல்வம் அடைய புத்திர காமேஷ்டி ஹோமமும் நடத்தப்படுகிறது. தவிர, எல்லா விதமான ஐஸ்வர்யங்களும் பெற மஹாலஷ்மி ஹோமமும் நடக்கிறது.

இந்த ஆலயம் இளையான்குடி சாலையில் அமைந்துள்ளது. இங்கு அமாவாசை அன்று ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவிக்குச் சிறப்புப் பூஜையும் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்ள பக்தர்கள் பலர் வருகின்றனர். அம்பாளும் அவர்கள் கோரிக்கைகளை ஏற்று அருள் புரிகிறாள். சில பரிகார ஹோமங்களில் காய்ந்த மிளகாய் வற்றல் அதிக அளவில் இடப்படுகிறது. ஆனால், அக்னியில் போட்டாலும் அதனால் கமறுவதில்லை.

ஸ்ரீ மகாபிரத்தியங்கிரா தேவியின் அழகைப் பார்க்க வேண்டுமே! நன்கு உக்கிரமாக இருந்தாலும் தேவியின் நாமத்தை ஜபித்து நிற்க நம்மையே நாம் மறக்கிறோம். இருபத்தி நான்கு கரங்களுடன் சிங்கத்தின் மேல் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறாள். அவள் சிரத்தைச் சுற்றி அக்னியின் ஜுவாலை வீசியபடி இருக்கிறது. கண்கள் சிவப்பாக இருக்கின்றன. இரண்டு கோரைப் பற்களும் உள்ளன. சிங்க முகத்துடன் அவள் தோற்றம் இருக்கிறது. பல கோயில்களில் அவளுக்குக் கறுப்பு உடையே உடுத்துகின்றனர். கழுத்தில் கபால மாலை அணிவிக்கப்பட்டிருக்கிறது. கைகளில் உடுக்கு, மண்டையோடு, சூலம், வாள் என்று பலவற்றைக் காணமுடிகிறது. பிரத்தியங்கிரா தேவியின் சரித்திரத்தில் அவளுக்கு ஆயிரம் தலைகளும் இரண்டாயிரம் கரங்களும் ஆயிரம் விதமான ஆயுதங்களும் இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிலை வடிவத்தில் நம்மால் இவ்வளவுதான் பார்க்க முடிகிறது.

புராணத்தில் ஸ்ரீ பிரத்தியங்கிரா மிகவும் சக்தி வாய்ந்த தேவியாக அவதரிக்கிறாள். அவள் தோன்றிய காரணம் என்ன?

ஹிரண்யகசிபுவைக் கிழித்து இரத்தத்தைக் குடித்த நரசிம்மர் கோபம் அடங்காமல் கொந்தளித்தபோது மஹாலட்சுமி, மஹாசரஸ்வதி, பார்வதி மூவரும் சேர்ந்து ஒரு சக்தியை உருவாக்கி நரசிம்மரை சாந்தமாக்க அனுப்பி வைத்தனர். அவள்தான் பிரத்தியங்கிரா தேவி. நரசிம்மரின் மடியில் அவள் அமர, அவர் கோபம் மறைந்து சாந்தமானார். இதனால் இவளை ‘நரசிம்ஹிகா’ என்றும் அழைக்கின்றனர்.

இன்னொரு கதைப்படி, நரசிம்மரை சாந்தமாக்க முதலில் சிவன் சரபேஸ்வரராக வந்தாராம். அவரது மூன்றாவது கண்ணிலிருந்து 1008 சிம்மமுகங்களுடன் 2016 கரங்களுடன் தனது இரத்தம் கக்கிய நாக்கு தொங்கியபடி இந்தப் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாளாம்.

இன்னும் ஒரு புராணக்கதை என்னவென்றால், முன்காலத்தில் இரண்டு ரிஷிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் பிரத்தியங்கிரா, மற்றொருவர் ஆங்கிரசர். இவர்கள் தவம் இருக்கையில் அவர்கள் ஜபித்த மூலமந்திரத்தின் மூலமாக ஒரு தேவி தோன்றினாள். அவளுக்கு அப்போது ஒரு பெயரும் இல்லை. ஆனால், பிறகு இந்த இரு ரிஷிகளின் பெயர்களைச் சேர்த்துத் தன் பெயரைப் ‘பிரத்தியங்கிரா தேவி’ என்று வைத்துக்கொண்டு அவர்களுக்கு மேன்மை அளித்தாளாம்.

இங்கிருக்கும் பஞ்சமுகப் பிரத்தியங்கிரா தேவியைக் காணப் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து இங்கு நடக்கும் ஸ்ரீ சதசண்டி யாகத்தில் கலந்து கொள்கிறார்கள். அம்பாளின் அபய கரங்கள் எல்லோருக்கும் ஆசி வழங்குகின்றன. கோயிலுக்கு வருபவர்கள் உடல் சுத்தம், மன சுத்தத்துடன் வர வேண்டும்; அங்கிருக்கும் வாராகி அம்மனைப் பார்க்கவும் தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கின்றனர் பக்தர்கள். 12 அடி உயரத்துடன் இருக்கும் அம்ப்பாளைப் பார்க்கவே பிரமிப்பும், பக்தி கலந்த பயமும் தோன்றுவதை உணரமுடிகிறது!

About The Author