நித்தம் நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும் பிறவிக் குணம்

சுவடுகள் அண்ணா நகர் ஏழாவது பிரதான சாலையில் ஓரமாய் நடந்து கொண்டிருந்தேன். என்னை உரசுவது போல ஒரு மூன்று சக்கர ஆட்டோ வந்து நின்றது. திடுக்கிட்டுக் கொஞ்சம் ஒதுங்கினேன்.

அங்கு வந்த ஒரு பெண்மணி ஆட்டோக்காரரிடம், "அடையார் போக வேண்டும். எவ்வளவு வேண்டும்?" என்று கேட்டாள்

அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுனர், "அட நீங்க உக்காருங்க போகலாம்" என்றார். அந்தப் பெண்மணி கெட்டிக்காரி போல இருக்கிறது. "இல்லை, நீங்க சொல்லுங்க. எவ்வளவு கொடுக்க வேண்டும்?" என்றாள். மீண்டும் அந்த ஆட்டோ ஓட்டுனர், "அதிகமா கேக்க மாட்டேனம்மா. நீங்க குடுக்கறதைக் குடுங்க" என்றார்.

"இல்லை, நீங்கள் எவ்வளவு என்று சொல்லி விட்டால் நல்லது".

"நான் மத்த பேரு மாதிரிக் கிடையாதும்மா, நியாயமாதான் கேப்பேன், அனியாயமா சம்பாதிச்ச அந்தக் காசு ஒட்டாதும்மா, அதுனால தைரியமா உக்காருங்க"

"இவ்வளவு பேசறீங்களே, அதை விட எவ்வளவு வேணும்னு சொல்லிடுங்களேன்" என்று வலியுறுத்தினாள் அந்தப் பெண்.

அதற்கு அந்த ஆட்டோ ஓட்டுனர், "200 ரூபாய் கொடுங்கள்" என்றார்.

அந்தப் பெண்மணி உடனே, "வேண்டாம். நான் வேறு ஆட்டோ பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு ஒரு அடி எடுத்து வைத்தாள்.

ஆட்டோ ஓட்டுனர், "சரிம்மா, 180 ரூபாய் கொடுங்கள்" என்றார் (பரவாயில்லையே ஒரு அடி நடந்தால் 20 ரூபாய் குறைகிறது).

மீண்டும் அந்தப் பெண்மணி, "வேண்டாங்க" என்று இன்னொரு அடி எடுத்து வைத்தாள். ஆட்டோ ஓட்டுனர் இப்போது, "சரிம்மா 150 ரூபாய் கொடுங்கள்" என்றார். அடேடே இரண்டாவது அடி எடுத்து வைத்தவுடனே ஒரு அடிக்கு 20 ரூபாயாக இருந்த விலைவாசி கிடு கிடுவென்று உயர்ந்து ஒரு அடிக்கு 30 ரூபாயாக ஏறியது. வாழ்க்கையில் ஒவ்வொரு அடி நடந்தாலும் 30 ரூபாய் சேமிக்க முடியும் என்று உணர்த்திய அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும் என்று நினைத்துக் கொண்டே மீண்டும் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

பக்கத்திலேயே இன்னொரு ஆட்டோ வந்து நின்றது. அவரிடம் அந்தப் பெண்மணி, "அடையார் போக வேண்டும்" என்றாள். அந்த ஆட்டோ ஓட்டுனர், "100 ரூபாய் கொடுங்கள்" என்றார். உடனே அந்தப் பெண்மணி, "என்னங்க அனியாயமா இருக்கு, அந்த ஆட்டோ ஓட்டுனர் 90 ரூபாய் கேட்டார், அதுவே அதிகம்னு சொல்லிகிட்டு இருக்கேன், நீங்க 100 ரூபாய் கேக்கறீங்க" என்றாள் அந்தப் பெண்மணி!!!!

அசந்து போனேன் நான். உடனே அந்த ஆட்டோ ஓட்டுனர் "சரிம்மா 90 ரூபாயே கொடுங்கள்" என்றார்.

"சரிம்மா. உக்காருங்க. 80 ரூபாய் கொடுங்கள்" என்றார் புதிய ஆட்டோ ஓட்டுனர்.

அந்தப் பெண்மணி உடனே அந்த ஆட்டோவில்  உட்கார்ந்தாள். ஆட்டோ கிளம்பியது.

பழைய ஆட்டோ ஓட்டுனர் என்னைப் பார்த்து, "சார், நீங்க எங்கே போகணும்?" என்றார்

நான் உடனே, "ஜெர்மனிக்கு" என்றேன்.

ஆட்டோக்காரர், "சரி வாங்க, போகலாம். நான் ஒண்ணும் அநியாயமா கேக்க மாட்டேன் 200 ரூபாய் கொடுங்கள்" என்றார்.

About The Author

1 Comment

Comments are closed.