சாருலதாமணியுடன் ஓர் இன்னிசைப் பயணம்

ஜெயா தொலைக்காட்சியில் பல வாரங்கள் தொடர்ந்து ‘இசைப்பயணம்’ நிகழ்ச்சியை நடத்தி, அமோக வரவேற்பைப் பெற்ற சாருலதாமணி, உலகத்தின் பல பாகங்களுக்கும் தன் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். கர்நாடக இசையோடு மட்டுமே தன்னை இணைத்துக் கொள்ளாமல், திரையிசையிலும் தனது திறமையை வெளிக்காட்டியிருக்கிறார். யுவகலா பாரதி முதலான பல விருதுகளைப் பெற்ற இவர் சகோதரி மதுமிதாவும் சிறந்த இசைக் கலைஞர்! திரையிசையில் தனி முத்திரை பதித்தவர். இவர்கள் இருவரும் இணைந்து ராஜ் தொலைக்காட்சியில் ‘ராஜ் கஃபே’ என்று நடத்திய நிகழ்ச்சி பாராட்டுக்களைப் பெற்றது. இவர் தனது இசைப் பயணம் பற்றிப் பல சுவாரஸ்யமான செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறார். இனி சாருலதா மணியுடன்…

"உங்களுக்கு சங்கீதத்தின் மேல் ஈடுபாடு வந்ததற்குக் காரணம் என்ன? உங்கள் இசைப் பயணம் பற்றிச் சொல்லுங்களேன்?" என்று கேட்டோம்

"என் அம்மா ஹேமலதாமணி பெரிய வீணைவித்வான். சிட்டிபாபுவிடம் இசை பயின்றவர். அவர் இசைப் பயிற்சி செய்யும்போதும், கச்சேரிகளின்போதும் அவருடன் இருந்ததால் இயற்கையாகவே சங்கீதத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. மிகச் சிறிய வயதிலேயே ராகங்களை, அடதாள வர்ணங்களை அடையாளம் கண்டு சொல்வேன். என் அப்பா ஓ.எஸ்.மணி கப்பல்துறையில் முதன்மைப் பொறியாளராக இருந்ததால் பெற்றோர்களுடன் பலமுறை அயல்நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள மேற்கத்திய சங்கீதத்தையும் கேட்டு வளர்ந்தேன். கர்நாடக சங்கீதம் என்று மட்டுமல்ல, உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள இசையைக் கேட்டு ரசிக்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. அதனால், இசைச் சூழலிலேயே வளர்ந்தேன். எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்ற பெரிய பாடகர்களின் பாடலை ஒலிநாடாவில் கேட்டுப் பாடுவேன்.

முதலில் என் அம்மாவிடம்தான் சங்கீதம் பயின்றேன். பின்னர், சந்தியாவந்தனம் ஸ்ரீநிவாசராவ், கல்கத்தா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சாவித்ரி சத்யமூர்த்தி ஆகியோரிடம் முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டேன். பல்லவியில் பெயர் பெற்ற, பல்லவி வெங்கடராம ஐயரிடம் ராகம், தானம், பல்லவி பயின்றேன். இப்போது அதுபோன்ற வித்வான்கள் இல்லை! எனக்கு அவர்களிடம் பயிற்சி பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது என் பாக்கியம்! கடவுளின் அருள்!" என்றார்.

ஜெயா தொலைக்காட்சியின் இசைப் பயணம் பற்றிக் கேட்டபோது,

"கர்நாடக சங்கீதம் என்பது, ஒரு சார்பான மக்களையே போய்ச் சேர்ந்தது. திரையிசை வந்தபோது எம்.கே.தியாகராஜ பாகவதர், கே.பி.எஸ் பாடல்களை அந்தக் காலத்தில் ரிக்க்ஷா ஓட்டுபவர் கூட முணுமுணுப்பார். அத்தகைய சங்கீதம் மக்களைப் போய்ச் சேர்ந்தது. காரணம், திரையிசை கர்நாடக இசையை ஒட்டி இருந்தது. இப்போது அப்படி இல்லை. திரை கொஞ்சம் விலகிப்போய்விட்டது. இசை கேட்பவர்கள் நல்ல இசைக்காக ஏங்குகிறார்கள். கர்நாடக இசையைப் பல வித்வான்கள் நல்லவிதமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. பலபேருக்குக் குரல் வளம் சுமாராக இருக்கிறது, வார்த்தைகளை ஸ்பஷ்டமாக உச்சரிக்கமாட்டேன் என்கிறார்கள், தியாகராஜ கீர்த்தனையை அர்த்தம் புரியாமல் உளறி உளறிப் பாடினால் எப்படி மக்களால் புரிந்து கொள்ள முடியும்? இந்த நிலை, காலத்துக்கு ஏற்றாற்போல் மாறவேண்டும்! அந்தக் காலத்தில் முசிறி சுப்ரமண்ய அய்யர் ‘நகுமோமு கனலே’ பாடல் பாடுவதைக் கேட்கவேண்டும்! இந்தப் பாடல், சீதையை ராமன் பிரிந்தபோது பாடும் பாடல். அதை, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, சந்தர்ப்பத்துக்கேற்றவாறு நிறுத்திப் பாடவேண்டும். அதற்குப் பதிலாக, ஏதோ சந்தோஷப் பாடல் போல, ஆனந்தமாக, துரித கதியில் பாடுகிறார்கள்! (பாடிக்காட்டுகிறார்). இசையைச் சாதாரண மக்களுக்குக் கூட, அவர்களுக்கு அதன் பொருள் தெரியுமாறு கொண்டு சேர்க்க வேண்டும். பாடும்போது ரசிகர்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுத்தமான குரலில், தெளிவாகப் பாடவேண்டும். இந்தக் கருத்தை ஜெயா தொலைக்காட்சி நிர்வாகத்திடம் சொன்னபோது, ‘புதுமையாக இருக்கிறதே! செய்யலாம்’ என்று சொன்னார்கள். அப்படி ஆரம்பித்ததுதான் ‘இசைப் பயணம்’ என்ற நிகழ்ச்சி. ஒரு கர்நாடக ராகத்தை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு பாடல் பாடிக்காட்டிவிட்டு, அதே ராகத்தில் வந்துள்ள திரையிசை ஒன்றைப் பாடி இவை இரண்டுக்குமுள்ள ஒற்றுமையைச் சொல்வேன். அதற்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது! உலகின் பல பாகங்களிலிருந்தும் பாராட்டினார்கள். இந்த நிகழ்ச்சிதான் என்னை வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவியாக இருந்தது. பத்து டி.வி.டி-க்கள் இதுவரை வெளிவந்துவிட்டன. அதனால் இந்தச் சந்தர்ப்பத்தை அளித்த ஜெயா டி.வி-க்கு எனது முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்குப் பிறகு, மேடையிலும் இந்த இசைப் பயணம் நிகழ்ச்சி தொடர்ந்தது. பாரதிய வித்யா பவனில் இடம் எடுத்து, இலவசமாக இந்த நிகழ்ச்சியை நடத்தியபோது ரசிகர்கள் அமோகமாகப் பாராட்டினார்கள். இன்னும் வெளிநாடுகளிலும், இங்கும் பல மேடைகளில் இந்த இசைப் பயணம் பலத்த வரவேற்புடன் தொடர்கிறது. ‘ஹிந்து’ பத்திரிகையில் ‘ராகத்தின் கதை’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறேன்" என்றார்.

உங்களது திரையுலக அனுபவம் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டபோது,

"அடிப்படையாகக் கர்நாடக சங்கீதம் தெரிந்திருந்தால் திரைப்பாடல்கள் பாடுவது சுலபமாக இருக்கும். அவர்கள் சொல்வதை உடனே புரிந்து கொள்ள முடியும். என்றாலும், திரை இசை வேறு, கர்நாடக இசை வேறு. நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. எல்லா வித்வான்களாலும் சினிமாவிற்குப் பின்னணி பாட முடியாது. அதற்கென்று இயல்பான திறமையும் ஆர்வமும் இருக்க வேண்டும். ‘திரையிசைதானே’ என்று சொல்லும்படி அது அத்தனை சுலபமானதல்ல! வெறும் இசை ஞானம் மட்டும் இருந்தால் போதாது. குரல் வளம் வேண்டும்! கடவுள் கொடுத்ததுதான் குரல். அது நம்முடன் பிறந்தது. அந்தக் குரலைச் சரியாகப் பிரயோகிக்க வேண்டும். அதற்கு புத்தி, சமயோசிதம் வேண்டும். ‘எனக்குக் குரல் இருக்கு, ஞானம் இருக்கு’ என்று அங்கு போய், அந்த நிமிஷத்தில் பாட முடியவில்லையென்றால் உடனே ‘கெட் அவுட்’தான். அடுத்தபடி, வேறு ஒருவர் காத்துக் கொண்டிருப்பார். பயங்கரப் போட்டி நிறைந்த உலகம் திரையுலகம்! ஆனாலும், ஆரோக்கியமான போட்டி என்றுதான் சொல்லவேண்டும். ‘நான் அவனில்லை’ படத்தில் ‘காக்க காக்க’ (விஜய் ஆன்டனியின் இசை) பாடல்தான் என் முதல் பாடல். வேட்டைக்காரன் படத்தில் பாடிய ‘என் உச்சி மண்டைல’ என்ற பாட்டு என்னை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. வேலாயுதம் படத்தில் ‘சில்லாக்ஸ்’ பாடல் உலக அளவில் பலரும் பாராட்டும்படி அமைந்தது. அந்தப் பாடலிலேயே ஆலாபனை, ஜதி பண்ணியிருக்கிறேன்.

ஞானம் மட்டும் இருந்தால் மட்டும் போதாது! விநயமாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இப்போதெல்லாம், பாடுபவர்கள் ஒரு பாடல் பிரபலமானாலே ‘எனக்குக் கார் கொடு! அதிகப் பணம் வேண்டும்! இன்னும் வசதிகள் கொடு!’ என்று கேட்கிறார்கள். என்னைக் கேட்டால், இந்த வரிசையில் சொல்வேன் – வினயம், ஞானம், பொருள் என்று. இசைக்கு எல்லை கிடையாது. இசையைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும்! இசைக்குச் சீடனாக இருக்க வேண்டும்" என்றார்.

திரைப்படங்களுக்குப் பாடியது பற்றி மேலும் அவர் கூறியபோது,

"திரைப்படங்களுக்குப் பின்னணி பாடுவதை நான் மிகவும் அனுபவிக்கிறேன்! அதில் ஒரு சுதந்திரம் இருக்கிறது. மக்களிடம் நம்மை விரைவில் கொண்டு சேர்க்கிறது. கர்நாடக சங்கீதம் உயர்வுதான்; அதனால் சினிமா சங்கீதம் தாழ்வு என்று பொருளல்ல! அதைப் பாடிப் பார்த்தால்தான் அதிலுள்ள சங்கடங்கள் தெரியும். கர்நாடக சங்கீதம் பாடும்போது ஒரு வரி மறந்துவிட்டாலும் சிறிது நிறுத்தி, ஆலாபனை பண்ணி, ஸ்வரம் போட்டுச் சமாளித்து விடலாம். சினிமா சங்கீதத்தில் அப்படிப் பண்ண முடியாது. ஸ்ருதி சரியாக இருக்க வேண்டும்! குரலைப் பாடலுக்கேற்ற மாதிரி பாவங்களுடன் மாற்றிக் கொள்ளவேண்டும்! அண்ணா பல்கலைக்கழகத்தில் சுமார் பத்தாயிரம் மாணவர்களுக்கிடையே பாடியபோது அவர்கள் காட்டிய அன்பு என்னைப் புல்லரிக்க வைத்தது! ‘அக்கா, இந்தப் பாட்டு பாடுங்கள்! இது நன்றாக இருக்கிறது’ என்று அவர்கள் சொல்லும்போது மனதுக்குள் ஒரு சந்தோஷம்!" என்றார்.

வெளிநாட்டுப் பயணங்கள் பற்றி

நான் சின்னப் பெண்ணாக இருந்தபோது அப்பாவுடன் பல நாடுகள் சென்றிருக்கிறேன். இப்போது மலேஷியா, சிங்கப்பூர், ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா, துபாய் என்று எல்லா நாடுகளுக்கும் போயிருக்கிறேன். இந்தியா எனது தாய் வீடென்றால் அயல்நாடுகள் எனக்குப் புகுந்த வீடு மாதிரி. எல்லா இடத்திலும் தமிழ் ரசிகர்கள் வந்து மிகவும் ரசித்துக் கேட்டு உற்சாகப்படுத்துகிறார்கள். கர்நாடக இசை, சினிமா இசை எல்லாமே செய்திருக்கிறேன்.

இப்போது, இந்த இன்டெர்நெட் யுகத்தில், என்னுடைய பாடல்கள் யூ டியூபில் பதிவு செய்யப்பட்டு, உலகத்தில் பல்வேறு பாகங்களிலிருந்தும் ரசிகர்கள் கேட்டுப் பாராட்டியவண்ணம் இருக்கிறார்கள். முகநூலில் நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். விஞ்ஞான முன்னேற்றமும், இன்டெர்நெட் வளர்ச்சியும் என் சங்கீதத்தை எல்லாத் திக்குகளிலும் பரப்பியிருக்கிறது!

உங்கள் பயணத்தின் அடுத்த கட்டம் என்ன என்று கேட்டபோது,

"ராகங்களைப் பற்றிய ஆராய்ச்சி மற்றும் ராகங்களின் மருத்துவக் குணம், இதைத் தவிர, ராகங்கள் மூலம் யோகம் செய்யும் முறை. ‘நாதயோகம்’ என்ற யோகக் கலைப் பயிற்சி பற்றி ஆய்வு செய்கிறேன். நம் உடலிலுள்ள சக்கரங்களையெல்லாம் நாதம் மூலம் எழுச்சி பெறச்செய்து ஓர் உன்னத நிலையை அடைய முடியும்! யோகாவையும் மந்திரங்களையும் இணைத்தால் அதன் மூலம் மாணவர்களுக்கு நினைவாற்றலைக் கூட்ட முடியும்! நமது உடலும் உள்ளமும் வளம் பெறும்! சமஸ்கிருத ஸ்லோகங்களுக்கு இசை அமைத்து ஒரு ஆல்பம் வெளிவந்திருக்கிறது" என்றார்.

இசையைக் கேட்டு ரசிக்கத் தெரியாதவர்கள் பாதி மனிதர்கள் என்ற அவர், நெடும் தூரம் வாகனம் ஓட்டினாலும், மன அழுத்தம் ஏற்பட்டாலும் இசை மனதை லேசாக்க உதவுகிறது என்று கூறினார். "டைம்ஸ் மியூசிக்குக்காக மதுராஷ்டகம், லிங்காஷ்டகம், சுப்ரமண்ய பஞ்சரத்னம் என்று பல ஸ்தோத்திரங்களையும் மந்திரங்களையும் இணைத்து, நானே இசையமைத்து ‘ஹிரீம்காரா’ என்ற பெயரில் ஆல்பம் வெளியிட்டிருக்கிறேன்" என்றார்.

"உங்களுக்குப் பிடித்த ராகம்…?"

"சிந்து பைரவி".

"ரசித்த நிகழ்ச்சி…?"

"நிறைய இருக்கிறது! ஒருமுறை மெல்பர்னில், விநாயகர் கோவிலில் ஆறு மணிக்குக் கச்சேரி. அரங்கம் நிரம்பி வழிந்தது. கதவைத் தாளிட்டு விட்டார்கள்! மூன்று மணி நேரத்திற்கு மேல் கச்சேரி. யாரும் இருந்த இடத்தைவிட்டு அசையாமல் ரசித்துக் கேட்டார்கள். கர்நாடக, ஹிந்துஸ்தானி ரசிகர்களோடு, வெளிநாட்டவர்களும் நம் இசையை மிகவும் விரும்புகிறார்கள். பெர்த்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டவர்களும் வட இந்தியர்களும் மிகவும் ரசித்துக் கேட்டதோடு, நல்ல, பயனுள்ள, படிப்பினையூட்டும் கச்சேரி என்றார்கள். சிருங்கேரி மடத்தில் பெரியவா முன் பாடும் பாக்கியம் கிடைத்ததையும், அவர்கள் புடவை எல்லாம் வைத்துக் கொடுத்து ‘ரொம்ப நன்றாக இருந்தது’ என்று சொல்லி ஆசீர்வாதம் செய்ததையும் மறக்க முடியாது! மெய்சிலிர்க்க வைத்த சம்பவம் அது!" என்று சொல்லும் இவர், திருவாரூர் தெப்பத் திருவிழாவில் பாடியதையும் தனக்குக் கிடைத்த பெரும்பேறாக எண்ணுகிறார்.

‘மாற்றான்’ படத்தின் பாடல் வெளியீட்டிற்காகச் சிங்கப்பூர் சென்றதையும், அங்கு 20,000 ரசிகர்களுக்கு மேல் கூடியிருந்த இடத்தில் பாடியதையும் மறக்க முடியாத நிகழ்ச்சியாகக் கருதுகிறார்.

ஒருமுறை அமெரிக்காவில், பாடி மேடை விட்டு இறங்கியபோது ஒரு பெண்மணி ஓடிவந்து தன்னிடம் தங்க வளையலைக் கொடுத்ததாகவும், வேண்டாம் என்று எவ்வளவு மறுத்தாலும் விடாது கையில் கொடுத்துவிட்டார் என்றும் சொன்னவர் இன்னும் தான் அதைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகச் சொன்னார்.

"கர்நாடக இசைக்கு ரசிகர்கள் குறைந்து விட்டார்களா?" என்று கேட்டபோது,

"முன்னெல்லாம் மூன்று மணி, நான்கு மணி நேரம் பாடினாலும் உட்கார்ந்து கேட்பார்கள். இப்போது ஒன்றரை மணி நேரத்தில் ரத்தினச் சுருக்கமாகப் பாடவேண்டும்" என்றார்.

"தியாகராஜ கீர்த்தனை, சமஸ்கிருதப் பாடல்களைப் பாடும்போது அதன் அர்த்தத்தைச் சொன்னால் அனைவரும் ரசிப்பார்களே?" என்றபோது, "நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், " ‘தமிழ்நாட்டில் கச்சேரி பண்ணுகிறீர்கள், பாடுகிறது வேறு பாஷையில்! அதற்கு அர்த்தம் சொன்னால் என்ன குறைந்து போய்விடுமா? ‘நான் பாடறதைப் பாடறேன். உனக்கு ஞானம் இருந்தாப் புரிஞ்சுக்கோ!’ என்பது மாதிரி இருக்கு’ என்று. அந்தக் காலம் வேறு, இந்தக் காலம் வேறு. இப்போது பள்ளிக்கூடம், கல்லூரி, வெளிநாடு என்றிருப்பவர்களுக்கு அவ்வளவு நேரம் கிடைப்பது இல்லை. எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பாடவேண்டும்! ‘சாகித்ய பயணங்கள்’ என்று நான் தமிழில் அர்த்தம் சொல்லிப் பாடப் புது முயற்சி எடுத்திருக்கிறேன்.

"திரைப் பாடல்களில், இளையராஜா காலத்திற்கு அப்புறம் வரும் பாடல்கள் நிலைத்து நிற்பதில்லையே?" என்றபோது,

"இளையராஜா, எம்.எஸ்.வி பாடல்கள் மாதிரி வருமா? ‘முல்லை மலர்மேலே…’ என்ற தர்பாரிகானடா பாடல் இன்றைக்கும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்போதைய பாடல்கள் அதுபோல இல்லை. காலவெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விடுகின்றன" என்று ஒத்துக் கொண்டார்.

வாங்கிய விருதுகள் பற்றிக் கேட்டபோது,

"எனக்கு விருதுகளில் அவ்வளவு பெருமை இல்லை. இன்னும் ஏதாவது சாதித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்பதுதான் என் ஆசை!" என்றார். என்றாலும், அவரது மறக்கமுடியாத தருணங்கள் பற்றிச் சொல்லும்போது விருதுகளைச் சொல்லாமல் விடமுடியுமா? 2005இல் வாங்கிய யுவகலா பாரதி விருது, புல்லாங்குழல் வித்வான் என்.ரமணி சாரிடமிருந்து தம்புரா பரிசு வாங்கியது ஆகியவை பற்றிக் குறிப்பிட்டார்.

"கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்திருக்கிறீர்கள். எப்படிப் படிப்பு, பாட்டு இரண்டிலும் கவனம் செலுத்த முடிந்தது?" என்றபோது,

இரண்டிலும் மிகுந்த ஆர்வம் இருந்ததால் தடை எதுவும் இல்லை என்றவர், முதல் வகுப்பில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

"உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?" என்று கேட்டபோது,

"தியானம், சம்ஸ்கிருத ஸ்லோகங்கள், இதிகாசங்கள், பழைய விஷயங்கள், ஆன்மிகம், புத்தகங்கள் படிப்பது" என்றவர், "தியானம் எல்லாரும் கட்டாயம் செய்யவேண்டும்! தியானம் செய்யும்போது நான் எனக்குள்ளே மூழ்கிவிடுவேன். மந்திரங்களுக்கு அர்த்தங்கள் பார்ப்பேன். அர்த்தம் புரியாமல் மந்திரங்கள் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை. பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும்! வெளியூர்களுக்கு, கோவில்களுக்கு, வெளிநாடுகளுக்குக் குடும்பத்துடன் செல்வதை மிகவும் விரும்புகிறேன்!" என்றார்.

குடும்ப வாழ்க்கை பற்றிக் கேட்டோம்,

"எனக்குக் கல்யாணமாகிப் பத்து வருஷம் ஆகிறது. இரட்டைக் குழந்தைகள். மூன்றாம் வகுப்பு படிக்கிறார்கள். என் கணவர் கார்த்திக் பாலசுப்ரமணியம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும்! நான் இசைப்பணியில் இவ்வளவு தூரம் வெற்றிகரமாகப் பயணித்திருக்கிறேன் என்றால் அதற்கு அவர் முக்கிய காரணம்! அமெரிக்காவில் படித்துவிட்டு, மென்பொருள் நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் அவர்தான் என் வெற்றியின் பின்னணியில் இருக்கிறார். மிகுந்த ஞானம் உடையவர்! முகஸ்துதி செய்யமாட்டார். நன்றாக இல்லை என்றால் ‘பளிச்’சென்று சொல்லிவிடுவார். நன்றாக இருந்தாலும் பாராட்டுவார். என் இசையின் சரியான விமர்சகர்!".

கர்நாடக இசை, திரையிசை இரண்டுக்குமே அதனதன் ரசிகர்கள் எப்பொழுதும் இருக்கிறார்கள்!”

About The Author