ஆண்டவனே கண்ணுறங்கு (1)

யாராரோ யாரெவரோ
ஏதேதோ சொன்னாரோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

தேரோட்டிப் போனாலும்
தேர்மீதே போனாலும்
தெருவோரம் கிடந்தாலும்
திருவாகி நின்றாலும்

யாராரோ யாரெவரோ
ஏதேதோ சொல்வாரே
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

***

இருப்பவனோ ஒரு வீட்டில்
இல்லாதான் பல வீட்டில்
உனக்கென்று ஏன் வீடு
நீதானே பெரும் வீடு

ஆளுக்கொரு பேரு வெச்சு
ஆயிரமா வீடு கட்டி
ஆண்டவனே உனக்காக
ஆள்வெட்டிச் சாகையிலே

ஐயோன்னு அழுவாயோ
அடங்காமச் சிரிப்பாயோ
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

***

ஆண்டவனே உனக்கென்று
அறிமுகமும் ஒன்றல்ல
ஆண்டவனே உனக்கிங்கே
அடையாளம் பல கோடி

ஆண்டவனும் ஒருவனென்று
ஆளாளும் சொல்லுகிறார்
யாரென்று கேட்டாத்தான்
ஆளுக்கொண்ணு காட்டுகிறார்

யாரென்று முகங்காட்ட
நீயென்ன சின்னவனா
ஆராரோ ஆரிரரோ
ஆண்டவனே கண்ணுறங்கு

***

‘பச்சைமிளகாய் இளவரசி’ மின்னூலிலிருந்து

To buy this EBook, Please click here

About The Author

1 Comment

  1. சோமா

    ஆண்டவனும் ஒருவனென்று
    ஆளாளும் சொல்லுகிறார்
    யாரென்று கேட்டாத்தான்
    ஆளுக்கொண்ணு காட்டுகிறார்……

    அருமையான தாலாட்டு..உறங்கச்செய்யவில்லை..விழிக்கச் செய்கிறது.

Comments are closed.