ஊர் அம்மன்கள்

வீட்டிற்கு ஐந்து ரூபாய் வசூலில்
தெருவே கூடியமர்ந்து
வாடகை டிவி டெக்கில்
பாட்டன் காலம் தொட்டு
திருவிளையாடல் சரஸ்வதி சபதம்
சலியாது பார்க்கும் காளியம்மன்.

மாமன்மார் மீதும்
அத்தை பெண்டுகள் மீதும்
மஞ்சத் தண்ணீர் ஊற்றியதில்
குளிர்ந்து போகும் மாரியம்மன்.

ஊரே கூடி நின்று எழுப்பும்
குழலையில் கேளிக்கை புரிந்து
பொழுதுவிழும் அந்தியில்
எவருமறியாமல் குளத்தில்
கரைப்பதால் கண்ணீர்
கரையும் முத்தாலம்மன்.

வருடத்தின் ஒருநாள்
சேவலொன்றை காவு வாங்கி
கல்லாய் நின்று காவல்
காக்கும் மந்தையம்மன்.

கவனிப்பாரற்ற அம்மன்களின்
தற்கொலைச் சேதியும்
ஊர் திருவிழாக்கள்
கொலையுண்ட சேதியும்
அமிழ்ந்து போயின ஓர்
முதியோர் இல்லம் திறந்ததில்.

About The Author