உருளைக்கிழங்கு – பாசிப்பருப்பு சாம்பார்

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – 1 கோப்பை
உருளைக்கிழங்கு – 3
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிது
கடுகு – 1 தேக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 2
பிரியாணி இலை – 1
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

அரைப்பதற்கு:

துருவிய தேங்காய் – ½ கோப்பை
பூண்டு – 6 பற்கள்
பச்சை மிளகாய் – 3
சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பாசிப்பருப்பைக் கழுவிப் போடுங்கள். பிறகு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் குக்கரை மூடி, 3 விசில் வந்ததும் இறக்குங்கள். பின், பருப்பை மசித்துத் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தண்ணீர் ஊற்றி நன்கு மசிய அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்க வேண்டும்.

பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டுப் பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்துப் பச்சை வாசனை போக நன்கு வதக்கி விட வேண்டும்.

பச்சை வாசனை போனதும், மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை அதில் சேர்த்து, தேவையான அளவு தண்ணீரும் ஊற்றிப் பத்து நிமிடம் நன்கு கொதிக்க விடுங்கள். பின், இறக்கிக் கொத்துமல்லியைத் தூவினால், ‘உருளைக்கிழங்கு – பாசிப்பருப்பு சாம்பார்’ ரெடி!

புதுமையான இந்தச் சாம்பாரைச் சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author