பேபி கார்ன் மசாலா

தேவையான பொருட்கள்:

பேபி கார்ன் – 2 பாக்கெட்
வெங்காயம் – 3
வெங்காயத்தாள் – ½ கட்டு
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
பூண்டு – 8-10 பற்கள்
இஞ்சி-பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
மிளகுத் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தக்காளி சாஸ் – 4 மேசைக்கரண்டி
சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் – 2 மேசைக்கரண்டி
எலுமிச்சைச் சாறு – 2 தேக்கரண்டி
வினிகர் – 1 தேக்கரண்டி
சோள மாவு – 1 மேசைக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

பேபி கார்னை நான்காக அரிந்து, சிறிது உப்புடன் தண்ணீரில் போட்டு வேக வையுங்கள். பிறகு, தண்ணீரை வடிகட்டி, தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெங்காயம், வெங்காயத்தாள், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்க வேண்டும்.

பின்னர் வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு, அதோடு வெங்காயத்தாள் சேர்த்துச் சிறிது வதக்கி, பின் அதில் பூண்டு, கரம் மசாலா, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த் தூள் ஆகியவை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு, அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள், வினிகர், எலுமிச்சைச் சாறு, உப்பு எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின், அதில் வேக வைத்த பேபி கார்ன் சேர்த்துப் பிரட்டி, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.

தண்ணீரில் சோள மாவைக் கரைத்து, அதனை வாணலியில் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்துமல்லியைத் தூவினால் பேபி கார்ன் மசாலா ரெடி!!!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author