புரட்டியதும் திரட்டியதும்

விளம்பரம் – அப்போதே விளம்பினார்!

"விளம்பரங்கள் அத்தனை வருவதால் அவற்றை யாரும் படிப்பதில்லை. அதனால் கவனத்தை ஈர்ப்பதற்காக, மகத்தானசத்தியங்களும் மிகையான வார்த்தைகளும் அவற்றுக்குத் தேவையாகிவிட்டது. சில சமயம் பரிதாபமாக இருக்கிறது." இப்படிச்சொன்னவர் சாமுவேல் ஜான்சன்.சொன்ன வருஷம் 1759!

இளமை இனிதா?

நியாயம்தான். ஆனால் ஆரோக்கிய வசதிகள் பெருகப் பெருக ஆயுட்காலமும் நீடிக்கப் போகிறது. பிரச்சினைகளும் வளரப் போகின்றன. மூப்பே அடையாமல் என்றும் இளமையாக இருக்க வேண்டுமென ஒவ்வொரு மனிதனும் ஆசைப்படுகிறான். அது சரியா? காலம் சென்ற டாக்டர் டி.ஞானசம்பந்தன் ‘Future Scenarios’ எனும் தன் புத்தகத்தில் இதைப் பற்றி ஒரு தனி அத்தியாயத்தில் அலசியிருக்கிறார். மனிதன், முதுமை அடையாமல் இளமையுடனும் சக்தியுடனும் நீண்ட காலம் வாழ்வதற்கு வகை செய்யும் மாத்திரைகள் எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என்றும், அப்படி நேர்ந்தால் ஜனத்தொகை பெருகி சமுதாயம் பெரும் அபாயங்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எடுத்துக் காட்டியிருக்கிறார். இதை அடிப்படையாக வைத்து ஜான் நிதாம் என்பவர் எழுதியுள்ள ஒரு புதினத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அந்தப்புதினத்தில்அறிவியலாளர் ஒருவர், மனிதர்கள் முன்னூறு வருடம் உயிர் வாழ்வதற்கு ஒரு மருந்து கண்டுபிடித்து அதைத் தன் மகளுக்கும் மகனுக்கும் மட்டும், அவர்களுக்கே தெரியாமல் ரகசியமாகக் கொடுக்கிறார். அதன்படி மூன்று வருடத்துக்கு ஒருமுறைதான் ஒரு வயது ஏறும். ஒருநாள் அவர்களிடம் அந்த உண்மையை உடைக்கிறார். மகள் காச்சு மூச்சென்று கத்துகிறாள். "இது பயங்கரம்! என்னைச் சுற்றி எல்லாரும் ஒவ்வொருவராய்ச் செத்துக் கொண்டிருப்பார்கள்! ஒவ்வொரு சூழ்நிலையும் செத்துக் கொண்டிருக்கும்! நான் அதைப் பார்த்துக் கொண்டு தொடர்ந்து தொடர்ந்து தொடர்ந்து உயிர் வாழ்வதா? சகிக்கவில்லை! வேண்டாம்! வேண்டாம்! அந்தத் தனிமை எனக்கு நரகமாக இருக்கும். எல்லாரையும் போல நானும் மூப்பு எய்தி வயதாகி இறந்து போகவே விரும்புகிறேன்!" என்று அப்பாவிடம் சண்டை போடுகிறாள்.

‘இளமை மருந்து’ சாப்பிட்ட மகனுக்கு வேறு விதமான பிரச்சினை. அவன் மனைவி படா சண்டை போடுகிறாள். "உங்களுக்கு இளமை மருந்தைக் கொடுத்த உங்கள் அப்பா, எனக்கு ஏன் கொடுக்கவில்லை? இப்போது எனக்கு உலக நியதிப்படி இருபத்தேழு வயது! மருந்து சாப்பிட்டிருந்தால் இருபத்துநாலுதான் ஆகியிருக்கும். சொந்த மருமகளையே ஏமாற்றியிருக்கிறாரே!" என்று மாமனாரைத் திட்டுகிறாள்.

கதையின் முடிவு என்ன என்பதை டாக்டர்.ஞானசம்பந்தன் சொல்லவில்லை. அனேகமாக அந்த அறிவியலாளர் சிண்டைப் பிய்த்துக் கொண்டு உளவியல்மருத்துவமனையில் இருப்பார், அல்லது தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

– (காலம் சென்ற திரு.ரா.கி.ரங்கராஜன்அவர்களின்,’நாலு மூலை’ பகுதியிலிருந்து மிக்க நன்றியுடன்)

நோபலுக்கு என்ன சோகம்?

‘இவன் ஒரு பரிதாபத்திற்குரிய அரை மனிதன். அழுதுகொண்டு பிறந்த அன்றே டாக்டர் அவன் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்க வேண்டும். அவனுடைய சிறப்புகளாவன: நகத்தை அழுக்குச்சேராமல் எப்போதும் சுத்தமாக வைத்திருந்தவன். யாருக்கும் சுமையாக வாழ்ந்திராதவன். அவனுடைய பெரிய தவறு, குடும்பம் கிடையாது. உற்சாகம் கிடையாது. அவனுடையவாழ்வில் நடந்த முக்கிய சம்பவங்கள் எதுவும் இல்லை. அவனுடைய ஒரே வேண்டுகோள் "உயிரோடு புதைத்து விடாதீர்கள்!" படிக்கும்போதே பச்சாதாபம் ஏற்படுத்தும் இந்த வரிகளை எழுதியவர் ஆல்ஃபிரட்நோபல். வாழ்வின் இறுதிக் கட்டத்தில், இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தன்னைப் பற்றித் தன் அண்ணனுக்கு ஆல்ஃப்ரட் எழுதி அனுப்பிய குறிப்பு இது!அந்த நோபலின் பெயரில்தான் இன்று உலகம் வியந்து பாராட்டுகிற ‘நோபல் பரிசு’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.அவர் எழுதிய கவிதை ஒன்று:

‘என்னை நீ புதிர் என்கிறாய். நம் எல்லோருக்குள்ளும் விளக்க முடியாத புதிர்கள் இருக்கின்றன. அவை வலியில் ஆரம்பிக்கின்றன. சித்ரவதையில் முடிகின்றன. சில அற்பத்தேவைகள் நம்மை மண்ணோடு மண்ணாகக் கட்டிப்போடுகின்றன. சில உயர்ந்த எண்ணங்கள் நம்மை விண்ணுக்கு அழைத்துச்செல்கின்றன’. அவர் எழுதிய 319 வரிகள் கொண்ட ஒரு கவிதையின் சில வரிகள். இது, அவர் பெண் ஒருத்திக்கு எழுதிய காதல் கவிதை. அவர் எழுதியுள்ள இந்த வரிகளைக் காணும்போதே ஏதோ ஓர் ஏக்கம் இருந்ததை உணர முடிகிறது. அது காதலில் ஏற்பட்ட ஏக்கமாக இருக்குமோ என்பதுதான் சந்தேகம்!

– (திரு.மாலன் அவர்களின், ‘சொல்லாத சொல்’ எனும் நூலிலிருந்துநன்றியுடன்).

கவிதைகள்

பிள்ளையார் சுழி
ஆற்றங்கரைப்
பிள்ளையாருக்கு
கிராமத்துப்
பெண்டுகள் மீது
கோபமோ கோபம்.
என்னை
வணங்காவிட்டாலும்
பரவாயில்லை
ஒரு ஆண்பிள்ளையாய்
நடத்தக்கூடாதா?
குளித்துவிட்டு வந்து
ஈரப்புடவையை
என்பக்கம் திரும்பி நின்றா
மாற்றிக் கொள்வார்கள்.
சீச்சீ!

எச்சம்
சிலைகள்தோறும்
காக்கையின் எச்சம்.
வள்ளுவர் சொன்னது
சரி.
தக்கார் தகவிலர் என்பது
அவரவர்
எச்சத்தாற்
காணப்படும்!

– (நன்றி தினமணி – தமிழ்மணி, 12.10.2008).

About The Author