றெக்கை கட்டிப் பறக்குதய்யா..!

எரிபொருள் விலை தாறுமாறாக ஏறிக் கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் தனித்தனியே வண்டி வைத்திருந்தும், ஒரே வண்டியில் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை. இன்னும் சில வருடங்களில் பெட்ரோலே தீர்ந்துபோய்விடும் என்று சிலர் சொல்கிறார்கள். அமெரிக்கா, உலகிலுள்ள அனைத்து எரிபொருளையும் தன்னிடமே வைத்துக் கொண்டு, ஆகாச விலைக்கு மற்ற நாடுகளிடம் விற்கும் காலம் விரைவில் வந்தாலும் வரலாம். வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை வேறு காற்று மண்டலத்தை தொடர்ந்து மாசுபடுத்தி வருகிறது. ஓசோன் லேயரில் ஓட்டைகள் விழுந்துவிட்டனவாம். ஆசிட்-ரெயின் அது.. இது.. என்கிறார்கள்.

கம்ப்யூட்டரின் வரவால் பெரிய மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. அதில் மிக மிக முக்கியமானது, மனிதன் இன்னும் இன்னும் சோம்பேறியாகிக் கொண்டே போவது. ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதால், கை கால்கள் மரத்துப் போகின்றன. உடற்பயிற்சி செய்வதற்குகூட யாருக்கும் நேரமில்லை!! நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு மீண்டும் கம்ப்யூட்டர் முன் போய் அமர்ந்தால், உண்ட உணவெல்லாம் எங்கே போகும்? அதுவும் என்ன சாப்பாடு இன்றைக்கு மிகவும் பிரபலம் – பிட்சா! சில வருடங்களுக்குப் பிறகு புலம்புகிறார்கள், "நாற்பது வயசுதான் ஆகுது, அதுக்குள்ள ஹார்ட்-அட்டாக்!!" இதற்கெல்லாம் என்ன வழி?

பெங்களூரில் உள்ள ஒரு முக்கியமான ரோடு. ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியின் இயக்குனர், தாசரதி, காலை எட்டு மணிக்கு தன் அலுவலகத்திற்கு விரைகிறார். மேலே சொன்ன இரண்டு பிரச்சினைகளுக்கும் இவர் ஒரே பதில், சுலபமான பதில், வைத்திருக்கிறார். சைக்கிள்! அவரைப் பின்பற்றி மற்றவர்களும் சைக்கிளை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு நாற்பது கிலோமீட்டர் வரை சைக்கிளில் பிரயாணிக்கிறார்கள்.

தாசரதி, "கோ சைக்கிள்" என்று ஒரு அமைப்பையும் ஆரம்பித்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ளது போல, நம் ஊர்களிலும் சைக்கிள்களுக்கென்று தனி ‘லேன்’ வரும் நாள் வெகு தூரத்தில் இல்லையென்று சொல்கிறார். யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகளை முதல் இரண்டு பத்திகளிலேயே பார்த்தாகிவிட்டது. உலகம், பெட்ரோல், ஓசோனெல்லாம் கிடக்கட்டும். நம் உடலின் எலும்புகளுக்கும் தசைகளுக்கும் சைக்கிள் ஓட்டுவதால் வரும் நன்மைகள் ஏராளம். இதயத்துடிப்பை சீராக்குவதோடு மட்டுமல்லாமல், கால் தொடைகளையும், முட்டிகளையும் வலுவூட்டுகிறது.

குத்துமதிப்பாக, காயங்களால் தசைகள் ஒரு வருட ஆயுளை இழந்தால், சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இழந்த அந்த வருடத்தை மீண்டும் பெறுவதோடு மட்டுமல்லாமல், இன்னும் இருபது வருட ஆயுளை நீட்டிக்க முடியும் என்று கண்டுபிடித்திருப்பதாக விக்கிப்பீடியா சொல்கிறது. தனிப்பட்ட வகையில் நேரம் ஒதுக்காமல் நல்ல உடற்பயிற்சியைப் பெற முடிகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்த சைக்கிள் கலாசாரம் தமிழ்நாட்டிலும் வருமா? வந்தாலும், இளைஞர்கள் மத்தியில் பரவுமா?

சென்னையில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்ன்கள் இருப்பது பழைய மஹாபலிபுரம் ரோட்டில். மக்கள் வாழ்வது தி-நகரிலும் மைலாப்பூரிலும். அவர்களால் நாற்பது கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அதே சென்னையின் ஐ-ஐ-டி மாணவர்கள் சிலர் மாதம் ஒரு முறை மஹாபலிபுரம் வரை சைக்கிளில் சென்று வருகிறார்கள், பொழுதுபோக்கிற்காக. சொல்லப்போனால், ஐ-ஐ-டி கேம்பஸ் உள்ளே மாணவர்கள் சைக்கிள் மட்டுமே உபயோகப்படுத்த வேண்டுமாம். இதே மாணவர்கள் படித்து முடித்ததும் ‘ஹீரோ-ஹோண்டா’விற்கு மாறிவிடுகிறார்கள். காரணத்தை அவர்கள்தான் சொல்ல வேண்டும்!

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அவ்வளவு தூரம் சைக்கிளில் அனுப்பத் தயங்குகிறார்கள். காரணம், நம் தெருக்களில் வண்டியை ஒழுங்காய் ஓட்டுபவர் சிலரே. போக்குவரத்து விதிகளை அவமதிப்பதில் நமக்குத்தான் பெரிய பெருமை உண்டே! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்தியர் சொல்கிறார், "நம்ம ஊர்ல ஸ்டாப் சைன் கூட கிடையாது! நடக்கவே பயமா இருக்கு. எப்படி சைக்கிள் ஓட்ட முடியும்?" அவர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், அதே ரிஸ்க் ‘ஹீரோ-ஹோண்டா’விலும் உண்டுதானே!!"

வழியுண்டு என்று நிரூபித்தாகி விட்டது. மனமுண்டோ?

About The Author

1 Comment

  1. A.M.BADRI NARAYANAN

    வசதி வாய்ப்புகளே இல்லாமலிருந்து,சமிப காலமாகத்தான், மோட்டார் வண்டிகளையே பயன்படுத்த துவக்கியிருக்கிறார்கள். உடனடியாக மீண்டும் பழையப்படி சைக்கிளை மிதிக்கச் சொன்னால், யார் ஏற்றுக் கொள்வார்கள்?. மேலை நாட்டவர்கள் கண்டபடியெல்லாம் புகையை விட்டு, ஓசான் ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டு ஊருக்கு உபதேசமா?

Comments are closed.