வெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14

பதஞ்சலி முனிவரின் அருளுரை: யோகம் புரியுங்கள்!

கிருஷ்ணரின் விளக்கம்

பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் ‘யோகம்’ என்றால் என்ன என்பதை மிக எளிமையாக விளக்குகிறார் இப்படி:

"யோக: கர்மஸு கௌஸலம்"

கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில், 50ஆவது ஸ்லோகத்தில் வரும் வார்த்தைகள் இவை.

"யோகம் என்பது செயலில் நேர்த்தி" என்பதே இதன் பொருள்.

செய்கின்ற அனைத்திலும் நேர்த்தி இருந்ததென்றால் அந்தச் செயலுக்குரியவன் உண்மை யோகியாவான்.

பதஞ்சலி முனிவரின் அருளுரை

பதஞ்சலி முனிவரின் யோக சூத்ரம் அற்புதமான நூல். உலகில் இன்று அனைவராலும் கடைப்பிடிக்கப்படும் உண்மையான யோக முறைகள் அனைத்திற்கும் ஆதிகர்த்தா அவர்தான்.

அவரது முக்கியமான உரை ஒன்றைப் பார்ப்போம்:

"When you are inspired by some great purpose, some extraordinary project, all your thoughts break their bonds: Your mind transcends limitations, your consciousness expands in every direction, and you find yourself in a new, great and wonderful world. Dormant forces, faculties and talents become alive, and you discover yourself to be a greater person by far than you ever dreamed yourself to be."

"மிகப் பெரும் அரிய காரியம் ஒன்றினால் நீங்கள் உத்வேகம் ஊட்டப்படும்போது, மிகவும் அசாதாரணமான திட்டத்தில் நீங்கள் இறங்கும்போது உங்கள் எண்ணங்கள் எல்லாம் தளைகளைத் தகர்க்கும். உங்கள் மனம் குறுகிய எல்லைகளை ஊடுருவும், உங்கள் பிரக்ஞை ஒவ்வொரு திசையுமாக அனைத்துத் திசைகளிலும் விரிவுபடும். நீங்கள் உங்களை ஒரு புதிய பெரிய ஆச்சரியகரமான உலகத்தில் காண்பீர்கள். செயலற்று முடங்கி இருக்கும் சக்திகள், தனிப்பட்ட நுட்பமான வினைத்திறன்கள், திறமைகள் உயிருள்ளவையாக இயங்க ஆரம்பிக்கும். நீங்கள் உங்கள் கற்பனைக் கனவில் உங்களைக் கண்டதையெல்லாம் விட மிக பிரம்மாண்டமான அளவில் பெரிய புருஷராக உங்களைக் காண்பீர்கள்" என்கிறார்!

யோகியும் சாமான்யனும்

யோகத்தின் மஹிமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆசை மட்டும் இருந்தால் போதாது; அதை அடையப் பயிற்சியால் பெறப்படும் தகுதியும் வேண்டுமல்லவா!

யோகி ஒருவரிடம் ஒரு சாமான்யன் வந்தான். அவரிடம், "நீங்கள் பெரிய யோகி ஆயிற்றே. எனக்கு ஒரு தேவதையை அருளுங்கள்! நான் சொன்னதையெல்லாம் அது செய்ய வேண்டும்" என்றான்.

யோகி அவனது ஆசையையும் அறியாமையையும் நினைத்துச் சிரித்தார். பிறகு சொன்னார்: "சுலபமாக ஒரு தேவதையைத் தர என்னால் முடியும்; ஆனால் அதற்கு உன்னால் வேலை கொடுக்க முடியுமா என்றுதான் யோசிக்கிறேன்."

சாமான்யன்: அட, இவ்வளவுதானா! ஆயிரம் என்ன லட்சம் வேலைகள் உள்ளன. உடனே வரச் சொல்லுங்கள் தேவதையை!
யோகி: ஒரே ஒரு நிபந்தனைதான்; அதற்கு வேலை தராவிடில் அது உன்னை அடிக்க ஆரம்பிக்கும்; அடிபட்டே நீ சாக வேண்டியதிருக்கும். சரியா?

சாமான்யன்: ஹூம்! என்னைப் பற்றி உங்களுக்குச் சரியாகத் தெரியாது. வேலைகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
யோகி தேவதையை அருளினார். அது ஒரு க்ஷணத்தில் கோடிக்கணக்கான வேலைகளைச் செய்யும் அற்புத தேவதை.
சாமான்யன் வேலைகளைச் சொல்லச் சொல்ல அனைத்தையும் ஒரே நாளில் முடித்துக் கொண்டே வந்தது. சாமான்யனால் சாப்பிட முடியவில்லை; உறங்க முடியவில்லை; இயற்கைக் கடன்களைக் கூடக் கழிக்க முடியவில்லை. அவன் அலறி அழ ஆரம்பித்தான், வேலை கொடுக்க முடியாத நிலையில் தேவதை கொடுத்த அடி தாள மாட்டாமல்.

யோகியிடம் ஓடி வந்து அபயம் கேட்டான். யோகி கேட்டார்: "உன் நிலைமை புரிகிறதா, உனக்கு?"

சாமான்யன்: நன்கு புரிகிறது. தகுதி இல்லாத பேராசைக்காரன் நான். எனக்கு ஒன்றும் வேண்டாம். தேவதையைத் திருப்பிப் பெற்றுக் கொள்ளுங்கள்.

யோகி: கவலைப்படாதே! இதோ என் தலைமுடி ஒன்றைத் தருகிறேன். அது சுருண்டு இருக்கிறது. அதை நீட்டி வைத்து நட்டமாகப் பிடிக்கச் சொல்.

யோகி சொன்னபடி தேவதைக்கு வேலையைத் தந்தான் சாமான்யன். யோகியின் முடி சுருண்டு கொண்டே இருந்தது. அதை நீட்ட முடியாமல் தவித்த தேவதை அவர் அருளை வேண்டி யாசித்து அவரிடம் இருந்து விடைபெற்றது.

இப்போது சாமான்யன் முறையாக யோகம் பழகத் தொடங்கினான். யோகம் என்பது பயிற்சியினால் வரும் ஒன்று என்பதை அவன் நன்கு உணர்ந்து கொண்டான்.

தகுதி பெற்ற நிலையில் ஓடும், பொன்னும் அவனுக்கு ஒன்றாகத் தோன்றின.

முதல் படி ஓய்வு நிலையில் அமர்தல்

ஒரு நாளைக்குப் பத்து நிமிடம் சுவாசத்தை ஆழ்ந்து கவனித்து நல்ல ஓய்வு நிலையில் மனதைப் பழக்கப்படுத்த ஆரம்பித்தால் அதில் வரும் அற்புதப் பயனே தனி. பதஞ்சலி முனிவர் கூறிய யோகப் பயன் மெதுவாக வந்து சேரும்!

அமெரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒரு வார்த்தைதான் வித்தியாசம்

எதிலும் நேர்த்தி என்பதை எதையும் முறையாக ஒழுங்காக நிர்வகிப்பது என்பதில் ஆரம்பிக்கலாம்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் உள்ள ஒரு சிஷ்யருக்கு எழுதிய கடிதத்தில் வியந்து கூறுகிறார்: "இங்குள்ள இவர்களுக்கும் நமக்கும் ஒரே ஒரு வார்த்தைதான் வித்தியாயம். அது தான் ORGANIZE என்பது. எதிலும் ஓர் ஒழுங்குமுறை, நேர்த்தி இவர்களிடம் இருக்கிறது. இதை நீங்கள் கற்றுக் கொண்டால் போதும்" என்கிறார்.

அந்த வித்தியாசத்தைக் கண்டுபிடித்த அவர் சரியான ORGANISATION ஆக ராமகிருஷ்ண மடத்தைத் துவக்கி அதன் செய்முறையில் நேர்த்தியைக் காண்பித்தார். அந்த இயக்கம் செய்யும் பணிகளை இன்று உலகமே போற்றுகிறது.
உண்மைதான்; யோக: கர்மஸு கௌசலம்.

செய்முறையில் நேர்த்தி, செய்யும் வேலையில் நேர்த்தி – இதுவே வாழ்க்கையின் தாரக மந்திரமாய்க் கொள்வோருக்கு வெற்றி தானே வந்து சேரும்!

–வெல்வோம்…

About The Author