ஸ்வர்ண லோகம் (21)-டோஜெனின் அற்புதக் கோயன்கள்!

டோஜென் தொகுத்த கோயன்களின் எண்ணிக்கை 300. இவை அனைத்தும் நூல் வடிவில் இப்போது விளக்க உரையுடன் கிடைக்கின்றன. அரிய பெரிய உண்மைகளை விளக்கும் இவற்றை அனுபூதி இன்றி உணர முடியாது. என்றாலும், ஜென் தியான முறை மீது ஆர்வத்தை உருவாக்கவும் அதன் செயல்முறையைப் புரிந்து கொள்ளவும் இந்தக் கோயன்களையும் விளக்கவுரைகளையும் படித்தல் இன்றியமையாதது. டோஜென் தொகுத்த சில சுவையான கோயன்களைப் பார்க்கலாம்.

யாங்ஷனின் தர்ம நிலைகள்

யாங்ஷன் ஒரு முறை ஜென் மாஸ்டர் குய்ஷன் மௌண்ட் கை என்ற இடத்தைச் சேர்ந்த லிங்யூவைப் பார்த்துக் கேட்டார் இப்படி:

"எப்படிப் பல லட்சம் பொருட்கள் ஒரே சமயத்தில் வெளிவருகின்றன?"

குய்ஷன் பதில் சொன்னார் இப்படி:-

"நீலம் மஞ்சள் அல்ல. நீளம் குட்டை இல்லை. எல்லாப் பொருட்களும் அதன் நிலைகளில் உள்ளன. எனக்கு அதில் அக்கறை இல்லை".

யாங்ஷன் தலைகுனிந்து வணங்கினார்.

விளக்கவுரை:

ஒவ்வொன்றும், அனைத்தும் – அகநிலை உணர்வும், பார்க்கப்படும் களங்களும் – ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஆனால் அதே சமயத்தில், சுதந்திரமானவை. அதாவது, தொடர்புடையது என்றாலும் தத்தம் இடத்திலிருந்தே வேறு வேறாக வேலை செய்கின்றன. ஒரே அச்சின் இரு பக்கங்கள் போல. எதுவும் தனது பூரணத்துவத்தில் குறைவுபடுவதே இல்லை. எங்கு நின்றாலும் சரி, அது பூமியை மறைக்கத் தவறுவதில்லை.

ஒரு நல்ல துண்டை வெட்டு!

இது மிக முக்கியமான ஒரு கோயன். இதை உணர்ந்து பன்ஷனைச் சேர்ந்த பாவோஜி என்ற துறவி ஞானம் பெற்றார்.
அவர் ஒரு முறை சந்தைக்குச் சென்றிருந்தார். அங்கு ஒரு வாடிக்கையாளர் கசாப்புக்கடைக்காரன் ஒருவனிடம், "ஒரு நல்ல துண்டை எனக்கு வெட்டு" என்றார். கசாப்புக்கடைக்காரன் தனது கத்தியைக் கீழே வைத்து விட்டு, அவரை நோக்கி இரு கரத்தையும் குவித்து வணங்கி, "ஐயா! நன்றாக இல்லாமல் இருக்கும் துண்டு ஏதேனும் உண்டா?" என்றான்.
இந்த உரையாடலை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பன்ஷன் ஞானமடைந்தார்.

விளக்கவுரை:

கசாப்புக்கடைக்காரன் சிங்கம் இல்லையென்றாலும் அவன் சிங்கம் போல கர்ஜித்து விட்டான்! ‘டயமண்ட் சூத்ரா’ எனப்படும் வைர சூத்திரம், "அனைத்துமே சமமானவை; சில மட்டும் உயர்ந்ததில்லை மற்றவை தாழ்ந்ததில்லை" என்று கூறுகிறது. அப்படி இருக்க, கற்பாறைகளைக் கொண்ட மலைகள் ஏன் உயரமாக உள்ளன? கேட்ஸ்கில் மலை ஏன் தாழ்ந்து உள்ளது?

எதுவுமே அதன் பூரணத்துவத்திலிருந்து குறைவுபடுவதில்லை. எங்கு அது நின்றாலும் அது பூமியை மறைக்கத் தவறுவதில்லை. பூரணத்துவம் என்பது ஒவ்வொன்றிலும் மற்றும் எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பதால் நீங்கள் எதை வைத்து அனைத்தையும் அளக்க முடியும்? இதை உற்று நோக்கி ஆழ்ந்து சிந்தித்தால் பன்ஷன் ஏன் ஞானம் அடைந்தார் என்பது புரிய வரும்.
எல்லாமே பூரணமானவைதான். அதை உணரும் மனப்பக்குவம் வேண்டும். அதுவே ஞானம் பெற்ற உயரிய நிலை!
தூணிடம் கேள்!

ஷிடோ என்ற மாஸ்டரிடம் ஒரு துறவி கேட்டார் இப்படி:

"போதிதர்மர் இந்தியாவிலிருந்து வந்ததன் மகத்துவம் என்ன?"

ஷிடோ பதில் சொன்னார்: "தூணிடம் கேள்!"

துறவி, "எனக்குப் புரியவில்லையே" என்றார்.

ஷிடோ சொன்னார்: "எனக்கும்தான் புரியவில்லை."

விளக்கவுரை:

இந்தக் கோயன் மிக முக்கியமான ஒன்று. காலம் காலமாக ஜென் மடாலயங்களில் நூற்றுக்கணக்கான விளக்கங்கள் இதற்குத் தரப்பட்டு வருகின்றன. ஏன் போதிதர்மர் இந்தியாவிலிருந்து வந்தார்?

தூணிடம் கேள் என்பது பதில்!

டோஜென் அடிக்கடிக் கூறி இருப்பது, "உனது கேள்விகளை ஒரு தூணிடம் கேள்! சுவரிடம் உனது பயிற்சியைத் தீவிரமாக்கு" என்ற உபதேசமாகும்.

சுவர் எனும் எல்லையைத் துளைக்க வேண்டுமெனில் அனைத்துப் பொருட்களும் மனமும் ஆகிய இவை இரண்டும் ஒன்றே என்ற உயரிய நிலைக்குச் செல்ல வேண்டும். அப்போது எல்லா இரட்டைத் தன்மைகளும் ஒழிந்து அனைத்தும் ஒன்றே என்பது விளங்க வரும். அப்போது ஆத்மாவும் மற்றவையும், இருப்பதும் இல்லாததும், நல்லதும் கெட்டதும் யின் -யாங் ஆதிக்கப் பகுதியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத நிலை தோன்றும்.

ஆன்மிக சக்தியை அளந்து பார்க்கும் விதம்!

ஒரு நாள் கைஷன் என்ற ஜென் மாஸ்டர் படுத்திருந்தார். அப்போது அவரது சீடரான யாங்ஷன் ஹ்யூஜி அவரிடம் வந்தார். மாஸ்டரோ சுவரைப் பார்த்தபடித் திரும்பிக் கொண்டார்.

யாங்ஷன் சொன்னார்:- "நான் உங்கள் மாணவன். நீங்கள் வழக்கமான விதிமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை".
கைஷன் எழுந்து உட்கார்ந்தார். யாங்ஷன் திரும்பிப் போக எத்தனித்தார்.

அப்போது கைஷன் யாங்ஷனை நோக்கி, "ஹ்யூஜி" என்று அழைத்தார். யாங்ஷன் திரும்பிப் பார்த்தார்.

கைஷன் சொன்னார்: "எனது இந்த கனவைக் கேளேன்!" யாங்ஷன் தலைதாழ்த்தி வணங்கி, கேட்கத் தயாரானார்.

கைஷன் கூறினார்: "எனது கனவின் அர்த்தத்தைச் சொல் பார்ப்போம்! நீ எப்படிச் சொல்கிறாய் என்று பார்க்கிறேன்." யாங்ஷன் ஒரு தாம்பாளத்தில் தண்ணீரையும் ஒரு துண்டையும் கொண்டு வந்தார். கைஷன் தனது முகத்தை அலம்பிக் கொண்டார். பின்னர் உட்கார்ந்தார். அப்போது ஜியாங்கன் என்பவர் உள்ளே வந்தார்.

கைஷன் கூறலானார்: "நான் ஹ்யூஜியிடம் இப்போது ஒரு இரகசியமான தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அது சாதாரண விஷயம் இல்லை."

ஜியாங்கன், "நீங்கள் சொன்னதை நான் கேட்டேன்" என்றார்.

கைஷன்: "இப்போது நீ முயற்சி செய், பார்க்கலாம்!"

ஜியாங்கன் ஒரு கோப்பை டீயைத் தயார் செய்து கொண்டு வந்தார். கைஷன் பெருமூச்சு விட்டு அவர்கள் இருவரையும் புகழ்ந்து கூறினார்: "எனது மாணவர்களான நீங்கள் இரண்டு பேரும் சரிபுத்தரையும் மௌட்கல்யாயனரையும் விஞ்சி விட்டீர்கள்!"

விளக்கவுரை:

உணவைச் சமைப்பது, பாத்திரங்களைக் கழுவுவது ஆகியன நிர்வாண மனத்தின் செயல்பாடுகள். உணவைப் பத்திரமாக வைக்கும் சேமிப்பு அறையைக் கட்டுவதும் விறகைக் கட்டி வைப்பதும் உருவமற்ற உருவின் அற்புதமான போதனைகளாகும். இந்த உடலே எங்கும் நிறைந்திருக்கும் உண்மையான ‘தர்ம உடல்’ (தர்ம உரு) ஆகும்! உலகில் உள்ள ஒவ்வொருவரும் செய்யும் செயல்களாக இவை இருக்கும்போது ஏன் உலகில் துயரம், பேராசை, கோபம் அறியாமை நிலவுகிறது? ஏன் அனைவரும் ஒளியைப் பாய்ச்சி சுவர்க்கத்தையும் பூமியையும் இயக்கக் கூடாது? இந்தச் செயல்களில் ஆன்மிக சக்தியை பார்த்து, கேட்டு உணர்ந்தால் ததாகதர் (புத்தரின்) போதித்த போதனைகளை உணர்ந்தவர்களாவோம்.

கோயன்கள் புரிந்து கொள்ளக் கடினமானவை, அனுபூதியினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதற்காக 300 கோயன்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கோயன்களை விளக்க உரையோடு மேலே பார்த்தோம்.

சின்ன உண்மை

John Daido Loori என்பவர் Kanuaki Tanahashii என்பவரின் உதவியுடன் எழுதியுள்ள மாஸ்டர் டோஜெனின் 300 கோயன்கள் ‘The True Dharma Eye’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளன. இணையத்தளத்திலும் படித்து மகிழலாம்.

–மின்னும்...

About The Author