காயமே இது பொய்யடா (1)

மரணத்தின் வாய்க்குள், இன்னும் மரணம் என்னைக் கடிக்காமல் மீதமிருந்தேன். கண்ணைத் திறந்து பார்த்தபோது எங்கும் ஒரே இருள். ஒரு வினாடி எதுவும் புரியவில்லைதான். சிறிது அசைய நினைத்தால் தோள்பட்டையில் வலி துள்ளித் தெறித்தது. வெறும் புலன்களின் உலகம் அது. பனியின் வாசம் மெல்ல என் நாசியை வருடியது. கடும் குளிர் என் கம்பளி உடைகளையும் மீறி உள்ளே புக முயற்சித்தது.

நான் எங்கே இருக்கிறேன், எந்தக் கோணத்தில் கிடக்கிறேன். எதுவும் அறியாத உலகம். யூகங்களின் உலகம். நானே அழிந்து போய் அறிவு மாத்திரம் உயிர் கொண்டு கிடந்தாற் போல. ஆனால் அந்த அறிவு என் உடம்பை, அதன் இருத்தலை உணர்த்தி விட்டது. என் அவயங்களில் வலியை அது தெரிவித்தது. நான் இன்னும் மீதமிருக்கிறேன்.

நான் உயிருடன் இருக்கிறேன் . என்னை நிதானப் படுத்தி கடைசியாய் எனக்கு நினைவிருக்கிற சம்பவத்தை நினைத்துப் பார்க்கிறேன். பெருவெளியில் கடுங்குளிரில் கடும் இருளில் கேள்விகளை விட்டெறிகிறேன். இந்தக் கேள்விகள் எங்கே எப்படித் துழாவி பதில் கொண்டுவரும் தெரியாது. பதில் கிடைப்பது கூட முக்கியம் அல்ல. உண்மையில் என்ன நினைத்துக் கொண்டாலும் மனம் தன்னைப் போல பதிலைக் கொண்டு வர உள்ளே உழப்பிக் கொண்டுதான் இருக்கும்.

திடும் என்று சற்று தூரத்தில் குண்டு ஒன்று விழுகிறது . ஆ, அதுதான் விஷயம். நான் எனது மிக் விமானத்தில் பயணப்படும்போது விமானத்திலிருந்து விழுந்திருந்தேன். விறுவிறுவென்று பனி விலகினாற் போல ஞாபகங்கள் படம் படமாக விரிந்தன.

விமானம் வால் பகுதியில் தீப்பற்றி எரிந்தது . எப்படியும் முகாமுக்குத் திரும்பிவிட முடிவு செய்யுமுன், விமானம் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து நிலை குலைந்தது.

அப்புறம் என்ன நடந்தது ?

நான் கீழே விழுந்திருக்கிறேன் . எப்படியோ இன்னும் என் உடலில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. நல்ல விஷயம். நான் பிழைத்து விடுவேன், பிழைத்து விடுவேன், என்று திரும்பத் திரும்ப மனசில் சொல்லிக் கொண்டேன். அப்படியே கிடப்பது தவிர வேறு ஏதாவது என்னால் முடியுமா என்று பார்க்கலாம். நான் கிடக்கிற நிலையை அறிவது அவசியம். நினைவு…எட்டியவரை வந்து விட்டது. இப்போது நினைவுகளின் மறு எல்லை வரை போகலாம், என்றிருந்தது.

ஆமாம், நான் 4729 சிகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தேன். என் பணி அங்கே தீவிரவாதிகளின் முகாம்களை அழிப்பது. நல்லது. நானும் நான்கைந்து முகாம்களைத் தகர்த்தேன். எங்களது வரைபடக் குறியீடுகள் துல்லியமாக இருந்தன. எங்கள் அதிகாரிகள் கில்லாடிகள்தாம், என நினைத்தபடி நான் அந்த நிலைகளைக் குறி பிசகாமல் தகர்த்தேன். சிறு வெளிச்சம் தெரிந்தாலும் அவற்றை நோக்கி குண்டு மழை பொழிந்தேன்.

இடைவெளியே விடாமல் எங்களது விமான அணி உயர்ந்து எழுந்து பறந்து வளைத்து முகாம்களை மேலேயிருந்து தாக்கியது. ஒரே சத்தக்காடு. இரைச்சல். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள முடியும் என்றாலும் எல்லாரும் பரபரப்பாய் இருந்தோம். பேசிக் கொள்ள நேரமில்லை. தேவையுமில்லை. எல்லாரிடமும் இதோ திரையில் வரைபடம். மேலேயிருந்து பார்க்க…குண்டுகளை இயக்க…

சிறிது அசைய முடிகிறதா… ம் , இப்போது பரவாயில்லை. இது எங்கோ பள்ளம் மாதிரியிருக்கிறது. தற்செயலாக நான் பள்ளத்தில் விழுந்து சிக்கிக் கொண்டிருக்கிறேன் போலிருந்தது. எதுவும் அருகே வெளிச்சம் தெரிகிற வாய்ப்பு இருந்தால் நான் சூழலை அறிந்து கொள்ள முடியலாம். ஆனால் அது ஆபத்தானதும் கூட. எதிரியின் கண்ணில் நாம் பட்டுவிடும் ஆபத்தும் அதில் இருந்தது.

புலன்களை அறிவின் ஆளுகைக்குள் கொண்டுவர முடிகிறதா பார்க்கலாம். சிறிதே உடலை அசைத்தேன். அதுகூட ஆபத்துதான். எங்காவது நான் சிக்கிக் கொண்டிருப்பேன். உச்சியில் தொங்கிக் கொண்டிருப்பேன். அந்தச் சிறு பிடிப்பை நீக்கி விட்டால் அத்தோடு அதல பாதாளத்தில் விழ நேரலாம். அத்தோடு முற்றும்.என் கதை முடிய நேரும். விரல்களை இயக்கிப் பார்க்கலாம். கண்ணை விரியத் திறந்து மூட…முடிகிறது.

எதுவும் கண்ணுக்குப் புலப்படவில்லை என்றாலும் நான் எதுவும் தெரிகிறதா என்று பார்க்கப் பிடிவாதமாய் முயன்றேன். காந்தாரி நிலையில் நான் இருந்தேன். கண்ணைத் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும் அப்போது பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. எதுவும் சத்தம் கொடுக்க முடியுமா என்று கூட முயற்சி செய்யலாம். எதற்கும் அவசரப்பட முடியாது. இந்த இடம் எனக்குப் பழக வேண்டும். இது எதிரியின் இடமா, நமது பகுதியா…நாம் இந்தச் சிகரத்தைக் கைப்பற்றி விட்டோமா என்பதெல்லாம் தெரிய வேண்டும்.

எனினும் பயப்பட ஏதுமில்லை. எந்த வெளிச்சமும் உண்மையில் இருளைக் கொண்டேயிருக்கிறது. அதே போல எந்த இருளும் உண்மையில் சிறு வெளிச்சத்தை உள்ளடக்கியே இருக்கிறது – வான்கோ. அந்தக் கசிவு கண்ணுக்குப் பழக வேண்டும். அதற்கு, சிறிது காத்திருக்க வேண்டும். கண்ணை மூடிக் கொண்டேன். மேலும் நினைக்க எதுவும் விஷயங்களை எடுத்துக் கொள்ளலாம்.

நான் பிழைத்து விட்டேன். அந்த நிமிடத்தில், விமானம் தீப்பிடித்தது – பாறையில் மோதியது எல்லாம் யூகங்கள். அப்படியாக அன்றி வேறெப்படியும் நான் இங்கே இப்படி விழுந்து கிடக்க வாய்ப்பில்லை – என்பதே தர்க்க அடிப்படை. ஆனால் அந்த நிமிடத்தில் என்ன நிகழ்ந்தது என்பது ஞாபகத்தில் இல்லை. அதைப்பற்றி என்ன? இப்போது எனக்கு இத்தனை சுருக்கமாக ஞாபகசக்தி – முழு நிதானம் என்கிற அளவில் வசத்துக்கு வந்ததே நல்ல விஷயம்.

கடும் பனி மழைபோலப் பெய்கிறது. இந்தத் தனிமையும், இந்தப் பனியும் எனக்கு மற்றொரு சந்தர்ப்பமாய் இருந்தால் ரொம்பப் பிடிக்கும். இப்பவும் என்ன? நான் மாட்டிக் கொண்டு விட்டதாகவும், எதிரிகளின் முகாமில் எந்நிமிடமும் ஆபத்தில் இருப்பதாகவும் என் பதட்டப்பட வேண்டும்? மேலே பறந்தபடி கீழே நோட்டம் விட்டபடி என் சகாக்கள் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்களோ என்னமோ? என் காதில் சத்தம் எதுவும் விழவில்லை. ஒரு வேளை அவர்கள் நடமாட்டத்தை முடித்துக் கொண்டு திரும்பிப் போயிருக்கலாம். இப்போது தரைப்படையின் முறை. அவர்கள் சிகரம் நோக்கி மேலேறிக் கொண்டிருக்கலாம்.

காப்பாற்றப்படவா, சாவுக்கா… நான் எதற்குக் காத்திருக்கிறேன்? அது யார் என்னை முதலில் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. எதிரிகள் கையில் கிடைத்தால் நான் ஒருவேளை செத்துப் போகலாம். அல்லது அவர்கள் என்னைப் பிடித்துப் போய்த் துன்புறுத்தி என்னிடமிருந்து ராணுவ ரகசியங்களைச் சேகரிக்க முயலலாம்.

இந்தியர்கள் பார்வையில் பட்டு பத்திரமாய் நான் வீடு திரும்பவும் கூடும். இரவு கிளம்புமுன் டீ அருந்திவிட்டுக் கிளம்பினேன். அந்த நர்ஸ் சந்திரலேகா… வெள்ளைச் சீருடையில், எத்தனை சிவப்பாய் அழகாய்… அழகோ அழகாய் இருந்தாள். இரவு எட்டு மணிக்குப் பூத்த பூ. இரவுப் பணியில் இருந்தாள். டீ சாப்பிட எங்களுடன் அவள் சேர்ந்து கொண்டாள்.

நாங்கள் விமானமேறுமுன் ரத்த அழுத்தம் பார்த்துக்கொண்டோம். அவள் என்னை பார்த்து புன்னகைத்து, "நல்வாழ்த்துக்கள். வெற்றியைக் கொண்டு வாருங்கள்" என்றாள். "நிச்சயமாய்" என்றேன். எனக்கே பிரத்யேகமாய் அவள் சொன்னாற்போல் இருந்தது. ஆனால் எல்லா விமானிக்கும் இதே புன்னகையையும் இதே வாழ்த்தையும் தருவாள், என்று பிறகு நினைத்துக் கொண்டேன்.

நான் திரும்பி வரவில்லை, என்பது இந்நேரம் முகாமில் தெரிந்திருக்கும். பரபரத்திருப்பார்கள். என்னுடன் யார் வந்தது? ஆ – ராகுல், அல்லவா? அவனிடம் எல்லாரும் விசாரித்திருப்பார்கள்… நான் திரும்பவும் கண்ணைத் திறந்து பார்த்தேன். இருள் இப்போது பழகி விட்டதா என்று பார்த்தேன். இந்த உறைபனியில், அருகே மிக அருகே கிடந்த உறைபனியின் பளபளப்பு தெரிகிறதா என்று பார்த்தேன். பல வினோத கடலடி மிருகங்களின் உருவங்கள், உருவ விளிம்புகளில் மினுமினுப்பாய் தெரியும்!

இப்படி மல்லாக்கப் படுத்தபடி வானத்தை வெறித்து மேகங்களில் கற்பனைக்குத் தக்க மிருகங்களை, உருவங்களைப் பார்ப்பது அருமையான பொழுதுபோக்கு. அந்த உருவங்கள் என்னவோ பேசிக்கொள்வதாகவும், அவை என்ன பேசிக் கொள்கின்றன என்று யூகிக்கவும் நான் முயல்வேன். மெழுகுபோல் பனியின் பளபளப்பு தெரிகிறதா? கண்ணை இடுக்கிப் பார்த்தேன். நான் எங்கே கிடக்கிறேன். இப்போது நான் சிறிது அசைந்தால் பரவாயில்லையா, என்றறிய விரும்பினேன். அதைப் பொறுத்தே அடுத்த சிறு அசைவுக்கு முயல முடியும் என்றிருந்தது.

அசையாதவரை வலி இல்லை. காயம் இல்லை போலவே தோன்றியது. காயமே இது பொய்யடா, என்று நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நான் கலவரப்பட்டு விடக்கூடாது. ஒருவேளை அடுத்தகட்டம் இதைவிடத் துன்பம் நிறைந்ததாய் இருக்கலாம். துன்பம் நேர்கையில் யாழெடுத்து எமக்கு இன்பம் சேர்க்க யாரும் இங்கே இல்லாது போகலாம். ஆனால் அது அடுத்த கட்டம். இந்த இக்கட்டு பற்றி இக்கட்டத்தில் ஏன் எனக்குள் கட்டம் கட்டிக் கொண்டு நான் அவதிப்பட வேண்டும். மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கொலை ஊன்றி நான் மிதந்து திரிவேன். சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் அளவுதானே?

கமலா…என் மனைவி. எப்போதும் சிரித்த முகம். மனசில் அவளுக்கு ஆயிரம் புயல் அடித்தாலும் வெளியே சிறு புன்னகையுடன் அவள் வளைய வருவாள். பெண்கள் சுமைதாங்கிகள்தான். தியாகப் பிரும்மங்கள். ஆண்கள் வெறும் அப்பளம் மாதிரி. பட்டென்று உடைந்து சிதறி விடுகிறார்கள். அதற்கு வெளிப்படையானவர்கள், தைரியசாலிகள் என்று தாங்களே பட்டம் சூட்டிக் கொள்கிறார்கள்.

வந்து விடுவேன் கமலா. இது நமது மண். இந்த 4729 நமது மண். நான் என் அம்மாவின் மடியில் படுத்திருக்கிறேன். இந்தப் பள்ளம் என் அன்னையின் கர்ப்பப்பை போலவே இருக்கிறது.

இந்த 4729 என் அன்னை. என் அம்மாதான் மலையென மல்லாக்கப் படுத்திருக்கிறாள். அந்த மலைமுகிடு அது என் அம்மாவின் மார்பகங்கள். அதன் மலைமுகட்டுப் பனி…அது அம்மாவின் தாய்ப்பால் அல்லவா? எங்களைக் கொஞ்சும் ஆவேசத்தில் அம்மா மார்பொங்கப் படுத்திருந்தாள். வலிமை தருவது தாய்முலைப் பாலடா – வெல் செட் பாரதி!

நான் ஓய்வாக மனநிறைவுடன் இருக்கிறேன். கமலா, உனக்கு என்மீது பொறாமையாய் இருக்கிறது, அல்லவா? வந்து விடுவேன் கமலா. நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும். மேலே தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்கள் ஆத்திரக்காரர்கள் நாம் அமைதியானவர்கள். அமைதி விரும்பிகள், நம்மை அவர்கள் வெல்லவே முடியாது. இதோ இன்றிரவு 4729 மீட்கப்பட்டு விடும். என்னை என் சகாக்கள் கண்டுபிடித்து விடுவார்கள். என்னைக் குணப்படுத்தி உன்னிடம் அவர்கள் பத்திரமாய்ச் சேர்த்து விடுவார்கள்.

காயத்தில் ரத்தம் உறைந்து விட்டது. இனி அசையாத வரை ஒன்றும் நேராது என்றுதான் தோன்றுகிறது. காயம் உள்ளூர இறங்கி வலியை சதைக்குள், நரம்புகளுக்குள் செலுத்தும் போதுதான், கதை வேறு மாதிரி இருக்கும். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதற்கு முன் நான் மீட்கப்பட்டு விடுவேன் கமலா. ராத்திரி படுக்குமுன் ஃபிரிட்ஜில் காய்கறி நறுக்கி வைத்து விட்டு, விளக்கெல்லாம் அணைத்திருக்கிறதா என்று பார்த்து விட்டு, பின்கட்டுக் கதவு சார்த்தியிருக்கிறதா, பால் உரையூற்றியிருக்கிறதா…எல்லாம் சரிபார்த்து விட்டு என் அருகே வருவாள். வியர்த்துக் களைத்து வருவாள். எத்தனை அழகாய் இருப்பாள் அப்போது. நான் தூங்கிக் கொண்டிருந்தாலும் எனக்கு ஒரு முத்தம், கிரிஷூக்கு ஒரு முத்தம் தந்துவிட்டு அப்படியே முதுகுவலி அடங்க மல்லாக்கப் படுத்துக் கொள்வாள்.

என்னால் மல்லாக்கப் படுக்க முடிகிறதா இப்போது ? அது சற்று அகலமான பள்ளம்தான். கண் இந்த ஒளிக்கசிவுக்குப் பழகி விட்டது. நான் மேலே எங்கேயோ விழுந்து சரிந்து தண்ணீர் போல இறங்கியிருக்கிறேன். ஊசிகளாய் பிசிறு பிசிறாய் பனி தொங்கிக் கொண்டிருக்கும் சரிவில் எதிர்வாட்டத்தில் ஏறும்போது பனிச்சில்லுகள் கண்ணாடி போலக் குத்தும். நமது ஜவான்கள்எப்படிச் சமாளிக்கிறார்களோ பாவம்… இறங்கும் வசம் தோதானது. சர்ரென்று சறுக்கு மரம் போல இருக்கும். அவ்வளவுதானே…? என் பாடு தேவலைதான். அதெல்லாம் பிழைத்துக் கொள்வேன் கமலா.

மெல்ல மிக மெல்ல மல்லாக்கப் படுத்துக் கொண்டபோது ஏதோ பாம்பு மேல் புரண்டாற் போல உள்ளேயிருந்து வலி சீறி சினந்தெழுந்தது. உயர்ந்து மூளையில் ஓர் ஆவேசக் கொத்து கொத்தியது. என் கண்ணில் கண்ணீர் கொட்டி உடம்பே ஆட்டங் கொடுத்தது. அந்த வலி அலையில், ஹாவெனத் திக்குமுக்காடிப் போனேன். அவ்வளவுதான். விட்டுவிட்டேன்… என்று உடம்புக்கு சமாதானம் சொன்னேன். இனி அசைவில்லை.

என் முதுகு தரையைத் தொடுகிறது இப்போது. நல்ல விஷயம். என்னால் ஓரளவு இயங்க முடிகிறது. பிடி எதுவும் கிடைத்தால் எழுந்து கொள்ளக் கூட நான் முயற்சி செய்யலாம். இந்தப் பள்ளத்தை விட்டு நான் எழுந்து வர முடிந்தால் நல்லது. என்னைக் காப்பாற்றியதே இந்தப் பள்ளம்தான். இல்லாவிட்டால் இன்னும் எத்தனை தூரம் இப்படியே சரிந்து உருண்டு நான் இறங்கியிருப்பேனோ? பிழைத்திருப்பேனோ மாட்டேனோ…

அப்போதுதான் என்னருகே சத்தம் கேட்டது. மிக அருகே என்னவோ சத்தம்.

(மீதி அடுத்த இதழில்)

About The Author

1 Comment

  1. Ravichandran

    நல்ல கதையோடம். ஒரு சிப்பாய் இரவில் அதுவும் இருட்டில் விழுந்தால் என்ன யோசிப்பன் என்பதை தத்ருபமாக அழகாக வினித்த விதம் அருமை.

Comments are closed.