ஞாயிறு முதல் சனி வரை (1)

ஞாயிறு

ஞாயிற்றுக்கிழமை மாலை மணி ஆறு.

கன்னியாகுமரி கடற்கரையில் தனியாக உட்கார்ந்திருந்தாள் சுவேதா. காரணம் அவள் காதலன் ரவி இன்னும் வரவில்லை. 4 மணிக்கு வருவதாய் சொன்னவன் 6 மணியாகியும் காணவில்லை. மனது பதைபதைத்தது.

7 மணிக்கு, இனிமேல் இங்கிருப்பது வீண் என்று எண்ணி புறப்பட்டாள். வழியில் அவள் சென்று கொண்டிருந்த ஆட்டோ சட்டென்று நின்றது. முன்னாள் சிறிய கூட்டம். எட்டிப் பார்த்தவளுக்கு பகீரென்றது. டி.வி.எஸ் விக்டர் வண்டி ரத்தக்கறையுடன் குப்புறக் கிடந்தது.

‘இது ரவியின் வண்டியல்லவா?! அப்படி என்றால் ரவிக்கு….?’ மனம் பதறியது.

தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆளைக் கொண்டு சென்றிருக்கும் செய்தி கேட்டு அங்கு விரைந்தாள். ‘டாக்டர் ரவி’ என்ற பெயர்ப் பலகை மாட்டியிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே, ரவி ஏதோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த மகிழ்ச்சியில் "பைக்… அங்கே…?" என்று பிதற்றினாள்.

ரவிக்கு ஓரளவு புரியவே, "அதுவா? என் பைக்கை கணேஷ் வாங்கிட்டுப் போய் ஆக்ஸிடெண்ட் பண்ணிட்டான். எலும்பு முறிவு ஆயிடுச்சு. நான்தான் சிகிச்சை பண்ணினேன்" என்று முடித்தான்.

அப்பாடா! என்று சுவேதா பெருமூச்சொன்று விட்டாள்.

இதைக் கவனித்த ரவி, "என்ன சுவேதா? கணேஷ் உனக்கும்தானே நண்பன். நீ வருத்தப்படலியே!" என்றான்.

"வருத்தம்தான்..! அது..!" என்று மென்று விழுங்கினாள்.

மனதினுள் ‘எவனுக்கு என்ன ஆனால் என்ன? நீ நல்லாயிருக்கே!. அது போதும்’ என்று நினைத்துக்கொண்டாள். இதற்குப் பெயர்தான் காதலோ??

(தொடரும்)

About The Author