தருணம்

வாழ்க்கையில் சில நாட்கள், சில பொழுதுகள், சில மணிகள், சில விநாடிகள் கூட – முகூர்த்த வேளைகளாக மீதி வாழ்க்கை முழுவதிலுமாய் நினைவுகூர்கிற அளவில் அழுத்தமான பதிவுகளாக, தழும்புகளாகவோ அல்லது நல்வாசனைகளுடனோ நிலைத்து விடுகின்றன. துரும்படியில் பானை படுத்திருந்து திடீரென்று எழுந்து வந்தாப்போல அந்தக் கணங்கள், வாழ்க்கையின் திசையைத் திருப்பி விடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு. மக்த்தான அந்தத் தருணங்களை, நித்தியத்துவம் பெற்றுவிடுகிற அந்த நிகழ்வுகளைக் கண்டுகொண்ட, உள் தரிசனப்பட்ட படைப்புகள் வாசிக்க அற்புதமான தனித்தன்மையான அனுபவங்கள்தான். அத்தகைய காத்திரம் மிக்க படைப்பாளிகள் மாத்திரம் அல்ல, அதை வாசிக்க வாய்க்கிற வாசகர்களும் அதிர்ஷ்டசாலிகள்தான்.

தொகுப்பு – எஸ்.சங்கரநாராயணன்

தருணம் 1 : மனித யந்திரம்

எழுதியவர் : புதுமைப்பித்தன்

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஒரு ஸ்டோர் குமாஸ்தா. அவர் உப்புப் புளி பற்று-வரவு கணக்கின் மூலமாகவும் படிக்கல்லின் மூலமாகவும் மனித வர்க்கத்தின் சோக நாடகங்களையும் மனித சித்தத்தின் விசித்திர ஓட்டங்களையும் அளந்தவர்.

அவருக்குச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாக அதே பாதை, அதே வீடு, அதே பலசரக்குக் கடையின் கமறல்தான் விதி. அதுவும் அந்தக் காலத்தில் அடக்கமான வெறும் மூலைத்தெரு ராமு கடையாகத்தான் இருந்தது. கடையும் பிள்ளையவர்களுடன் வளர்ந்தது. ஆனால் அதில் சுவாரஸ்யமென்னவெனில் வெறும் ‘மீனாச்சி’ ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையாகப் பரிணமித்தாலும் அவருக்கு அந்தப் பழையதுதான், அந்தக் காவியேறிய கம்பிக்கரை வேஷ்டிதான். கடைக்கு முன்னால் இருந்த காறையும் கூரையும் போய் ‘ரீ-இன்போர்ஸ்ட் காங்க்ரீட், எலெக்ட்ரிக் லைட், கௌண்டர்’ முதலிய அந்தஸ்துகள் எல்லாம் வந்துவிட்டன. கடையும் பிள்ளையும் ஒன்றாக வளர்ந்தார்கள்; ஆனால் ஒட்டி வளரவில்லை. கடையில் வரவு செலவு வளர்ந்தது; பிள்ளையவர்களுக்குக் கவலையும் வளர்ந்தது.

ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்று வரவு கணக்குகளில் உள்ள சிக்கல்களையெல்லாம் அற்புதமாகத் தீர்த்து வைப்பார். அந்தக் காலத்தில் புன்னை எண்ணெய்க் குத்துவிளக்கடியில் இரவு பன்னிரண்டு மணிவரை மல்லாடுவார். இப்பொழுதும் அந்த மல்லாட்டத்திற்கெல்லாம் குறைச்சல் இல்லை; ஆனால் இப்பொழுது மின்சார விளக்கும் விசிறியும் உடன் விழித்திருக்கும். அவரது சம்பளமும் ஆமை வேகத்தில் ‘ஓடி’ மாதத்துக்கு ரூ.20 என்ற எல்லையை எட்டிவிட்டது. பற்று வரவு கணக்கு நிபுணர் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் திறமையெல்லாம் அந்த ஸ்டோர் கடையுடன் தான். வீட்டு வரவு செலவு கணக்கு மட்டும் அவருடைய இந்திர ஜால வித்தைகளுக்கெல்லாம் மீறி, உலகளந்த பெருமாளாக, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகப் பரந்து கிடக்கிறது; பரந்து கொண்டு வருகிறது.
காலை ஐந்து மணிக்கு ஈர ஆற்று மணல் ஒட்டிய அவர் பாதங்கள், வெகு வேகமாக ஆற்றில் இறங்கும் சந்திலிருந்து ராஜபாட்டையில் திரும்பி, மறுபடியும் ஒற்றைத் தெரு என்ற சந்தில் நுழைவதைக் காணலாம்.

மழையானாலும் பனியானாலும் ஈர வேஷ்டியைச் சற்று உயர்த்திய கைகளால் பின்புறம் பறக்கவிட்டுக் கொண்டு, உலர்ந்தும் உலராத நெற்றியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் விபூதி, குங்குமம், சந்தனம் விகசிக்க அவர் செல்லும் காட்சியைச் சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கண்டவர்களுக்கு அவர் பக்தியைப் பற்றி அவ்வளவாகக் கவலை ஏற்படாவிட்டாலும், நன்றாக முடுக்கிவிடப்பட்ட பழுது படாத யந்திரம் ஒன்று நினைவிற்கு வரும்.

ஆறு மணியாகிவிட்டால் நேற்றுத் துவைத்து உலர்த்திய வேஷ்டியும் துண்டுமாக, ஈரத் தலையைச் சிக்கெடுத்த வண்ணம் ஸ்டோர் கடையை நோக்கி நடப்பார். மறுபடியும் அவர் இரவு பத்து அல்லது பன்னிரண்டு மணிக்கு கடையைப் பூட்டிக் கொண்டு திரும்புவதைப் பார்க்கலாம்.

‘மீனாட்சி’, கணக்குப்பிள்ளை அந்தஸ்தை எட்டுவதற்கு முன்பே நாலைந்து குழந்தை – மீனாட்சிகள் தெருவில் புழுதி ரக ஆராய்ச்சியில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது.

பிள்ளையவர்கள் பொறுமைசாலி – ஆதிசேஷன் ஒரு பூமியின் பாரத்தைத்தான் தாங்குகிறானாம் – ஆனால் பொறுப்பு, ஏமாற்று, சுயமரியாதை, நம்பிக்கை என்ற நியதியற்றுச் சுழலும் ஒரு பெரிய கிரக மண்டலத்தையே தூக்கிச் சுமக்கிறார் அவர். ஏறு நெற்றி, வழுக்கைத் தலை, கூன் முதுகு, பெட்டியடியில் உட்கார்ந்து உட்கார்ந்து குடமான வயிறு – இவைதான் இச்சுமைதாங்கி உத்தியோகத்தால் ஏற்பட்ட பலன்கள்.

பிள்ளையவர்கள் மிகவும் சாது; அதாவது படாடோபம், மிடுக்கு, செல்வம், அகம்பாவம் முதலியவற்றின் உதைகளையும் குத்துகளையும் ஏற்று ஏற்று மனமும் செயலும் எதிர்க்கும் சக்தியையும் தன்னம்பிக்கையையும் அறவே இழந்துவிட்டன. தாம் கீழ்ப்பட்டவர், விநயமாக இருக்க வேண்டும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ள உண்மை, நாணயம் முதலிய பழக்கங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்று உறுதிப்பட்டவர். ஆனால் அவர் உள்ளத்தில், அந்தப் பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடக்கும் உள்ளத்தில், அல்லாவுத்தீன் ஜீனியைப் போல் ஆசை பூதாகாரமாய் விரிந்து, அவரது சித்தப் பிரபஞ்சத்தையே கவித்து ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகச் செயல் திறமையிழந்தவன் செய்வது போல் ஆசைப் பேய்க்குப் பூசையும் பலியும் கொடுத்து மகா யக்ஞம் செய்ய எந்தப் பக்தனாலும் முடியாது.

இந்த மனம் இருக்கிறதே, அப்பா! ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கும் அது உண்டு. நீறு பூத்த நெருப்பை வேதாந்திகள் பெரிய விஷயங்களுக்கு உபமானம் சொல்லுவார்கள். ஆசையைப் பொறுத்தவரை அந்த உபமானத்தால் பிள்ளை பெரிய மனுஷர்தான். ‘மீனாச்சியா! அந்த அப்பாவிப் பயல்!’ என்று பலர் துச்சமாகக் கருதுவார்கள். முகத்திற்கெதிரேயும் சொல்லுவார்கள். அப்படிப்பட்ட ‘அப்பாவி’ப் பிராணியின் மனத்தில் புகைந்து கவிகிறது ஆசை. வீட்டில் குழந்தைக்குப் பால் தட்டாமலிருக்க – ஏன், பால் விற்று நாலு காசும் சம்பாதிக்க – மாடும் கன்றும் வாங்க வேண்டும்! தெற்குத் தெரு மாவன்னாவுக்கு ‘மேடோவர்’ செய்த நிலத்தைத் திருப்ப வேண்டும். இது மட்டுமா? கால் மேல் கால் போட்டு, ‘ஏ மீனாட்சி!’ என்று தாம் அழைக்கப்படுவது போல், தம் இஷ்டப்படி ஆட ஒரு மீனாட்சியும் ஸ்டோர் கடையும் கைக்குள் வரவேண்டும். ஒரு முறை கொழும்புக்குப் போய்விட்டுத் தங்க அரைஞாண், கடிகாரச் சங்கிலி, வாட்ட சாட்டமான உடம்பு, கையில் நல்ல ரொக்கம், கொழும்புப் பிள்ளை என்ற பட்டம் முதலிய சகல வைபவங்களுடனும் திரும்ப வேண்டும். தெருவில் எதிரே வருகிறவர் எல்லாரும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, பல்லை இளித்த வண்ணம் ‘அண்ணாச்சி சௌக்கியமா?’ என்று கேட்க வேண்டும்! ஊரில் நடைபெறும் கலியாணமும் சம்பவிக்கும் இழவும் இவர் வருகையை எதிர்பார்த்துத்தான் தம் பாதையில் செல்ல வேண்டும்…!
இன்னும் எத்தனையோ எண்ணங்கள்! தினசரி பணப்புழக்கம் எல்லாம் அவர் கையில் தான். கடைசியாய், தனியாகக் கடையைப் பூட்டிச் சாவியை எடுத்துக் கொண்டு போகிறவரும் அவர்தான். அதே சமயத்தில்தான் கடைக்குக் கூப்பிடுகிற தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ஐந்து நிமிஷம் நின்றுவிட்டுத் தூத்துக்குடி ஷட்டில் வண்டி புறப்படுகிறது. டிக்கட் வாங்கிக் கொண்டு ராத்திரியோடு ராத்திரியாகக் கம்பி நீட்டிவிடலாம். டிக்கட்டுக்கு மட்டிலும் பணம் எடுக்கத் தினசரி கடையில் பணம் புரளும். ஆனால், அந்தப் போலீஸ்காரப் பயல் இருக்கிறானே! நினைக்கும்பொழுதே பிள்ளையவர்களுக்கு அவன் கை தோளில் விழுவது போலப் பயம் தட்டிவிடும். திடுக்கிட்டுத் திரும்பிக் கூடப் பார்த்துவிடுவார்.

சிலர் நேரத்தைத் தெரிந்து கொள்ளக் கைக்கடிகாரம் கட்டிக் கொள்ளுவார்கள். வேறு சிலர் நிழலின் குறியை உபயோகப்படுத்திக் கொள்ளுவார்கள். கடிகாரத்தின் மெயின் ஸ்பிரிங் ஒடிவதற்கு ஹேது உண்டு. சூரியனை மேகம் மறைத்தால் நிழலின் குறியெல்லாம் அந்தரடித்துக்கொண்டு போக வேண்டியதுதான். அதனால்தானோ என்னவோ, சென்ற நாற்பத்தைந்து வருஷங்களாகக் கொக்கிரகுளத்திலுள்ள பலருக்கும் ஸ்ரீமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சாவி கொடுக்காத கடிகாரமாய், மேகத்தால் மறையாத சூரியனாய், என்றும் பழுதுபடாத நித்திய வஸ்துவாய் இருந்து வருகிறார்.

பிள்ளைக்கு எதிலும் நிதானம். இயற்கையின் நியதியைப் போல் இருக்கும் அவர் நடவடிக்கையெல்லாம் – நேற்று இருந்த மாதிரித்தான் இன்றும், நாளையும், இனியும். ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். கொக்கிரகுளத்தில் உள்ள மிகவும் முதிர்ந்த கிழவருக்கும், அவர் தம் சன்னக் கம்பிக் கறுப்புக் கரை நாட்டு வேஷ்டியுடன் தான் காட்சியளித்து வருகிறார். இந்த ஒழுங்கிலிருந்து அவர் விலகியதும் கிடையாது; விலக முயன்றதும் விரும்பியதும் கிடையாது.

ஸ்ரீ பிள்ளையவர்களின் முகம் தேஜஸ் கீஜஸ் என்ற தொந்தரவெல்லாம் பெறாவிட்டாலும் அவர் ஒரு சித்தாந்தி. பற்றுவரவு கணக்கு அவருக்கு வாழ்க்கையின் இரகசியங்களை எடுத்துக் காண்பித்து, புகையூடு தெரியும் விளக்கைப் போன்ற ஒரு மங்கிய சித்தாந்தத்தை உபதேசித்தது.

******

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

About The Author