உறுதுணை தேடுமின்(19)

"சரவணப்ரியாங்களா?"
  
"ஆமாம்."

"தணிகாசலம் கூப்பிடறேன். காலைலே குமாரிக்கு பெண் குழந்தை பொறந்ததுங்க. முதல்லே உங்க பேரை வைக்கணும்னு அவளுக்கு ரொம்ப ஆசை. நீங்க சம்மதிப்பீங்களோ மாட்டீங்களோன்னு உங்கபேர்லே இருக்கிற எழுத்துகளை மாத்திவச்சு சவிதா ராணின்னு பேர் கண்டுபிடிச்சோம். உங்களைத்தான் முதல்ல கூப்பிட்டு சொல்லணும்னு குமாரி சொல்லிச்சு. ரெண்டு பேரும் சௌக்கியமா இருக்காங்க."

கண்ணீரைத் தடுத்துக்கொண்டு சரவணப்ரியா, "இங்கிருந்தே ஆசீர்வாதம் செஞ்சுடறேன், மாமா!" என்றாள்.
  
"மத்தபடிக்கி?"

"எல்லாம் நல்லாத்தாங்க போவுது."

"ராலேலேர்ந்து டிவோர்ஸ் காகிதம் வந்தது. நார்த் கரோலைனா மாநிலத்தின் சட்டப்படி எங்கள் திருமணம் முறிந்துவிட்டது. அதைக்காட்டி இங்கேயும் முடித்துவிட்டோம். இப்போது என்பெயர் குமாரி செல்வகுமாரி சிவம்" என்று செய்திகள் வாசிப்பதுபோல் சொன்னாள் குமாரி.

"செல்வகுமாரி தணிகாசலம் இல்லையா?"

"அப்பாவுக்கு அவர் பேர் வச்சிக்கறது பிடிக்கலை. ஒருவேளை பெரியசாமி மனசுமாறி திரும்ப என்னை அழைச்சுப்பாரோன்னு ஒரு அசட்டு நம்பிக்கை. அவருக்கு ஏமாத்தம் தராம, எங்களுக்கு சொந்த ஊர் சிவபுரம், அதிலேர்ந்து எடுத்துக்கிட்டேன். குழந்தைகளுக்கும் அதுதான்."

"பெரியசாமி முழுக்கெட்டவர் இல்லைன்னு தோணுது. பேப்பர்லே வந்த செய்திலேர்ந்து அவர் தெரியாத்தனமா ஒரு சட்டவிரோதமான காரியத்திலே மாட்டிக்கிட்டார்னு நினைக்கிறேன். அதனால மோகனுக்கும் கெட்டபேர் வரக்கூடாதுன்னுதான் பேரை மாத்தச் சொல்லியிருக்கார்."

"என்னக்கா செய்யறது? பிரிஞ்சது பிரிஞ்சதுதான்."

 முந்தைய ஞாயிறு நடந்த அம்பிகா-பெரியசாமியின் திருமணத்திற்கு சாமி மட்டும் சென்றுவந்தான் என்று சரவணப்ரியா சொல்லவில்லை. கொஞ்சநாள் கழித்து அவளுக்கே தெரிந்துவிடும்.

"என்னை வீட்டிலே எல்லாருமே சந்தோஷமா ஏத்துக்கிட்டாங்க. யாரும் பெரியசாமி பேச்சை எடுக்கறது கிடையாது. என் தங்கைக்கு சவிதாவோட விளையாடத்தான் நேரமிருக்கு. வீட்டு கும்பல்லே, அப்பா இல்லைன்னு மோகன் கவலைப்படறதா தெரியலை."

"இருந்தாலும், மறுபடி கல்யாணம் செஞ்சுப்பேன்னு எதிர்பார்த்தேன்."

"அப்பாகூட முயற்சி செஞ்சு பாத்தார். சவிதாவுக்கு ஆறுமாசம் ஆனவுடனே நடராஜனை அழைச்சு பொறுப்பான வேலை தரேன்னு சொன்னார். ‘நீங்க ஏன் இந்தவேலை தரீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களை ஏமாத்தாம இப்பவே சொல்லிடறேன். நீங்க எதிர்பாக்கறதை என்னால நிறைவேத்தமுடியாது’ன்னு மறுத்திட்டான்."

"அடப்பாவி!"

"வேலையை ஏத்துக்கறதுக்கு முன்னாலேயே சொன்னது நல்லதில்லியா? அப்புறம் அப்பா பேப்பர்லே போட்டுப்பாத்தார். நாப்பது வயசுக்குக் குறைச்சலா யாரும் அதுக்குப் பதில்போடலை. கடைசிலே அவருக்கே நம்பிக்கை போயிட்டுது."

"புத்தாண்டு வாழ்த்துக்கள், அக்கா!"

"உனக்கும்தான். எப்படி இருக்கே?"

"நல்லாத்தான் இருக்கேன். சொல்றதுக்கு நிறைய விஷயமிருக்கு. எனக்கு முன்பின் தெரியாதவரைக் கட்டிவச்சு சுகமில்லாம போயிட்டதால சாந்தகுமாரிக்கு அவரோட தங்கை பிள்ளை சுந்தரத்தைக் கல்யாணம் பண்ணிவச்சு கம்பெனிலே வேலையும் போட்டுக்குடுத்தார். மாமா இறந்திட்டதாலே சின்ன அத்தையும் எங்ககூட வந்திட்டாங்க. ஒரு நாலு வருஷம் சரியாத்தான் போயிட்டிருந்தது. நாங்க எல்லாரும், நீங்க வந்தீங்களே, அதே அண்ணாநகர் வீட்டிலே ஒண்ணா குடியிருந்தோம். போன பொங்கல் சமயம் திடீர்னு அப்பாக்கு ஸ்ட்ரோக் வந்தப்புறம் நடமாட்டம் குறைஞ்சு போயிரிச்சு. கம்பெனியை சுந்தரம் எடுத்து நடத்த ஆரம்பிச்சதிலேர்ந்து தங்கையோட போக்கு மாறிட்டுது."

"எதிர்பார்த்ததுதான்."

"அவளுக்கு இப்போ நாலு மாசம். நான் தனியா போயிட்டா நல்லாயிருக்கும்னு அபிப்பிராயப்படறா. மனவருத்தம் வேண்டாம்னு பிரிஞ்சுபோக முடிவு செஞ்சுட்டேன். எங்களுக்கு பெசன்ட்நகர்லே அப்பா எழுபதிலே கட்டின தனிவீடு ஒண்ணு இருக்கு, சின்னதுதான், எங்களுக்கு அது போதும். சமீபத்திலே காலியாச்சு. வேணுங்கற சாமான்களை மட்டும் எடுத்துட்டு வந்துட்டோம். இப்போ அங்கேயிருந்துதான் பேசறேன். ஒத்தாசைக்கு பெரிய அத்தையும் என்னோட இருக்காங்க. வேலையும் செய்யத் தொடங்கிட்டேன். ஞாபகம் இருக்கா? கரோலைனா நேஷனல் பாங்க் கட்டடத்தை அப்பா கட்டினாரே. அங்கியே எனக்கு வேலை கிடைச்சுது. நான் தாலியைக் கழட்டாம இருந்ததும் நல்லதுக்குத்தான். பாக்கறவங்க இவளுக்கு கல்யாணம் ஆயிரிச்சா ஆகலையா, ரெண்டு குழந்தைகளும் எங்கிருந்து வந்ததுன்னு மண்டையைக் குழப்பிக்க வேண்டாம்."

"குழந்தைகள் படிப்பு?"

"மோகனோட சேர்ந்து சவிதாவும் பள்ளிக்கூடம் போறா. ரெண்டுபேரும் அவங்களுக்குள்ளியே ஒத்துமையா விளையாடிக்கிறாங்க. பக்கத்துவீட்டுக் குழந்தைகளோட அதிகம் பழகறதில்லை."

"அதுக்கு மத்தவங்களும் காரணமா இருக்கலாம்" என்று சரவணப்ரியா சமாதானம் சொன்னாள்.

"சூரன் கிண்டர்கார்டன் போறமாதிரி படம் அனுப்பியிருந்தீங்களே. இப்பவே என்ன உயரம் இருக்கான்! எப்போ இந்தியா வரப்போறீங்க?"
  
"சூரனுக்கு மே கடைசிலேதான் பள்ளிக்கூடம் முடியும். அப்பத்தான் வர்றதா இருக்கோம்."

"எக்ஸ்க்யுஸ் மீ மேடம்! உங்க பையனுக்கு என்ன ப்ராப்ளம்?"

 ‘டாக்டர் இப்போது உங்களைக் கவனிப்பார்’ என்கிற வார்த்தைகளை எதிர்பார்த்து, சிந்தனையில் ஆழ்ந்திருந்த குமாரி திடுக்கிட்டுத் திரும்பிப்பார்த்தாள். அவள் பெசன்ட் நகருக்கு வந்த புதிதில் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கப்பட்ட மெர்க்குரி மருத்துவ மையம் ஐந்தாண்டுகளில் மிகவும் பிரபலம் அடைந்திருந்தது. இதுவரை சில்லரை வியாதிகளுக்கு தெருக்கோடியில் இருந்த டாக்டரே கவனித்திருக்கிறார். இப்போது மோகனுக்குக் கவலைப்படும் உடல்நிலை. கோடை விடுமுறை தொடங்கிய நாளில் அதை அனுபவிக்க முடியாமல் ஒருசோர்வு. பெயரையும், மோகனின் குறைபாட்டையும் வரவேற்பில் கொடுத்துவிட்டு நாற்காலிகளின் வரிசையில் இடம்தேடி அமர்ந்து ஒருமணிக்கும் மேலிருக்கும். காத்திருந்த கும்பலில் யார் அழைக்கப்பட்டார்களென்று தெரியவில்லை.

மோகன் அவனையும் அறியாமல் பக்கத்திலிருந்தவன் தோள்மேல் சாய்ந்திருந்தான். கவலையில் குமாரி அதைக் கவனிக்கவில்லை.

"சாரி! உங்க மேல சாஞ்சிட்டான்" என்று அவனைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டாள். மோகன் கண்களைத் திறந்துபார்த்து மறுபடியும் மூடிக்கொண்டான்.

"பரவாயில்லை, மேடம்! நான் கேட்டது அவன் உடம்புக்கு என்னன்னு தெரிஞ்சுக்க" என்றான் அவன். நன்கு மடிக்கபட்ட பான்ட்ஸ்-சட்டை. வெளிர்நீலச் சட்டைக்குமேல் கருநீல ‘டை’. அதில் ஒருபெரிய சிக்மா அடையாளம். நோயாளியைப்போல் தோன்றவில்லை. உடல்நிலை சரியில்லாத வேறுயாரையாவது அழைத்துவந்திருக்கலாம். அவனுடைய தடியான கண்ணாடியில் ஏகப்பட்ட வளையங்கள், தொட்டால் ஒட்டிக்கொள்ளுமோ என்கிற கறுப்பு, நெற்றியில் சிவப்பு நாமம்கூடத் உற்றுப் பார்த்தால்தான் தெரிந்தது. தலைமயிர் வாருவதற்கு வழிவிடாமல் குத்திட்டுநின்றது.

மருத்துவர் வேறு, மூன்றாம் மனிதன் வேறு. "மூணுநாலு மாசமா வீக்கா இருக்கான்னு டானிக்கும், வைடமின் மாத்திரையும் கொடுத்துப் பாத்தோம், தேறலை" என்று சுருக்கமாக நிறுத்திக்கொண்டாள்.

அவன் விடவில்லை. "என்ன வயசாறது?"

"பதினொண்ணு முடிஞ்சிரிச்சு. சின்ன வயசிலேர்ந்தே பாக்க சிறிசா இருப்பான்" என்று விளக்கினாள். அவன் மேலும் கேட்குமுன்  "இன்னைக்கி காலைலே எழுந்ததிலேர்ந்து எதுவும் செய்யலை. மயங்கி படுத்துட்டான். அதனால உடனே அழைச்சிட்டுவந்தேன்" என்று முந்திக்கொண்டாள்.

முத்தமிடுவதுபோல் பக்கத்தில் மிகநெருங்கி மோகனின் மூச்சுக்காற்றை முகர்ந்தான் அவன்.

"டானிக் அவனுக்குப் பிரயோஜனமில்லை. சமீபத்திலே பாத்ரூம் அடிக்கடி போறானோ?"

டாக்டர் மாதிரி எதற்கு இத்தனை கேள்விகள்? குமாரி, "ஆமாம், அதுவும் பள்ளிக்கூடத்திலே இருக்கும்போது நாலுதடவை" என்றாள் முகத்தைச் சுளிக்காமல்.

இருந்தாலும் அவன் ஊகித்திருக்க வேண்டும். "நான் சிக்மா ஃபார்மாக்கு ரெப். டாக்டர்கிட்ட பேசறதுக்காக காத்துண்டிருக்கேன். உங்களை கரோலினா நேஷனல் பாங்க்லே நாலைஞ்சு வருஷமா பாத்திருக்கேன்" என்று உறவுகொண்டாடினான்.

சிக்மா மருந்துக்கம்பெனியின் கணக்குகளைக் குமாரி கவனித்திருக்கிறாள். அவன் முகம் நினைவில்லை. வங்கிக்கு எவ்வளவோ பேர் வந்துபோகிறார்கள். அவளுக்கு அவனைத் தெரியாதது அவனுக்கு ஏமாற்றமாக இல்லை.

"முன்னெல்லாம் காம்பௌண்டர்களைப் பாதிடாக்டர்கள்னு சொல்லுவா. இந்தக் காலத்திலே எங்களையும் அந்த கும்பல்லே சேத்துக்கலாம்" என்று சிரித்தான். "நான் சொல்றது அதனால இல்லை. என்னோட அம்மா க்ரானிக் டயாபெடிக். அதைப்பத்தி எனக்கு அத்துப்படி."

டயாபெடிக் என்றதும் குமாரியின் கவலை கலக்கமாக மாறியது. அது வயதானவர்களுக்கு, அதிலும் பணக்காரர்களுக்கு வரும் நோய் என்ற எண்ணம்.

"நீங்க சொன்னதை வச்சுப்பாத்தா இவனுக்கு டயாபெடிஸ் இருக்கலாம்னு தோணறது."

"இந்தச் சின்னவயசிலியா?" என்று குமாரி தடுமாறினாள்.

"கஷ்டம்தான் இல்லேங்கலை. ஆனா சரியானநேரத்திலே அதைக் கவனிக்காட்டா ரொம்ப காம்பிளிகேஷன் வரும். இங்கே ஆதிலேர்ந்து எல்லா செக்கும் பண்ண ஒருநாளாவது எடுத்துப்பா. இவனை உடனே பார்த்தசாரதி டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போறது நல்லதுன்னு எனக்குத் தோணறது. அம்மாவைக் கவனிச்சு தினம் ஊசிபோடறவர் அவர்தான்."

குமாரிக்கு அவன் சொல்வதை எவ்வளவுதூரம் நம்புவது என்று தெரியவில்லை. அவனுடைய ‘டை’யின் சிக்மா அடையாளத்தால் அந்த நிறுவனத்தில் பணிபுரிகிறான் என்று நம்பலாம், மற்றபடி?

அதையும் அவன் ஊகித்துவிட்டான். "அவர் உடனே டெஸ்ட் பண்ணிடுவார். அப்படி சக்கரை சரியா இருந்தா இங்கேயே திரும்பி வந்துடலாம். எனக்கு ரெண்டு டாக்டர்களுமே வாடிக்கை" என்று சிரித்தான்.

அப்படிச் செய்வதில் ஆபத்தில்லை என்று தோன்றியது. "உங்க பேரைச் சொல்லலியே."

"ராகவன்."

"என் பேர்…"

"எனக்குத் தெரியும், பாங்க்லே, உங்க ஆஃபீஸ் கதவுலே பாத்திருக்கேன். செல்வகுமாரி சிவம். நீங்க யாரோட வந்திருக்கேள்?"

"வெளிலே கார் டிரைவர் இருக்கான்."

"அவன்கிட்ட அங்கே போறதுக்கு வழி சொல்றேன். கார்லே போறச்சே பையனைக் கொஞ்சம் தண்ணி குடிக்கச் சொல்லுங்கோ! என்னால உங்களோட வரமுடியாது. வேலை முடிஞ்சப்புறம் வந்து பாக்கறேன்."

(தொடரும்)

About The Author