நீல நிற நிழல்கள் (4)

கீதாம்பரி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல மாசிலாமணியும் திலகமும் திணறிக் கொண்டிருக்கும்போதே, ரமணி உதட்டுக்கு ஒரு ரெடிமேட் புன்னகையைக் கொடுத்தபடி அவளை ஏறிட்டான்.

"ரகசியம் ஒண்ணுமில்லே அண்ணி… அப்பாவுக்கும் எனக்கும் சின்னதா ஒரு சண்டை…"

"சண்டையா?"

"ம்!"

"என்ன சண்டை?"

"அப்பா நாளைக்குக் காலையில… கொச்சிக்கு என்னைப் புறப்பட்டுப் போகச் சொல்றார்…"

"கொச்சிக்கா… எதுக்கு?"

"ஒரு காண்ட்ராக்ட் வேலைக்கு டெண்டர் போட்டிருந்தோம். அந்தக் காண்ட்ராக்ட் நமக்குக் கிடைக்கணும்னா, அங்கே இருக்கிற ஒரு அரசியல் புள்ளியைப் பார்த்து லஞ்சம் கொடுக்கணுமாம். லஞ்சம் கொடுத்து ஒரு காரியத்தைச் சாதிக்கிறது எனக்குப் பிடிக்காத வேலை. ஆனா அப்பா, என்ன அந்தக் காரியத்தைப் பண்ணச் சொல்றார். வேலைக்காரங்க காதுல இந்தப் பேச்சு விழுந்துடக் கூடாதுங்கிறதுக்காகத்தான் கதவைச் சாத்திவிட்டுப் பேசிட்டிருந்தோம். நீங்களே சொல்லுங்களேன்! லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதிச்சிக்கிறது தப்புதானே?"

கீதாம்பரி சிரித்தாள். "ரமணி! இந்தியாவோட தேசியத் தொழிலே லஞ்சம் வாங்கறதுதான். இந்தியாவில் பொறந்துட்டு லஞ்சம் கொடுக்கறதுக்கோ, வாங்கறதுக்கோ வெட்கப்படலாமா? மாமா சொல்றதுதான் சரி. நமக்குக் காரியம் ஆகணும்னா லஞ்சம் கொடுக்கிறதைத் தவிர வேறு வழியில்லை. என் வோட்டு மாமாவுக்கே!" சொன்ன கீதாம்பரி, மாசிலாமணியின் பக்கம் திரும்பினாள். அவர் முகத்தில் இருந்த வாட்டத்தைப் பார்த்துவிட்டு நெற்றியைச் சுருக்கினாள்.

"ஏன் மாமா… ஏதோ மாதிரி இருக்கீங்க?

"அதெல்லாம் ஒண்ணுமில்லேம்மா. தூக்கக் கலக்கம்."

"தூக்கக் கலக்கமா? பார்த்தா அப்படித் தெரியலையே! வழக்கமா உங்களுக்கு ஒருமணிக்கு மேல்தானே தூக்கம் வரும்?"

"இ… இன்னிக்கு என்னமோ தெரியலேம்மா, டயர்டா ஃபீல் பண்றேன். கொச்சி போற விஷயமா ரமணியோடு சண்டை வேற…"

"உங்களுக்குத் தூக்கக் கலக்கம் சரி… அத்தைக்கு என்ன? அவங்க முகமும் சரியில்லையே! கண்ணெல்லாம் கலங்கியிருக்கு!"

"நானும் ரமணியும் கொச்சி போற விஷயமாப் பேசிட்டிருந்தோம்… மகனுக்குப் பரிஞ்சுட்டு வந்தா உன்னோட அத்தை. எனக்குக் கோபம் வந்து திட்டப்போக… கண்ல தண்ணி"

கீதாம்பரி புன்னகைத்தாள். "அத்தை கண்கலங்கி நான் இன்னிக்குத்தான் பார்க்கிறேன்".

திலகம் துக்கத்தை விழுங்கி, முகத்தை இயல்புக்குக் கொண்டுவந்து கீதாம்பரியை ஏறிட்டாள்.

"இப்ப நீ எதுக்காக எந்திரிச்சு வந்தேம்மா? போய்த் தூங்கு!"

"தூங்கறதா? தூக்கம் எனக்கு எப்படி வரும் அத்தே? பம்பாய்ல இருக்கிற உங்க மகன் என் கூடப் பேசின பின்னாடிதான் எனக்குத் தூக்கம் வரும்."

"ஹரிதான் நாளைக்குக் காலையில போன் பண்றதா சொல்லியிருக்கானே!"

"எனக்கென்னவோ, ஃப்ரெண்ட் கூட வெளியே போயிருக்கிற அவர், ஒட்டல் ரூமுக்குத் திரும்பினதும் மறுபடியும் போன் பண்ணுவார்னு தோணுது. பன்னிரண்டு மணிவரைக்கும் ஹால் சோபாவில் உட்கார்ந்து காத்திருந்து பார்க்கலாம்னு வந்தேன்."

திலகத்துக்குப் பகீரென்றது

"நீ ஏம்மா உடம்பைப் படுத்திக்கிறே? வெளியே போயிருக்கிற அவன் எத்தனை மணிக்குத் திரும்பி வர்றானோ? நீ போய்ப் படும்மா! நாளைக்குக் காலையில ஹரியே போன் பண்ணுவான்."

"எனக்கு மனசு கேட்கலை அத்தே!"

மாசிலாமணி குறுக்கிட்டார். "நீ போய்ப் படுத்துக்கோம்மா! ஹரி போன் பண்ணினா நானே கூப்பிட்டுவிடறேன். வீணா தூக்கம் கெட்டு உடம்பைச் சிரமப்படுத்திக்காதே! போம்மா, உன்னோட ரூமுக்குப் போ!"

கீதாம்பரி நகர மனசில்லாமல் நகர்ந்து தன்னுடைய அறையை நோக்கிப் போக, மூன்று பேரும் கனத்த இதயங்களோடு ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.

அவள் அறைக்குள் மறைந்ததும், புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக் கொண்டு திலகம் சத்தம் காட்டாமல் அழ, ரமணி கலங்கிய விழிகளோடு மாசிலாமணியை ஏறிட்டான்.

"அப்பா! வர்ற இருபது நாளைக்கு அண்ணிகிட்ட அண்ணன் டெலிபோன்ல பேசியாகணும். அந்தப் பிரச்னையைச் சமாளிச்சுடலாம்னு சொன்னீங்களே… எப்படிச் சமாளிக்கப் போறீங்க?"

"ஒரு வழி இருக்கு…"

"என்ன?"

"ரமணி! நீ வெளியேயிருந்து வீட்டுக்கு போன் பண்ணிப் பேசும்போது கீதாம்பரி பலமுறை ஹரிதான் பேசறதாய் நினைச்சு ஏமாந்து போயிருக்கா. என்கிட்டேயும் பலமுறை உங்க ரெண்டு பேர்க்கும் இருக்கிற குரல் ஒற்றுமையைப் பற்றி சொல்லியிருக்கா. இந்தக் குரல் ஒற்றுமையைத்தான் இப்போ பயன்படுத்திக்கப் போறோம். இதை வெச்சுத்தான் கீதாம்பாரிக்குப் பிரசவம் முடிகிற வரைக்கும் சமாளிச்சாகணும்."

"அப்பா! இதை நடைமுறைப்படுத்தறது சாத்தியமா?!"

"எச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கிட்டா இது சாத்தியம்தான். நாளைக்குக் காலையில் ஃப்ளைட்டைப் பிடிச்சு நீயும் கீதாம்பரியோட அண்ணன் திவாகரும் பம்பாய்க்குப் போயிடுங்க! நீ அவசரமா கொச்சிக்குப் போயிருக்கிறதா கீதாம்பரிகிட்டே நான் சொல்லிடறேன்."

"அப்பா! போன்ல பேசற இந்தத் திட்டம் சரியானபடி வொர்க்-அவுட் ஆகுமா?"

"அ… அ… அது உன் கையில்தான் இருக்கு. போனதும் போன் போட்டுப் பேசு!" மாசிலாமணியின் கண்கள் வெகுவாய்க் கலங்கிப் போயிருக்க, மேற்கொண்டு பேசமுடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது.

*************

ழை பம்பாயை அலம்பிக் கொண்டிருந்தது.

டாக்டர் சதுர்வேதியின் பங்களாவில் பரவியிருந்த அரையிருட்டில் மெதுவாய் நடந்துபோய், அந்த அறைக் கதவின் மேல் கையை வைத்தாள் நிஷா.

கதவு ‘வா’ என்று கூப்பிட்ட தினுசில் மெள்ளப் பின்வாங்கியது. நிஷா, தலையை மட்டும் உள்ளே நீட்டிப் பார்வையை அவிழ்த்துவிட்டாள்.

அது சற்றுப் பெரிய அறை. லாபரட்டரி மாதிரி தெரிந்தது. நீண்ட மேஜையின் மேல் ஏதேதோ உபகரணங்கள். கண்ணாடி அலமாரிகளில் நிறம் நிறமாய் அமில பாட்டில்கள். உப்பு ஜார்கள். சுவரில் வரைபடங்கள். நிஷா அவசர அவசரமாய்ப் படித்துப் பார்த்தாள்.

STRUCTURE OF NUCLEOTIDE
A – T – C – G
FUNCTION OF GENE ISOLATOR
GENE MACHINE

நிஷாவுக்கு எதுவும் புரியவில்லை. லாபரட்டரிக்குள் மண்டியிருந்த காற்றால், ஏதோ புளித்த வாசனை உறைந்திருப்பதை நிஷாவின் நாசி அவஸ்தையாய் உணர்ந்தது.

நிஷா, நடைச்சத்தம் கேட்டுவிடாமல் மெதுவாய் நடந்து உள்ளே போனாள்.

சதுர்வேதி பார்வைக்குக் கிடைக்கவில்லை.

உடம்பு எதன் மீதும் பட்டுவிடாமல், இரண்டு நீளமான மேஜைகளுக்கு மத்தியில் நடந்து அறையின் கோடிக்கு வந்தாள்.

பக்கத்து அறைக்குப் போகக் கர்ட்டன் அசைவோடு ஒரு வழி தெரிந்தது. உள்ளேயிருந்து சின்னச் சின்னச் சத்தங்கள் கேட்டன. சதுர்வேதியின் தொண்டைச் செருமல் உள்பட!

நிஷா நின்றாள்.

‘என்ன செய்யலாம்..?’

‘ஏதாவது ஒரு பக்கம் மறைவாய் ஒண்டிக்கொண்டு நடப்பதைக் கவனிக்க வேண்டியதுதான்!’

யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவளுக்குப் பின்பக்கமாய் அந்தச் சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தாள்.

ஆர்யா வந்துகொண்டிருப்பது தெரிந்தது.

சட்டென்று, பக்கவாட்டில் இருந்த ராட்சதக் கண்ணாடி அலமாரிக்குப் பின்னால் மண்டியிட்டு ஒண்டிக் கொண்டாள்.

ஆர்யா வந்தாள். வேகமான நடை. கையில் ஏதோ ஒரு ஃபைல் இருந்தது. கர்ட்டனைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனாள்.

டாக்டரின் குரல் கேட்டது.

"ரிஸீவரை எடுத்து வெச்சுட்டியா ஆர்யா?"

"ம்".

"வெளியே மழை ஜாஸ்தியாயிடுச்சு போலிருக்கு?…"

"செமத்தியா!"

"கையில் என்ன ஃபைல்?"

"ஆட்டோ க்ளேவ் பர்ட்டிகுலர்ஸ்"

"ஸெல் கல்ச்சர்ல மீடியத்தை மாத்திப் பார்த்தியா?"

"லிக்விட் ஸ்டேஜிலிருந்து சாலிட் ஸ்டேஜுக்கு மாத்திப் பார்த்தேன் டாக்டர். க்ரோத் கிடைக்கலை."

"எங்கேயோ தப்பு பண்றோம்!"

"நைட்ரோஜினஸ் பேஸ் ரேஷீயோவும் சரியாக் கிடைக்கலை டாக்டர். சைட்டோசைன் வரவேயில்லை."

"ஸ்டரிலைசேஷன் சரியா இருந்திருக்காது. ஸெல் கல்ச்சர் மீடியத்தை இனிமே நீ ப்ரிபேர் பண்ணாதே! என் பொறுப்புல விட்டுடு."

"சரி டாக்டர்!"

நாற்காலி பின்னுக்குத் தள்ளப்படும் சத்தம் கேட்டது. டாக்டர் எழுந்துவிட்டார் போல் தோன்றியது.

"இனி ராகினிகிட்ட போலாமா?"

கர்ட்டன் அசைந்தது.

நிஷா, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்திருக்க, சதுர்வேதியும் ஆர்யாவும் வெளியே வந்தார்கள்.

சதுர்வேதியின் வாயில் பைப் புகைந்து கொண்டிருந்தது.

"ஜீன் மெஷின் மானிட்டர் இப்போ சரியா வொர்க் பண்ணுதா ஆர்யா?"

"பர்ஃபெக்டா இருக்கு டாக்டர்."

"மாத்த வேண்டி வருமோன்னு நினைச்சேன்."

"வேற ஒண்ணை இம்போர்ட் பண்ணணும்னு சொல்லிட்டிருந்தீங்களே டாக்டர்?"

"கலிஃபோர்னியாவில் இருக்கிற பயோடெக் ரிசர்ச் சென்டர்க்கு லெட்டர் எழுதியிருக்கேன். பதில் வரலை. நாளைக்கு ஒரு ரிமைண்டர் போடணும்."

பேசிக்கொண்டே இருவரும் நடக்க, நிஷா அலமாரியை ஒட்டிய குறுகிய இடைவெளியில், உட்கார்ந்த நிலையிலேயே தவழ்ந்தபடிப் பின்தொடர்ந்தாள்.

டாக்டரும் ஆர்யாவும் இப்போது லாபரட்டரியின் வலதுபக்கக் கோடியில், சுவரோடு சுவராய்ப் பதிக்கப்பட்டிருந்த ‘வார்ட்ரோப்’ மாதிரியான அமைப்பைத் திறந்துகொண்டு உள்ளே போனார்கள்.

நிஷா, இரண்டு நிமிஷ நேரம் நிசப்தம் காத்துவிட்டுப் பின் மெள்ள எழுந்து, அந்த வார்ட்ரோப்பை நோக்கிப் போனாள். நெருங்கி அதன் கைப்பிடியைப் பற்றி இழுக்க, எதிர்ப்புக் காட்டாமல் அது திறந்து கொண்டது.

எக்கச்சக்க ஜாக்கிரதை உணர்வோடு உள்ளே நுழைந்தாள். அறைக்குள் மெலிதான நீல நிற வெளிச்சம் பரவியிருந்தது. ஏர்கண்டிஷனர் உறுமிக் கொண்டிருக்க, இரண்டொரு கம்ப்யூட்டர் சாதனங்கள் வெளிச்ச மானிட்டர் திரைகளோடு தெரிந்தன.

‘எங்கே இவர்கள்?!’

நிஷா, பார்வையை வீசிக்கொண்டே மெள்ள நடந்தாள். அறையில் இருந்த ஜில்லிப்பையும் மீறிக்கொண்டு கழுத்திலும் பிடரியிலும் வியர்த்தது.

அந்த அறையும் ஒரு பரிசோதனைக் கூடம் மாதிரி தெரிந்தது. அலமாரியில் இருந்த கண்ணாடிக் குடுவைகளில் ஈஸ்ட்மென் நிறங்களில் அசையாத திரவங்கள்.

நிஷா எந்தப் பக்கம் போவது என்று விழித்துக் கொண்டிருந்த விநாடி,

பின்பக்கம் அந்தத் தொண்டைச் செருமல் சத்தம் கேட்டது,

"க்கும்…"

அதிர்ந்து திரும்பினாள்!

சதுர்வேதி, பைப் பிடித்த வாயோடு புகை கசியச் சிரித்தார்.

"வா நிஷா! வெல்கம்!"

(தொடரும்)

About The Author