மனிதரில் எத்தனை நிறங்கள்! (74)

Will you give me yourself?
Will you come travel with me?
Shall we stick by each other
As long as we live?
-Walt whitman

அசோக் இந்த முறை மூர்த்தியை லேக்கின் அருகே உள்ள ஒரு சிமெண்ட் பெஞ்சில் உட்காரச் சொல்லி இருந்தான். மணி சரியாக ஆறை எட்டிய போது அவன் மூர்த்தி அருகே வந்து அமர்ந்தான். ஒரு கை குலுக்கலோ, ஒரு "ஹலோ"வோ இல்லை. அமர்ந்தவுடன் கையை நீட்டினான். மூர்த்திக்கு ஒரு மாதிரியாகி விட்டது. தான் கொண்டு வந்திருந்த ஒரு ப்ளாஸ்டிக் கவரைத் தந்தான். "இதில லட்ச ரூபாய் இருக்கு".

அசோக் அதை ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.

"எண்ணிப் பார்த்துடுங்க"

"தேவையில்லை. அப்படி அதில் கம்மியா இருந்தா வேலை நடக்காது, அவ்வளவு தான்"

மூர்த்திக்கு ஓங்கி ஒரு அறை விட்டால் என்ன என்று ஒரு வினாடி தோன்றியது. கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டான். "அவங்க டேப் செய்யறதா முடிவு செஞ்சுட்டாங்க. புதன் கிழமை செஷனோட டேப் காப்பி எப்ப கிடைக்கும்"

"வெள்ளிக்கிழமை சாயங்காலம் தர்றேன். ஐம்பதாயிரத்தோட வாங்க"

மூர்த்தி தயக்கத்துடன் கேட்டான். "கொஞ்சம் சீக்கிரம் கிடைக்காதா. அடுத்த செஷன் வியாழனோ, வெள்ளியோ கூட இருக்கலாம். அதுக்கு முன்னாலேயே கிடைச்சா நல்லாயிருக்கும்."

அசோக் முகத்தில் அடிக்கிற மாதிரி ஏதாவது சொல்வான் என்று மூர்த்தி எதிர்பார்த்தான். ஆனால் அசோக் கோபப்படாமல் சொன்னான். "அடுத்த செஷன் குறைஞ்சது நாலைந்து நாளுக்கு முன்னால் நடக்காது. அந்த டாக்டரோட அப்பாயின்மெண்ட் புஸ்தகம் மாசக்கணக்கில் ஃபுல்லா இருக்கு. இடையில நீங்க சொன்ன பேஷண்டோட அப்பாயின்மெண்டை அந்த டாக்டர் கஷ்டப்பட்டு புகுத்திட்டு வர்றான். அடுத்த அப்பாயின்மெண்ட் அதற்கடுத்த திங்கட்கிழமை ஃபிக்ஸ் ஆயிருக்கு"

ஆர்த்திக்கே தெரியாத இந்த அடுத்த அப்பாயின்மெண்ட் தகவல் கூட சேகரித்து வைத்திருக்கும் அசோக் மீது மூர்த்திக்குத் தனி மரியாதை ஏற்பட்டது. அதே நேரம் ஒருவித இனம் புரியாத பயமும் பிறந்தது. ‘இந்த அளவு உஷாராக இருப்பவன் நம்மைப் பற்றியெல்லாம் என்னென்ன தகவல் சேகரித்து வைத்திருக்கிறானோ"

"அப்படின்னா வெள்ளிக்கிழமை சாயங்காலம் எங்கே வரட்டும்?"

"வியாழக்கிழமை சாயங்காலம் நானே போன் செய்து சொல்றேன்". அவன் போய் விட்டான்.

பஞ்சவர்ணத்திடம் சென்று அசோக்கிடம் பணம் கொடுத்ததையும், அவன் சொன்ன தகவலையும் மூர்த்தி சொன்னான். பஞ்சவர்ணத்திற்கு அசோக் என்ற அந்த நபரைப் பிடித்திருந்தது. "கொடுத்த காசுக்கு அவன் கச்சிதமாய் வேலை செய்வான்னு தான் தோணுது மூர்த்தி. அந்த விஷயத்தைப் பத்தி நாம் பெருசா கவலைப்பட வேண்டியதில்லைன்னு நினைக்கிறேண்டா. இனிமே நாம இங்கே கொஞ்சம் கவனமாய் காய் நகர்த்தணும்டா. அந்த வக்கீல் வந்து நம்ம கொஞ்ச நஞ்ச சந்தேகத்தையும் நிவர்த்தி பண்ணிட்டான். இப்ப சிவகாமி மருமகளை யூஸ் செய்யறதுக்கு முன்னால் நாம் முந்திக்கணும்டா….."

சொல்லி விட்டு பஞ்சவர்ணம் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தபடி குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள். பின் பேரனிடம் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்தாள்.

********

"ஹாய் ஆர்த்தி"

ஆர்த்தி கையில் இருந்த புத்தகத்திலிருந்து தலையை நிமிர்த்தினாள். மூர்த்தி.

"ஹாய்…"

"தொந்திரவு செய்யறேனோ?"

"இல்லை. உட்காருங்க"

மூர்த்தி தயங்கியபடி உட்கார்ந்தான். "ஆர்த்தி நான் ஒண்ணு சொன்னா என்னை தப்பா நினைச்சிட மாட்டியே"

"மாட்டேன். சொல்லுங்க….."

ஆனாலும் மூர்த்தி நிறைய யோசித்தான். பின் பீடிகையுடன் ஆரம்பித்தான். "ஆர்த்தி. இந்த உலகத்துல எல்லாருமே பணத்துக்குத் தர்ற மரியாதை வேற எதுக்குமே தர்றதில்லை. இதை நான் என் சின்ன வயசுல இருந்தே பார்த்து வளர்ந்துருக்கேன். ஆகாஷுக்குக் கிடைச்ச மரியாதை சின்னதுல இருந்தே பார்த்திபனுக்குக் கிடைச்சதில்லை. பார்த்திபனுக்குக் கிடைச்ச அளவு மரியாதை கூட எனக்குக் கிடைச்சதில்லை. அந்த மாதிரி மரியாதையைக் கூட என்னை மாதிரி அனாதைகள் எதிர்பார்க்க முடியாதுன்னு சீக்கிரமே புரிஞ்சுடுச்சு. ஆனா அன்பைக் கூட ஏழைகள் எதிர்பார்க்க முடியாதுன்னு உறைச்சப்ப மனசு ரணமாயிடுச்சு. அதனாலேயே நான் இந்த வீட்டுல ஒதுங்கியே இது வரைக்கும் இருந்திருக்கேன். நான் யாரையும் தப்பு சொல்லலை. என் விதிக்கு யாரைத் தப்பு சொல்ல முடியும்…."

ஆர்த்திக்கு அவன் கண்ணில் லேசாகத் திரையிட்ட நீரைப் பார்க்க முடிந்தது. அவளுக்கு அவனைப் பார்க்க பாவமாக இருந்தது.

அவன் தொடர்ந்தான். "ஏனோ நீயும் என்னை மாதிரியே சின்ன வயசுல கஷ்டப்பட்டிருக்கேன்னு தெரிஞ்ச பிறகு நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரின்னு ஒரு ஒட்டுதல் தோணிடுச்சு. அப்படி தோண ஆரம்பிச்சப்ப உன் கிட்ட கூட எக்கச்சக்கமான சொத்து இருக்கிறதுங்கற உண்மை ஏனோ எனக்கு உறைக்கலை. அப்புறமா உறைச்சாலும் நீ இவங்க மாதிரி இல்லைன்னு என் மனசு உறுதியா சொல்லிச்சு. அந்த வக்கீல் வந்து உன் கிட்ட பேசிகிட்டு இருந்தப்ப நான் தோட்டத்துல ஒரு வேலையா போயிருந்தேன். அப்ப தற்செயலா நீ அவர் கிட்ட "இந்த சொத்தெல்லாம் வேண்டாம்னு எனக்குத் தோணுது"ன்னு சொன்னது என் காதுல விழுந்தது. ஆர்த்தி நீ நிஜமாவே அப்படி நினைக்கிறியா, இல்லை அப்போதைக்கு அப்படித் தோணிச்சா?"

ஆர்த்தி சொன்னாள். "இப்பவும் அப்படித் தான் தோணுது மூர்த்தி"

"ஆர்த்தி ஒரு வேளை நீ அப்படி சீரியஸாவே நினைச்சு இந்த சொத்து மேல ஆசை இருக்கறவங்களுக்கே அதைத் திருப்பிக் கொடுக்கறதா இருந்தா நீ என்னைக் கல்யாணம் செய்துக்குவியா?"

ஆர்த்தி இதை சற்றும் எதிர்பார்த்திராததால் திடுக்கிட்டுப் போனாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

"சொத்தை நீயே ஆண்டு அனுபவிக்கறதா இருந்தா நான் இப்படிக் கேட்டிருக்க மாட்டேன். ஏன்னா அது நான் சொத்துக்காக ஆசைப்பட்டுக் கேட்கற மாதிரி ஆயிடும். எனக்குப் பணம் சொத்து எதுவும் வேண்டாம் ஆர்த்தி. நீ கட்டின துணியோட வந்தாக் கூட போதும், உன்னை நான் என் கண்மணியாய் பார்த்துப்பேன். சாகற வரைக்கும் உன்னை உயிருக்கு உயிராய் நேசிப்பேன். அதை நான் சத்தியம் செய்து தர்றேன், ஆர்த்தி…… நீ இப்ப எனக்கு எந்த பதிலும் சொல்ல வேண்டாம். நல்லா யோசிச்சு முடிவெடு. அதுக்கு எவ்வளவு நாள் வேணும்னாலும் எடுத்துக்கோ. உனக்காக நான் காத்திருப்பேன். ஒருவேளை நீ முடியாதுன்னு சொன்னாக்கூட நான் தப்பாய் நினைக்க மாட்டேன். இப்படி உன் கிட்ட கேட்கக்கூட எனக்கு தகுதி இருக்கா இல்லையான்னு தெரியலை. ஆனா மனசுல இருக்கறதை மறைச்சு வச்சுத் தெரியாத எனக்கு சொல்லாம இருக்க முடியலை. இனி நானா மறுபடி இந்த விஷயத்தைப் பேசி உன்னை தர்மசங்கடப்படுத்த மாட்டேன் ஆர்த்தி. உனக்கு நான் இப்படிக் கேட்டது பிடிக்கலைன்னா நான் சொன்னதையே மறந்துடு. நாம நல்ல ஃப்ரண்ட்ஸாவே இருப்போம்."

அவள் திகைப்பு மாறாமல் அமர்ந்திருக்க அவன் மெள்ள எழுந்தான். "ஆர்த்தி நீ என்ன முடிவெடுத்தாலும் பரவாயில்லை. ஆனா இந்த அனாதைப் பையன் என் கிட்ட எப்படி இப்படிக் கேட்கலாம்னு மட்டும் நினைச்சுடாதே ப்ளீஸ்."

அவன் போய் விட்டான்.

(தொடரும்)

About The Author