களவியல்

ஏதோஒரு எண்ணப் புணர்ச்சியினால்
என்மனப் புத்திரி சூலுற்றனள்;
காதோரமாய் வந்தோர் உரைசொன்ன மென்
காற்றோ இக்கருவுக்கு விதையிட்டது?

மனப் பெண்ணை மருவிச்சிற் சுகம் தந்ததார்?
மசக்கைக்கு ஆளாகித் தவிக்கின்றாள்;
கனவென்னும வடிவத்தில் எவன்வந்து இக்
களவியல் வஞ்சனை நிகழ்த்திட்டனன்!

மதியென்னும் புறவாயில் மதில்சாடியே
மகரந்தப் பொடிதூவி மயக்கிட்டானோ?
அதிகாலைப் பொழுதில்ஓர் புளங்காகிதம்
அனுபவித் திட்டிவள் விழிப்புற்றதும்

உதயத்தைத் தினந்தோறும் பார்க்கின்றவள்
ஒருநாளும் எய்தாத சிலிப்புற்றதும்
இதயத்தில் அனுராகச் சுதிமூண்டதும்
இவன்தொட்ட பரிசத்தின் யாழ்மீட்டலாமோ?

அறிவென்னும் மணவாளன் கரம்பற்றியே
அளவற்ற சௌபாக்யம் அடைவாளென
குறிவைத்த எனதாசை விழலாக்கினள்
குணமற்ற கவிஉயிர்ப் புழுஏந்தினள்

About The Author

1 Comment

  1. DeviRajan

    மிக அருமையான கவிதை… காதோரமாய் வந்தோர் உரைசொன்ன மென்காற்றோ….. மிக அருமையான வரிகள்… வாசிக்கும் பொழுதே மனதிற்குள் வந்துவிட்டது…

Comments are closed.