ஃபின்லாந்தைப் பின்பற்றலாமா?

பாசி ஸாஹல்பெர்க் என்ற ஃபின்லாந்தின் புகழ்பெற்றகல்வியாளர் அமெரிக்கா மன்ஹாட்டனில் ஓர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் அந்த மாணவர்களிடம் கேட்டார், "உங்களில் யார் ஆசிரியராக விரும்புகிறீர்கள்?" என்று.

அந்த 15 மாணவர்களில் இரண்டே இரண்டு கரங்கள்தான் உயர்ந்தன. அது கூட மிகவும் வேண்டாவெறுப்பாக.
அந்த ஃபின்லாந்துக் கல்வியாளர் சொன்னார், "என்னுடைய நாட்டில் இது 25 சதவிகிதமாக இருந்திருக்கும்". இதைச் சொல்லும்போது அவர் உற்சாகத்துடன் கைகள் உயர்த்தி ஆட்டிக்கொண்டு "கிட்டத்தட்ட இது போல ஆர்வத்துடன்" என்றார்.
"எங்களுடைய நாட்டில் ஆசிரியர்கள் ஒரு நாளைக்குச் சுமார் நான்கு மணிநேரம் வகுப்பறையில் செலவழிக்கிறார்கள். மேலும் வாரத்தில் இரண்டு மணி நேரம் அவர்கள் ஆசிரியத் திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் சம்பளம் அளிக்கப்படுகிறது" என்று பின் ஒரு நேர்முகத்தின்போது அவர் சொன்னார்.

அவர் ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். "அங்கு ஆசிரியர் முதுகலைப் பயிற்சிக்கான 120 இடங்களுக்கு 2400 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அந்தப் பயிற்சி அரசின் மானியம் பெற்ற பயிற்சி. சட்டம், மருத்துவம் இவற்றைவிட ஆசிரியர் பயிற்சிக்கு நுழைவது மிகவும் கடினமானது" என்றும் கூறினார் அவர். ஃபின்லாந்துக் கல்வித்துறையின் இந்த வெற்றிக் கதை அமெரிக்காவிற்கு ஒரு மன உறுத்தலாகவே இருக்கிறது.

பேராசிரியர் ஸாஹல்பெர்க் ஃபின்லாந்தின் கல்வி வெற்றிக்கு உன்னதத் தரம் வாய்ந்த ஆசிரியர்களே காரணம் என்று பெருமையுடன் கூறுகிறார். பேராசிரியர்.முனைவர்.ஸாஹல்பெர்க் ஃபின்லாந்தில் மிகவும் மதிக்கப்படுபவர். முக்கியமான அரசு விழாக்களில் அவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகிறார். தவிர கல்வி பற்றிய ஆலோசனைகளுக்காகவும், உரையாடல்களுக்காகவும் அவர் அடிக்கடி அமெரிக்காவின் சிகாகோ, வாஷிங்டன் ஆகிய முக்கிய நகரங்களுக்கு அழைக்கப்படுகிறார்.

அண்மையில் வெளியான அவருடைய ஒரு புதிய புத்தகம் "ஃபின்லாந்தின் கல்வி மாற்றத்தால் உலக நாடுகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?" இதை வாஷிங்டனில் வெள்ளை மாளிகைப் பிரமுகர்கள் மற்றும் பல பிரபலங்களின் மத்தியில் அவர் வெளியிட்டார்.

அப்படி என்னதான் இந்த ஃபின்லாந்தின் கல்வித்துறை சாதித்திருக்கிறது?

55 லட்சம் மக்கள்தொகை கொண்ட ஃபின்லாந்தில், குழந்தைகளுக்கு ஏழு வயதிற்கு முன்பு முறைப்படியான கல்வி தொடங்குவதில்லை. தவிர 13 வயது வரை வீட்டுப்பாடம், தேர்வுகள் என்ற பேச்சே கிடையாது. இதனால் 2001ஆம் ஆண்டு மிகவும் பெருமை பெற்ற அனைத்துலகத் தேர்வில் கணக்கு, அறிவியல், வாசிப்புத்திறன் ஆகியவற்றில் ஃபின்லாந்து முதலாவதாக வந்தது. அமெரிக்கக் கல்வி வல்லுநர்களுக்கு இது மிகவும் ஆச்சரியம் அளித்தது. 2009ஆம் ஆண்டில் மீண்டும் ஃபின்லாந்து வாசிப்புத்திறன், அறிவியல், கணக்கு ஆகியவற்றில் முதலிடம் பெற்றது. அமெரிக்கா வாசிப்பில் 15ஆவது இடத்திலும், கணக்கில் 19ஆவது இடத்திலும், அறிவியலில் 27 இடத்திலும் இருந்தது.

வாஷிங்டனில் உள்ள ஃபின்லாந்துத் தூதரகம் அடிக்கடி "ஏன் ஃபின்லாந்தின் மாணவர்கள் சிறந்து விளங்குகிறார்கள்?" என்பது போன்ற தலைப்பில் கலந்துரையாடல் செய்கிறது.

அரசியல் விமர்சகர்கள், அமெரிக்காவிற்கு ஃபின்லாந்தின் பரிசோதனை பொருந்தாது எனச் சொல்கிறார்கள். அதன் பொருளாதாரம் மிகச் சிறியது, மிகக்குறைவான வறுமைக் கோட்டு மக்கள். ஒருமித்த மக்கள்தொகை -அயல் நாட்டவர் 5 சதவிகிதமே!- சமூக வளர்ப்பிலும் பல வேற்றுமைகள் இருக்கின்றன.

ஃபின்லாந்துப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நியூயார்க் பள்ளிகளைப் போலவே இருக்கிறது. ஆனால் மாணவர்கள் எண்ணிக்கை நியூயார்க்கை விடக் குறைவு. நியூயார்க்கில் 11 லட்சம் மாணவர்கள் பள்ளியில் என்றால்
ஃபின்லாந்தில் 6 லட்சம் மாணவர்கள். ஃபின்லாந்து மாணவர்கள் ஃபின்னிஷ், ஸ்வீடிஷ், மற்றும் ஆங்கிலம் பேசுகிறார்கள்.
பாசெட் என்ற வாஷிங்டன் பேராசிரியர் ஒருவர் சராசரியாக ஒரு ஃபின்னிஷ் மாணவன் ஆண்டிற்கு 17 புத்தகங்கள் நூலகத்திலிருந்து எடுத்துப் படிக்கிறானென்றும், பெற்றோர்களுடன் கலந்து படிக்கிறானென்றும் தான் கண்டறிந்ததாகக் கூறுகிறார்.

ஷீனிடர் என்ற அமெரிக்க ஆய்வு மையங்களின் துணைத்தலைவர் "அவர்கள் நன்றாகத்தான் செய்து வருகிறார்கள். ஆனால் அவற்றில் எதுவரை அமெரிக்காவிற்கு ஏற்றது என்று தெரியவில்லை" என்று சொல்கிறார்.

லிண்டா என்ற அமெரிக்கப் பேராசிரியர் "ஃபின்லாந்தின் கல்வி முறை மிகவும் சிறப்பான ஒன்று. அதை அமெரிக்க மாநிலங்களில் கொண்டு வர முடியலாம்" என்கிறார்.

முனைவர் ஸாஹல்பெர்க் 1970களிலிருந்துதான் கல்வியில் புதிய முறைகள் கொண்டுவரப்பட்டன என்கிறார். அப்போது தொடவங்கிய முயற்சிகள் இப்போதுதான் முழுமை பெற்றிருக்கின்றன. பாடத்திட்டங்கள் வெவ்வேறு பகுதிகளின் தேவைக்கேற்பத் தீர்மானிக்கப்பட்டதோடு, ஆசிரியர்களுக்குப் பயிற்சிகளும் தொடர்ந்து கொடுக்கப்பட்டன. ஃபின்லாந்தின் கல்வி முறைச் சிறப்புக்குக் கீழ்க்காண்பவற்றை முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.

1. ஆசிரியர்கள் தங்கள் திறனை மாணவர்களிடம் பிரதிபலித்தல்.
2. கற்றுக்கொள்ளும் விருப்பத்துடன் தனிப்பாதை வகுத்து ஆசிரியர்கள் நடத்தல்.
3. அறிவியல் கல்விக்கான பயிற்று முறைகளை ஆசிரியர்களே கண்டறிதல்.
4. நடத்தும் பாடங்கள் மாணவர்களுக்குச் சென்று சேர்கின்றனவா என வகுப்பறை அடிப்படையில் ஆய்வு செய்தல்.
5. பாடம் நடத்தும் உத்திகள் அளிக்கும் பலனின் அடிப்படையில் ஆசிரியர்கள் அவற்றை மாற்றி அமைத்தல்.
6. கூடுதல் பயிற்சி தேவைப்படும் பட்சத்தில் ஆசிரியர்கள் அதைக் கேட்டு பெறும் வசதி.
இவையே பின்லாந்து மாணவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன.

(நியூயார்க் டைம்ஸில் வந்த கட்டுரையின் அடிப்படையில்)

நன்றி: பாடம் மாத இதழ்.

About The Author