அம்மனே காவல்

நெல்லை மாவட்டம், சிவகிரி நகர் அருகே உள்ள தென்மலை என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் அற்புதஸ்தலம் திரிபுர நாதர் கோயில்! இங்கு அருள்பாலிக்கும் சிவன், சுயம்புவாகத் தோன்றியவர்.

திருவண்ணாமலை போல் இங்கு கிரிவலமும் நடைபெறுகிறது. இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்திருப்பது, அதன் சிறப்பை மேலும் கூட்டுகிறது! கருவறையில் சிவன், திரிபுரநாதர் எனும் பெயரில் அருள்பாலிக்கிறார். அம்பாளுக்குத் தனிச் சந்நிதி. இதில் அம்பாள், ‘சிவபரிபூரணி’ எனும் பெயரில் கருணை பொழிகிறாள். இவளும் மேற்கு நோக்கி இருப்பது விசேஷம்தான்.

ஈசன் கருவறையில், ஐந்து விளக்குகள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. இவை, பஞ்சதீபம் எனக் குறிப்பிடப்படுகின்றன. இங்கும் ஓர் அற்புதத்தை நாம் காணமுடிகிறது; நான்கு தீபங்களின் சுடர்கள் அசைந்து கொண்டிருக்க, சிவனை நோக்கி எரிந்து கொண்டிருக்கும் தீபம் அசையாமல் எரிகிறது! அந்த ஈசனையே அது கண்கொட்டாமல் பார்ப்பது போல் இருக்கிறது!

பாண்டிய மன்னர்கள் பலர் இந்தக் கோயிலில் வந்து சேவை செய்திருக்கின்றனர். சுந்தரபாண்டிய மன்னன், தான் போரில் வென்றதைக் கொண்டாட இந்தக் கோயிலைக் கட்டினான் என்றும், போரில் பலரைக் கொன்று குவித்த பாபங்களுக்குப் பரிகாரமாக, முன்பு சுயம்புவாகத் தோன்றிய இந்த ஈசனுக்குக் கோயில் கட்டினான் என்றும் கோயிலில் இருந்த பக்தர் ஒருவர் மூலம் தெரிய வந்தது. இதைப் பற்றிச் சொல்லும் ஒரு கல்வெட்டையும் ஆலயப் பிரதட்சிணம் செய்யும்போது பார்க்கலாம் என்றார் அந்தப் பக்தர்.

பாண்டிய ஆட்சியின் சின்னமான இரட்டை மீன்கள், விதானத்தில் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சிவன் கோயிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் அழகே அழகு! கோயிலின் முன், ஒரு பெரிய குளமும் இருக்கிறது. எப்போதும் நீர் வற்றாமல் இருக்கும் இந்தக் குளத்தினால், அருகில் இருக்கும் பல வயல்கள் மிகவும் செழிப்பாக வளர்ந்து, நல்ல பலனைத் தருகின்றன.

பாண்டியர்கள் ஆட்சிக்குப் பின், இந்தக் கோயிலைப் பராமரித்தவர்கள் தென்மலை ஜமீன் குடும்பத்தினர்கள் . தற்போது சிவகிரி ஜமீந்தார்கள் இந்தக் கோயில் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறார்கள்.

இங்கு இருக்கும் அம்மன், மிகச் சக்தியாக விளங்கி வருகிறாள்! குழந்தை இல்லாதவர்களும், விவாகம் ஆகாதவர்களும் இங்கு வந்து பிரார்த்திக்க, கை மேல் பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இந்த அம்மன் மேற்குத் திசை பார்த்து இருப்பதால் கிரியா சக்தியாகப் போற்றப்படுகிறாள். இந்த அம்மன், பசி என்று கேட்டுக் கறிஸ்தவக் காவலன் ஒருவனுக்குக் காட்சியளித்ததாக ஒரு கதையும் இருக்கிறது!

அந்தச் சுவையான வரலாறு…

இந்தக் கோயில், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், பாழடைந்து, பார்த்துக் கொள்ள ஒருவரும் இல்லாமல் இருக்கவே சிலர், காவலுக்காக இரண்டு பேரை அமர்த்தினர். காவலர்களில் ஒருவர் கிறிஸ்தவர்.

ஒருநாள் அதிகாலை வேளை, பிரும்ம முகூர்த்த நேரம் ஒரு சின்னப் பெண், சிவப்புப் பாவாடையுடன், காலில் கொலுசு ஒலிக்க வந்தாள். கிறிஸ்தவக் காவலனை அழைத்தாள். அவன் நன்றாக உறங்கிக் கொண்டிருக்க, அவனைத் தட்டி எழுப்பினாள். அவனும் பாதித் தூக்கத்தில், கண்களைக் கசக்கியபடி விழித்தான். எதிரே ஒரு குட்டிப்பெண். அழகாகப் புன்னகைக்கிறாள்.
"எனக்குப் பசிக்கிறது. நான் சாப்பிட்டுப் பல நாட்கள் ஆகின்றன. எனக்கு ஏதாவது தாருங்களேன்!" என்று கேட்கவும் செய்கிறாள்.

"கண்ணே! என்னிடம் இப்போது ஒன்றுமில்லையே! என்ன செய்ய?" என்றான் காவலன்.

"பரவாயில்லை! நாளைக்கு மறக்காமல் எனக்குச் சாப்பாடு எடுத்து வாருங்கள்!" என்றாள் சிறுமி.

"சரி பெண்ணே! நிச்சயமாக நாளை உனக்கு உணவு அளிக்கிறேன்" என்றான் காவலனும்.

தலையை ஆட்டியபடியே அந்தப் பெண் கோயிலினுள் சென்றாள். கருவறைக்குச் சென்ற பின் மறைந்துவிட்டாள். கிறிஸ்தவக் காவலன் மெய்மறந்து நின்றான். பின், எல்லோரையும் அழைத்து, இந்தச் சம்பவத்தைச் சொன்னான்.

"என்ன, அம்மனை இப்படிப் பிரசாதம் சமர்ப்பிக்காமல் பட்டினி போட்டுவிட்டீர்களே! இனியாவது தினப்படி பூஜையும் நைவேத்தியமும் ஆரம்பித்துக் கோயிலைப் பார்த்துக் கொள்ளுங்கள்! நான் இனி காவல் காக்க மாட்டேன். அம்பாளே தன்னைக் காத்துக் கொள்வாள்" என்றும் சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அவன் சொன்னபடி, இனி அம்மனுக்கு நைவேத்தியம் இல்லாமல் இருக்கக்கூடாது என்று எல்லோரும் தீர்மானித்தார்கள். அன்று முதல் பூஜைகள் திரும்பவும் நடக்க ஆரம்பித்துச், சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அம்மனே இந்தக் கோயிலைக் காக்கிறாள்.

பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஷ்டமி அன்றும் பக்தர்கள் மிகச் சிரத்தையுடன் கூடிப் பூஜை செய்து பிரார்த்திக்கிறார்கள். திரிபுர நாதரும் சிவபரிபூரணி அம்மனும் பக்தர்கள் வேண்டுகோளை நிறைவேற்றி வைக்கின்றனர்!

About The Author