அழகின் சிரிப்பில் (1)

புரட்சிக் கவிஞரின்

‘அழகின் சிரிப்பு’

புயல்,

ஒரு கோப்பை ஓய்வு

பருகிய இடம்!

மாற்றுடை அணிய

அவருடைய

யாப்பு

எடுத்துக் கொண்ட சில நொடிகள்!

கோரிக்கை வைத்த

இயற்கைக்கு அவர்

கொடுத்த கொடை!

தேர்தலுக்கு நின்றால்

இயற்கை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்

சின்னம்

அழகின் சிரிப்பு

களைப்படையாத

கவிதை மகள் முத்தமிடும்

கன்னம் அழகின் சிரிப்பு

அழகை

ஒப்பனைக் கூடங்களில்

தேடி அலையவில்லை கவிஞன்..

முலாம் பூசாத

நிலா முகத்தில்…

கடிவாளம் போடாத

கடலின் அலைகளில்

தண்டையணியாத பாதத்தோடு

தாவி வரும்

நதியில், அதன்

கதியில்…

ஒப்புக்குச் சிரிக்காத

உண்மை அழகைக் கண்டான்.

காற்றில்

அசைந்த நேரம் கொஞ்சம் – தளிர்கள்

அவன்

பாட்டில் அசைந்த நேரம் அதிகம்.

அந்த

முரட்டுக் கவிஞனைச்

சந்தித்துத் திரும்பும் கடல்

உரத்த

உற்சாகத்தோடு ஓடி அணைக்கும்…

இன்பத்தைக் கருத்தரிக்கும் கரைகள்.

அதன்

ஒற்றை அலையின்

முதுகில்

ஏறிவரும் நூறு நூறு மாணவர்கள்

பள்ளிக் கதவுகளைப்

படீரென்று திறப்பார்கள்!

விஷத்துக்குப் பிறந்த

அழகுக்கு

விலைமாதர் கண்களில்

தொட்டில்

வஞ்சகம்

பூவைத்துப் பொட்டுவைத்து அனுப்பிய

அழகுக்குச்

சிலந்தி வலைகளில் வேலை வாய்ப்பு!

நரிப்பண்ணையில்

மகசூலான அழகுக்கு…

நயவஞ்சகர் உதடுகளில்

பதவிப் பிரமாணம்!

இந்த

அழகுகளுக்கெல்லாம்,

வயசுக்கு வராத மானுடம்

ஒரு வாய்த் தீனி!

எனவே

எச்சரிக்கைக் கொடிகளைப்

பாட்டுக் கரை எங்கும்

ஏற்றி வைத்தான் கவிஞன்!

‘ நல்லழகு

வசப்பட்டால் துன்பம் இல்லை!’

About The Author