கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஒரு பழைய கதையின் புது வடிவம்

அவன் வேலை தேடி ஒரு கம்பெனிக்குச் சென்றான். இன்டர்வியூ முடிந்தபிறகு மேலாளர் சொன்னார், "உன்னை வேலைக்குத் தேர்ந்தெடுக்கிறோம். உனது மின்னஞ்சல் முகவரியைக் கொடு" என்று.

அவன் விழித்தவாறே, "என்னிடம் கம்ப்யூட்டரும் கிடையாது, எனக்கு மின்னஞ்சல் முகவரியும் கிடையாதே" என்றான் பரிதாபமாக.

மேனேஜர் அவனை அதிசயமாகப் பார்த்தவாறே சொன்னார். "என்ன! மின்னஞ்சல் கிடையாதா? அப்படியேன்றால் நீ உயிர் வாழ்கிறாய் என்று சொல்லவே லாயக்கில்லை. உனக்கு வேலை கிடையாது" என்றார்.

தன் விதியை நொந்தவாறு அவன் தன் கையிலிருந்த ஒரு நூறு ரூபாய் நோட்டைப் பார்த்தபடி "இனி என்ன செய்யப்போகிறோம்" என்று தெரியாமல் விழித்தான். அப்போது ஒருவன் கறிகாய் விற்பதைப் பார்த்துத் ‘தானும் இப்படி வியாபாரம் செய்தால் என்ன’ என்று யோசித்தான்.

ஐந்து கிலோ தக்காளி வாங்கி விற்றதில் அவனுடைய நூறு ரூபாய் நூற்றைம்பதாயிற்று. இப்படியே தொடர்ந்து வியாபாரம் செய்து கார், பங்களா என்று வாங்கிக் குவித்து நகரத்திலேயே பெரிய புள்ளியானான்.

அப்போது அவனுக்கு ஆயுள் காப்பீடு செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. ஆயுள் காப்பீட்டு முகவரிடம் செல்ல அவரும் ஒரு நல்ல திட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். எல்லாம் முடிந்த பிறகு அந்த முகவர், "உங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுங்கள்" என்று கேட்க, அவன் "எனக்குக் கம்ப்யூட்டரும் கிடையாது, மின்னஞ்சல் முகவரியும் கிடையாது" என்று சொன்னான்.

முகவர் ஆச்சரியத்துடன், "மின்னஞ்சல் கூட இல்லாமலே இவ்வளவு பெரிய நிலைக்கு வந்திருக்கிறீர்களே.. உங்களுக்கு மின்னஞ்சல் மட்டும் இருந்திருந்தால்…!" என்று கேட்டார்.

அதற்கு அவன் சொன்னான்,"மின்னஞ்சல் முகவரி இருந்திருந்தால் இன்று ஒரு கம்பெனியில் ஆபிஸ் பியூனாக இருந்திருப்பேன்" என்று.

மத்தியப் பிரதேசத்திற்குப் பக்கத்தில்

அருமையான ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் இருக்கின்ற பழக்கம் என்ன என்றால், அந்த மக்கள் தங்கள் கனவில் யாரையாவது திட்டி விட்டாலோ அல்லது அவர்களுக்கு ஊறு செய்து விட்டாலோ, மறுநாள் அவர்கள் வீட்டுக்குச் சென்று அந்த நபரிடம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு வருவார்களாம்.

நமது ஆழ்மனதில் இருக்கும் வெறுப்பினாலோ கோபத்தினாலோதான் கனவில் அவர்களுக்குக் கெடுதல் செய்கிறோம் என்ற மிகத் தெளிவான சத்தியம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

அதனால் உணர்வை நேராக்குவதற்காக, உணர்வைச் சீர் செய்து கொள்வதற்காக, கனவில் யாரையாவது காயப்படுத்தி விட்டால் கூட நனவிலே சென்று அவர்கள் காலிலே விழுந்து மன்னிப்பு கேட்பார்கள்.

(ஜீவன் முக்தி – பரமஹம்ச நித்யானந்தரின் அமுத மொழிகள்)

சி.சி.வி (சின்ன சின்ன விஷயங்கள்)

•  வெங்காயத்தை நறுக்கும்போது சூயிங்கத்தை மென்றால் கண்ணீர் வராதாமே!

•  ஒரு புதுப் பேனாவைக் கொடுத்தால் 97 சதவிகிதம் பேர் தங்களுடைய பெயரைத்தான் முதலில் எழுதிப் பார்ப்பார்கள்.

•  ஆண் கொசுக்கள் கடிப்பதில்லையாம். பெண் கொசுக்கள்தான் கடிக்கின்றனவாம் (கொசுக்களில் கூட அப்படியா?!!)

•  கனடாவில் தங்களுடைய புகைப்படத்தை தபால் தலையாக ஒட்டி கடிதங்களை அனுப்ப முடியுமாம்.

•  ஆறு மாதங்கள் வரை குழந்தைகள் ஒரே சமயத்தில் சுவாசிக்கவும் விழுங்கவும் முடியுமாம்.

•  ஒவ்வொருவருடைய நாக்கில் உள்ள ரேகைகள் கை ரேகைகளைப் போலவே தனித்தன்மை வாய்ந்தவை.

சின்ன வீடு ஏன்?

சிறியதாக ஒரு வீடு கட்ட அடித்தளம் போட்டுக் கொண்டிருந்தார் சாக்ரடீஸ். ஒருவர் கேட்டார். "மிகவும் புகழ் பெற்ற நீங்கள் ஏன் இவ்வளவு சிறியதாக ஒரு வீடு கட்டிக் கொள்கிறீர்கள்?"

"உண்மையான நண்பர்களால் மட்டுமே அதை நிறைக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை"
என்று சாக்ரடீஸ் பதிலளித்தார்.

ரோபோட்

கேரல் சேப்பக் செக்கொஸ்லோவொக்கியாவின் ஒரு பிரபல நாடகாசிரியர். அவர் எழுதிய ஒரு கேலி நாடகத்தின் பெயர் ரோபோட். ரோபோட் என்பதற்கு கொத்தடிமை என்று அர்த்தமாம். இதற்குப் பின் அமெரிக்க விஞ்ஞானியான ஐசக் ஆஸிமோவ் என்பவர் இந்த சொல்லை பிரபலப்படுத்த இது ஆங்கில வழக்கில் வந்துவிட்டது.

குவா குவா..

ஏழு மணிக்கே அரசு அலுவலகங்களில் விளக்கை அணைத்து விடுவார்கள். தங்களுடைய அலுவலக ஊழியர்களை விரைவில் வீட்டிற்கு அனுப்பி தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து குடும்பத்தை பெருக்கும்படி உற்சாகப்படுத்துகிறார்கள். இதெல்லாம் நடப்பது கொரியாவில்! அங்கு பிறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறதாம், ஜப்பானைவிட. மனித வளம் மிகவும் குறைந்து வருவதால் குழந்தைகள் பிறப்பை வரவேற்கிறார்கள். ஒரு குழந்தைக்கு மேல் இருந்தால் பரிசுகள் கூட வழங்கப் போகிறார்களாம்.

எளிமை

எனது இருப்பை அறிவிக்க
ஒரு சிறு கூவல்.
நான் இங்கு இருந்ததைக் கூற
ஒற்றைச்
சிறகுதிர்ப்பு
இனியும் இருப்பேன்
என்பதன் சாட்சியாய்
அடைகாத்தலின்
வெம்மை
எப்படி இயல்கிறது
பறவைகளுக்கு
இத்தனைச் சுருக்கமாய்
தங்கள் வாழ்வினைக் கூற?

(பி. பி. இராமசந்திரன் – ‘அங்கும் இங்கும்’ வலைப்பதிவு)

அன்றே சொன்னார்கள்!

அரசியலில் ஒதுங்கி நிற்கும் புத்திசாலிகள் முட்டாள்களால் ஆளப்படும் தண்டனை பெறுகிறார்கள். – ப்ளாட்டோ

வெற்றியின் ரகசியம்

பெரிய தொழிலதிபர் ஒருவரை பத்திரிகை நிருபர் பேட்டி காண வந்தார்.

நிரு : உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன? இரண்டே வார்த்தைகளில் சொல்லுங்களேன்?
தொ : நல்ல முடிவுகள்!
நிரு : அந்த நல்ல முடிவுகளை எப்படி எடுக்க முடிந்தது?
தொ : அனுபவம்தான்!
நிரு : அந்த அனுபவத்தை எப்படிப் பெற முடிந்தது?
தொ: கெட்ட முடிவுகள்!

நோபல் பரிசுபெற்ற இந்தியர்கள்

1913 – ரவீந்திரநாத் தாகூர் (இலக்கியம்)
1930 – சர்.சி.வி.ராமன் (இயற்பியல்)
1968 – ஹர்கோவிந்த் குரானா (உயிரியல், மருத்துவம்)
1979 – அன்னை தெரசா (அமைதி)
1983 – சுப்பிரமணியம் சந்திரசேகர் (இயற்பியல்)
1998 – அமர்த்தியா சென் (பொருளாதாரம்)
2001 – வி.எஸ்.நெய்பால் (இலக்கியம்)
2007 – ஆர்.கே.பச்சவுரி (அமைதி) (நிறுவனம் சார்பாக)
2009 – வெங்கடராமன் ராமகிருஷ்னன் (வேதியியல்)

தண்ணீர் தண்ணீர்!

நமது உடல் 60% நீரால் ஆனது. மூளையில் 70%ம், உடலெங்கும் ஓடும் ரத்தத்தில் 83%ம், நுரையீரலில் 90% நீர் நிறைந்திருக்கிறது. ஆகவே நாம் தண்ணீர் மனிதர்கள்தானே! உணவு இல்லாமல் கூட பல நாட்கள் இருந்து விட முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சராசரியாக மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஒரு மனித உயிரைத் தக்க வைக்க முடியாது.

About The Author

4 Comments

  1. Dr. S. Subramanian

    • வெங்காயத்தை நறுக்கும்போது சூயிங்கத்தை மென்றால் கண்ணீர் வராதாமே!
    I have an explanation for this. When you chew gum your salivary glands go to work overtime. When you cut onion your tear glands start to work. But the two glands are close together and when salivay glands work overtime the tear glands do not shed tears because the the water that is needed for the tears get diverted to the salivary glands due to the chewing.

  2. Dr. S. Subramanian

    கனடாவில் தங்களுடைய புகைப்படத்தை தபால் தலையாக ஒட்டி கடிதங்களை அனுப்ப முடியுமாம்.
    In the US too you can do so.

  3. mahadevan

    நல்ல கருதுக்களை கொடுத்தவர்களுக்கு ந்ன்றி நாம் தாராளமாக அருமை தெரியாமல் வீண் செய்யும் தண்ணீரின் மதிப்பு அற்புதம் ஜ. ப.ர அவர்க்ளே!

  4. இரா.சேகர்

    பயனுள்ள தகவல்கள் சுவையாகத் தரப்பட்டுள்ளன.நன்றி

Comments are closed.