கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

சமயோசிதம்

பனி பெய்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம். தெருக்களில் மக்கள் கூட்டம். நாஜி ஜெர்மனியின் ம்யூனிக் நகரம். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அந்தப் பேருந்தில் நிறைந்திருந்தார்கள்.

திடீரென்று அங்கு வந்த சில நாஜி சிப்பாய்கள் பேருந்தை சூழ்ந்து கொண்டனர். பஸ்ஸில் உள்ள ஒவ்வொருவரின் அடையாளச் சீட்டுகளையும் பரிசோதிக்க ஆரம்பித்தனர்.யூதர்களாயிருந்தால் பஸ்ஸிலிருந்து அவர்களை இறக்கி, வேறொரு வாகனத்தில் கண் காணாத இடத்திற்கு அழைத்துச் (இழுத்து!) செல்வார்கள் என்பது அங்கிருந்த எல்லோருக்குமே தெரியும்.

அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பெண்மணி மிகுந்த பயத்துடன் சிப்பாய்கள் சோதனை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் உள்ளூர நடுங்கிக் கொண்டிருந்தாள். கண்ணீர் வழிந்தோடியது. அவள் பக்கத்திலிருந்த ஒருவர் மெதுவாக அவளின் அழுகைக்குக் காரணம் கேட்டார்.

”நான் ஒரு யூத இனத்தவள். என்னை அழைத்துக் கொண்டு போய் விடுவார்களே!” என்று அழுது கொண்டே மெதுவாக அவர் காதில் கிசுகிசுத்தாள்.

பக்கத்திலிருந்த அவர் திடீரென உரத்த குரலில் கத்தத் தொடங்கினார். ”முட்டாள் பெண்மணியே! உன்னைப் பார்க்கும்போது எனக்குக் கோபமாக வருகிறது. என் பக்கத்தில் உட்காராதே, எழுந்து போ!” என்று கூச்சலிட்டுக் கத்தினார்.

சோதனை செய்து கொண்டிருந்த சிப்பாய்கள் ”ஏன் கத்துகிறீர்கள்?” எனக் காரணம் கேட்டார்கள். எரிச்சலுடன் அவர் சொன்னார், ”என் மனைவி இவள். தன்னுடைய அடையாளச் சீட்டினை மறந்து விட்டு வந்திருக்கிறாள்; இவளை எப்படித் திருத்துவதென்றே தெரியவில்லை. இவள் எப்போதும் இப்படித்தான்!”

சிப்பாய்கள் அவர்கள் சண்டையை ரசித்துச் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்கள்.

அந்தப் பெண்மணிக்கு தன்னை சமயோசிதமாகக் காப்பாற்றிய அந்த மனிதர் யாரென்றே தெரியாது.

(Invisible lines of connection by Lawrence Kushner – Stranger in the bus)

எல்லைகள் கடந்த தியாகக் கதை

கடந்த நூறு ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய 10 வெளிநாட்டவரில் ஒருவராக இந்திய டாக்டர் கோட்னிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருடைய சகோதரிகள் வத்ஸலா (82) அவர்களையும், மனோரமா கோட்னிஸ் (88) அவர்களையும் ஒரு விழாவில் சீனா கௌரவித்திருக்கிறது. டாக்டர் கோட்னீஸின் தியாகம் நிறைந்த கதை இதுதான்.

1938ம் ஆண்டில் ஜப்பானியர்களிடம் தோல்வியடைந்த சீன வீரர்கள் எங்கெங்கோ தஞ்சமடைந்து கொண்டிருந்தார்கள். பலருக்கு எந்த மருத்துவ உதவியுமே கிட்டாமல் மடிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கென இந்தியாவிலிருந்து ஐந்து பேர் கொண்ட ஒரு மருத்துவக் குழுவை நேரு அனுப்பி வைத்தார். அந்தக் குழுவில் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த டாகடர் கோட்னிசும் இருந்தார். அவர் அப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த மருத்துவர். தன் தொழிலைத் துறந்து ஜப்பானியர்களிடம் காயம்பட்டு வந்த சீன வீரர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.
ஜப்பானியர்களின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சீனத் துருப்புக்கள் சிதற, மற்ற இந்திய டாக்டர்கள் இந்தியாவுக்குத் திரும்பியபோதும், கோட்னீஸ் மட்டும் சீனாவிலேயே தங்கி விட்டார். அவருக்கு மருத்துவ சிகிச்சைகளில் உதவி செய்த குவோ கிலான் என்ற நர்சையே மணந்து கொண்டார்.

1948ம் ஆண்டில் சீனாவில் ஒரு மர்ம நோய் பரவியது. மருத்துவமனைகளில் நோயாளிகள் வந்து குவிந்தனர். அது என்ன வகை நோயென ஆராய்ச்சி செய்து அதற்கு மருந்தும் கண்டுபிடித்தார் கோட்னீஸ். ஆனால் அவரே அந்த நோய்க்கு பலியாகினார். இறக்கும்போது அவரது வயது 32 மட்டுமே!

மாசேதுங் மற்றும் பெரும் சீனத் தலைவர்கள் அவரின் தியாகத்தையும், சேவையையும் பாராட்டி ஒரு நினைவாலயமும் மருத்துவமனையும் அவர் பெயரில் எழுப்பியிருக்கிறார்கள்.

அவருடைய இந்த வரலாற்றை பிரபல டைரக்டர் சாந்தாராம் ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ (டாக்டர் கோட்னீசின் அமர காவியம்) என்ற ஒரு அருமையான திரைப்படமாகத் தயாரித்தார். கோட்னிஸின் வாழ்க்கையை, கே.ஏ.அப்பாஸ் என்ற பிரபல எழுத்தாளர் ஒரு அற்புதமான புத்தகமாக one who did not come back என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.

(ஆதாரங்கள்: செய்திக் குறிப்புகள் மற்றும் ரா.கிரங்கராஜன் அவர்களின் ‘நாலு மூலை’)

*****

தீக்குளிக்க வாரியளா?

ஒரு பெரிய நகரத்தின் முக்கியமான சாலையில் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்பட்டிருந்தது. அதில் சிக்கிக் கொண்ட ஒருவர் காரிலிருந்து வெளியே இறங்கி வந்து நின்று கொண்டிருந்தார். ஒரு சிறுவன் ஒவ்வொரு கார் அருகிலும் நின்று, அட்டைப் பெட்டி ஒன்றைக் குலுக்கியபடி ஏதோ கேட்டபடி வருவதைக் கவனித்தார். அவனைக் கூப்பிட்டு ”என்ன தம்பி. என்ன டிராபிக் நெருக்கடி?” என்று கேட்டார்.

”ஒரு கட்சித் தொண்டர் தன் மேலே பெட்ரோல் ஊற்றிக் கொண்டு நடு ரோட்டில் கிடக்கிறார். அவருடைய கட்சிக்குப் பெரும் நிதி வேண்டுமாம். அந்தத் தொகை சேராவிட்டால் தீ கொளுத்திக் கொண்டு செத்துப் போவேன் என்கிறார். அவருக்காகத்தான் கலெக்ஷன் செய்கிறேன்” என்றான் அந்தப் பையன்.

”இது வரை கலெக்ஷன் எவ்வளவு?” என்று கேட்டார் அவர்.

”ஏழு தீப்பெட்டியும் இரண்டு சிகரெட் லைட்டரும், சார்!” என்று பதில் வந்தது.

(ரா.கி ரங்கராஜனின் ‘நாலு மூலை’ தொகுப்பிலிருந்து)

தென்கச்சியின் நகைச்சுவை

அமரர் தென்கச்சி சுவாமிநாதன் ஒருமுறை குற்றாலத்துக்கு நண்பர்களுடன் போயிருந்தார். நண்பர்கள் செங்குத்தான ஒரு பாறையைக் காட்டி அதில் ஏறி நின்று தங்களுக்கு ‘இன்று ஒரு தகவல்’ சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். அதற்குத் தென்கச்சியார் தன் வழக்கமான பாணியில் சொன்ன பதில்: ”அதன் மேல் நான் ஏறினால் நீங்கள்தான் தகவல் சொல்ல வேண்டியிருக்கும்” (சுப.தங்கவேலன் சொன்ன தகவல்)

*****

About The Author

1 Comment

  1. indhumathi.t.v.

    மிக மிக நன்மை பயக்கும் செய்திகள்

Comments are closed.