கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நீயும் நானும்தான்.

ஒரு அறிஞர் சாலைகளைப் பெருக்கி சுத்தப்படுத்துபவனொருவனைச் சந்தித்தார்.

“ஐயோ பாவம்! உன்னைப் பார்த்தால் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. உன்னுடைய வேலை ரொம்பக் கஷ்டமானது, அசிங்கமானது” என்றார் அவர்.

“ஆமாம் ஐயா!" என்று ஒப்புக்கொண்டான் அவன். "நீங்கள் என் மீது பரிதாபப்பட்டதற்கு ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று விசாரித்தான்.

“நான் மனிதர்களைப் படிக்கிறேன், அவர்களுடைய மனதைப் படிக்கிறேன். அவர்களுடைய செயல்களைப் படிக்கிறேன்” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனார் அவர்.

இதைக் கேட்டதும் அந்த ஆள் மெல்ல சிரித்தபடி, ”நீங்களும் ஒரு ஐயோ பாவம்தான்! உங்களைப் பார்த்து நானும் பரிதாபப்படுகிறேன்” என்றான் அவன்.

(கலீல் கிப்ரான் – தமிழில் “என் சொக்கன் மிட்டாய்க் கதைகள்”)

********

சிபாரிசுக்குத் தடா!

காமராஜர் முதல்வராக இருந்தபோது அவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் தன்னுடைய புதல்விக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என சிபாரிசுக்காகக் சென்றார்.

“ஒவ்வொரு மந்திரிக்கும் பத்து பதினைந்து கோட்டா உண்டாம். உங்களுக்குச் சற்று அதிகமாகவே உண்டாமே?” என்று கேட்டார் வந்தவர்.

உடனே காமராஜர் சொன்னார். ”நீங்கள் படித்தவராக இருக்கிறீர்கள். நான் வெளியூரிலிருந்து வந்ததும் என்னைப் பார்க்க வருகிறீர்கள். விவரம் தெரிந்தவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? அட்மிஷனுக்கு என்று ஒரு முறை உண்டு. ஒரு கமிட்டி உண்டு. அவர்கள்தான் அட்மிஷன் குறித்து முடிவு செய்வார்கள். இப்படி ஒரு கமிட்டி அமைத்து விட்டு இன்னொரு புறம் சிபாரிசு செய்தால் எப்படி? இது நியாயமில்லையே? இப்போது நீங்கள் போய் “முதல்வரைப் பார்த்தேன், அட்மிஷன் கிடைத்து விட்டது” என்று கூறினால் அது பரவி ஒரு தப்பான எண்ணம் ஏற்பட்டு விடும். மனசாட்சிப்படி முறையோடு நடந்து கொள்ள வேண்டும். அதுதான் நல்லது. முறைப்படி முயற்சி செய்யுங்கள்” என்று அனுப்பி விட்டார்.

(இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய “பெருந்தலைவர் – நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் 110“ என்ற புத்தகத்திலிருந்து)

********

மந்திரக் கோணி

‘புதிய தலைமுறை’ தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய, இனிய, வரவு. 64 பக்கங்கள். இந்தியா டுடே அளவு. அதற்கு இணையான வழவழ தாள்கள். ஐந்தே ரூபாய் விலைக்கு அச்சு பிச்சு என்று இல்லாத தரமான, சுவையான, பயனுள்ள பல கட்டுரைகள். மாலனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் இந்தப் பத்திரிகையை எடுத்தால் கீழே வைக்க மனம் வரவில்லை. சமீப இதழில் வெளியான ஒரு கட்டுரையிலிருந்து:

“நிறையப் பேர் எனக்கு தீங்கிழைத்துள்ளார்கள். அவர்களைப் பழி வாங்க வேண்டும். ஒரு மந்திரம் சொல்லுங்கள்” என்று ஒரு துறவியிடம் வந்தான் சீடன்.

சாமியார் ஒரு கோணிப்பையை அவன் கையில் கொடுத்தார். “யாரையெல்லாம் பழி வாங்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அவர்கள் பெயரையெல்லாம், ஒரு உருளைக் கிழங்கில் செதுக்கி இந்தக் கோணிக்குள் போட்டு வா” என்றார் துறவி. ஆனால் இரண்டு நிபந்தனைகள். “ஒரு உருளைக் கிழங்கில் ஒரு பெயர்தான் செதுக்க வேண்டும். தவிர, நீ எங்கெல்லாம் போகிறாயோ, அங்கெல்லாம் இந்த கோணிப்பையைத் தூக்கிக் கொண்டு போக வேண்டும்.”

அப்படியே செய்து வந்தான் சீடன். ஆரம்பத்தில் சிரமம் தெரியவில்லை. ஆனால், நாளாக ஆக, அது சுமையாகத் தோன்றியது. இன்னும் கொஞ்ச நாள் போனதும் தூக்குவதே சிரமமாகி விட்டது.

இதனிடையே சில நாட்களில், மூட்டையிலிருந்து நாற்றம் வர ஆரம்பித்து விட்டது. அவன் வந்தாலே, மனைவி, பிள்ளைகள் உட்பட அனைவரும் ஓடிப் போக ஆரம்பித்தார்கள். சீடன் குருவிடம் ஓடி வந்தான்.

“புரிந்து கொண்டேன், சாமி. பழி வாங்கும் குரோத உணர்வை சேகரித்துக் கொண்டே வந்தால், அது ஒரு சுமையாகி விடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வர மாட்டார்கள்.”

”தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இன்னும் இருக்கிறது” என்றார் துறவி. “பிரச்சினை உருளைக்கிழங்கில் இல்லை.கோணிப்பை. கோணிப்பை இருப்பதனால்தானே அதில் உருளைக் கிழங்கை சேகரிக்க ஆரம்பித்தாய்? உனக்கு சுமை இல்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றம் எடுக்காமல் இருக்க வேண்டுமானால்,கோணியை முதலில் தூக்கி எறி.”

“கை விட வேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டும் அல்ல; பழி வாங்கும் மனதையும் கூட” என்பதை சீடன் புரிந்து கொண்டான்.

இந்த ”சிந்தனை” பகுதியை தாவோ என்பவர் எழுதியுள்ளார்.

*********

பாபர் பள்ளி

மேற்கு வங்கத்தில் உள்ள மூர்ஷிதாபத் என்ற கிராமத்தில் பாபர் அலி என்ற சிறுவன் தன் வீட்டிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு பள்ளியில் படித்து விட்டு பின் வீடு திரும்பியதும் அங்குள்ள குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லித் தருகிறான். அவன் ஆரம்பித்த இந்தப் பணி இன்று 600 குழந்தைகளுக்கு ஒரு பள்ளியாகி விட்டது. அவன் நண்பர்களும் கூட இந்தப் பணியில் அவனுக்குத் துணையாக இருக்கிறார்கள். நல்லது செய்வதற்கு வயது தடையா என்ன?

About The Author

2 Comments

  1. singivi

    வணக்கம் அனைத்தும் நல்ல செய்தி தொடர்க,

  2. ashraf ali

    ஒரு சிறுவன் பாடம் நடத்தும் பாபர் பள்ளியில் 600 மாணவர்களா.மாஷா அல்லா.

Comments are closed.