காளித்தம்பியின் கதை (11)

சுந்தரேசர் உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் பெயர் சங்கரலிங்கம். அவர்தான் அந்தப் பள்ளியின் என்.சி.சி ஆபீஸர். டிசம்பர் விடுமுறையில் என்.சி.சி ஆபீஸர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்று சென்னையில் நடந்தது. சங்கரலிங்கம் அதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்திருந்தார். முகாம் முடியும்போது, மாமல்லபுரத்திற்கு உல்லாசப் பயணம் ஒன்றை ஏற்படுத்தினர். அந்த உல்லாசப் பயணக் குழுவினருடன்தான் சங்கரலிங்கமும் மாமல்லபுரத்திற்கு வந்தார். எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு இறுதியாகக் கடற்கரைக் கோவிலுக்கு வந்தார். கோவிலைப் பார்த்துவிட்டு, கோவிலின் கடலைப் பார்த்த வாயில் வழியாக இறங்கினார். அவருடன் வேறு சிலரும் இருந்தனர்.

சங்கரலிங்கம், கரையில் ‘ஓ’ எனும் பேரொலியுடன் மோதிச் சிதறும் அலைகளின் அழகையும் ஆவேசத்தையும் கண்டு ரசித்தவராகக் கரையை நெருங்கினார். கரையை ஒட்டிய பாறையின்மீது அமர்ந்திருந்த இரு சிறுவர்களைத் தற்செயலாகப் பார்த்தார். அவர் வியப்படைந்தார். சிறுவர்கள் இருவரில் ஒருவன் பழனியைப்போல் இருந்தான். சங்கரலிங்கம் மீண்டும் அவனைப் பார்த்தார். ஆம்! அவன் பழனியேதான்! சுந்தரேசரின் ஒரே மகன் – ஒப்புயர்வற்ற மாணவ மாணிக்கம் பழனியேதான். சங்கரலிங்கம் பழனியை நோக்கி நடந்தார்.

தலைமை ஆசிரியர் தன்னை நோக்கி வருவதைப் பழனி பார்த்து விட்டான். உடனே எழுந்தான். "காளி! கொஞ்சம் இரு. இதோ வருகிறேன்" என்று கூறிவிட்டுத் தன்னை நோக்கி வரும் தலைமை ஆசிரியரை அணுகிக் கைகூப்பி வணங்கினான். தலைமை ஆசிரியர், வியப்புத் தாளாமல், "பழனியா? நான் பார்ப்பது பழனியைத்தானா?" என்று பதறிக் கேட்டார்.

சங்கரலிங்கம் அப்படிக் கேட்டதற்குக் காரணம், பழனியின் தற்போதைய தோற்றம்தான். தந்தமும் தங்கமும் கலந்து செய்ததைப்போன்ற அழகான உடல் சற்றுக் கறுத்திருந்தது. வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்ற வலிமை பெற்ற உடல் மெலிந்திருந்தது. அறிவு ஒளிவீசும் கண்கள் சற்றே உள்நோக்கிச் சென்றிருந்தன. விலை உயர்ந்த டெரிகாட் சட்டைக்குப் பதில் முரட்டுத் துணியாலான சட்டை போட்டுக் கொண்டிருந்தான். கையிலே வாட்ச் இல்லை. விரலிலே மோதிரமும் இல்லை. கழுத்திலே மெல்லிய தங்கச் சரடு இல்லை. காலிலே பளபளவென்று மின்னும் பூட்ஸ் இல்லை.

இப்படிப்பட்ட கோலத்திலே பழனியைப் பார்த்ததாக அரிச்சந்திரனே வந்து சத்தியம் செய்து சொல்லியிருந்தாலும் அவர் நம்பியிருக்க மாட்டார். பழனியின் டிரான்ஸ்பர் சர்ட்டிபிகேட் கேட்ட சுந்தரேசர், பழனி கோவையில் தன் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்கப் போகிறான் என்று மட்டுமே சொன்னார். மற்ற விவரங்கள் அவருக்குத் தெரியாது. எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத தோற்றத்தில் பழனியைக் கண்ட அவர் திகைத்தார். வியந்தார். கண் கலங்கினார்.

பழனி ஆசிரியரின் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, “சார்! உங்களுக்கு லட்சியத்தில் நம்பிக்கை உண்டா? ஒருவன் தன் குறிக்கோளை எப்பாடு பட்டாவது நிறைவேற்ற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?” என்று கேட்டான்.

இந்தக் கேள்வியைப் பழனி ஏன் கேட்கிறான் என்பது சங்கரலிங்கத்துக்குப் புரியவில்லை. என்றாலும் "பழனி, ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒரு இலட்சியம் இருக்கத்தான் வேண்டும். அதை நிறைவேற்றவே ஒவ்வொருவனும் முயல வேண்டும். இதை நான் எப்போதும் ஒப்புக்கொள்வேன்" என்றார்.

"அப்படியானால் தயவுசெய்து என்னை இங்கே பார்த்ததை யாரிடமும் சொல்லாதீர்கள்" என்று கேட்டுக் கொண்டான் பழனி.

"ஏன் பழனி? எதற்காக இப்படிச் சொல்கிறாய்? நீ இங்கே இருப்பது உன் அப்பாவுக்குத் தெரியாதா? நீ இங்கே என்ன செய்கிறாய்? உன்னுடன் உட்கார்ந்திருந்த பையன் யார்?" என்று பல கேள்விகளை ஒரே மூச்சில் கேட்டுத் தீர்த்தார் சங்கரலிங்கம்.

"சார், நான் பெற்றோரின் அனுமதியுடன் வந்தேன். ஆனால் நான் இங்கே இருப்பது அவர்களுக்குத் தெரியாது. எனக்கு ஒரு இலட்சியம் இருக்கிறது. அதை நிறைவேற்றவே இங்கிருக்கிறேன். என்னுடன் இருப்பவன் என் நண்பன். சார், என் லட்சியம் என்ன, அதை எப்படி நிறைவேற்றப் போகிறேன் என்ற விஷயங்களைத் தயவுசெய்து கேட்காதீர்கள். என்னைப் பார்த்ததைத் தயவுசெய்து யாரிடமும் சொல்லவேண்டாம் சார்" என்றான் பழனி.

பழனி சொன்னவை யாவும் சங்கரலிங்கத்திற்குப் புதிர்களாகத் தோன்றின. அவர் பழனியை வற்புறுத்துவதில் பயன் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டார். "சரி பழனி! உன்னைப் பார்த்ததை நான் யாரிடமும் கூறமாட்டேன். இது நிச்சயம்" என்றார்.

"நன்றி சார்! நான் வருகிறேன். வணக்கம்" என்று கூறி, வணங்கிவிட்டுப் பழனி, காளியிடம் திரும்பிச் சென்றான். "காளி, நாம் போகலாமா?" என்று கேட்டான். காளி உடனே எழுந்தான். இருவரும் கடற்கரையை விட்டு வெளியேறினர்.

தான் தலைமை ஆசிரியரிடம் பேசியதைப் பற்றிக் காளி கேட்பான் என்று எதிர்பார்த்தான் பழனி. பழனியும் சங்கரலிங்கமும் என்ன பேசினார்கள் என்பது காளிக்குத் தெரியாது. ஆனாலும் அதைப் பற்றி காளி ஒன்றுமே கேட்டுக் கொள்ளவில்லை. பழனியும் காளியும் அன்றே சென்னைக்கு வந்தனர்.

‘மல்லிகை’ இதழ் ஒரு தொடர்கதைப் போட்டி வைத்திருந்தது. பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய். பழனி அதில் கலந்துகொள்ள விரும்பினான். காளி அவனை ஊக்கினான். அந்த விடுமுறையில் பழனி தொடர்கதை எழுதி அனுப்பும் வேலையில் ஈடுபட்டான்.

விடுமுறை முடிந்தது. ஜனவரி முதல் வாரத்தில் பள்ளி திறந்தார்கள். இன்னும் மூன்று மாதங்கள். பிறகு தேர்வு வரும். அதில் முதல் மார்க்கு எடுக்கவேண்டும் அல்லவா? பழனி முன்பு படித்ததைவிட மிக அக்கறையோடு ஆழ்ந்து படிக்கலானான்.

பிப்ரவரி மாதம் வந்தது. அன்று வெள்ளிக்கிழமை. மாலை, பள்ளி முடிந்ததும் பழனி வீட்டுக்குப் போகத் தன் சைக்கிளை எடுத்தான். அப்போது செல்வமணி பழனியைத் தேடிவந்தான்.

இந்தச் செல்வமணி யார் தெரியுமா?

இவனும் பழனி படிக்கும் அதே வகுப்பில் படிப்பவன்தான். இவன், பெயரில் செல்வம் இருந்தது. ஆனால், வீட்டில் செல்வம் இல்லை. ஏழையிலும் பரம ஏழை. ஒருநாள் பகல், பழனி சாப்பாட்டுக்காக வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். அப்போது செல்வமணி அவனைத் தேடி வந்தான்.

"பழனி, சமூக அறிவியல் வினா – விடை தயார் செய்து வைத்திருந்தாயே அதைத் தருகிறாயா? நான் எழுதிக்கொண்டு தருகிறேன்" என்று கேட்டான் செல்வமணி.

உடனே பழனி சைக்கிளின் பின்னால் கட்டியிருந்த புத்தகக் கட்டை அவிழ்த்தான். போஸ்டர் பேப்பரில் தைத்திருந்த ஒரு நோட்டை எடுத்துச் செல்வமணியிடம் கொடுத்தான். செல்வமணி அதை எடுத்துக் கொண்டு அருகே இருந்த மரத்தடியில் போய் அமர்ந்தான். பழனி சைக்கிளில் சாப்பிடச் சென்றான். ஒன்றே முக்கால் மணிக்குப் பழனி திரும்பவும் பள்ளிக்கு வந்தான். சைக்கிளை நிறுத்தும்போதே செல்வமணி மரத்தடியில் இன்னும் எழுதிக்கொண்டிருப்பதைக் கண்டான்.

பழனி சைக்கிளை நிறுத்திவிட்டுச் சென்றான். செல்வமணி அப்போதுதான் எழுதி முடித்தான். பழனியிடம் அவனுடைய நோட்டை நன்றியுடன் திருப்பிக் கொடுத்தான். நோட்டைப் பெற்றுக்கொண்டான் பழனி. பிறகு, "செல்வமணி! எல்லாம் எழுதிக்கொண்டாயா?" என்று கேட்டான்.

"இல்லை. முதல் ஐந்து பாடத்தில் வினா – விடை எழுதிக்கொண்டேன். இன்னும் இரண்டு பாடங்களுக்கு எழுதவேண்டும். நாளைக்கு எழுதிக்கொள்கிறேன்" என்று சொன்னான் செல்வமணி.

"ஆமாம், நீ சாப்பிட்டாயா?" என்று கேட்டான் பழனி.

உடனே செல்வமணி அவசர அவரசமாக “ஓ சாப்பிட்டேனே! நீ போன உடனே நான் சாப்பிட்டு விட்டேன்” என்றான்.

பழனி செல்வமணியை உற்றுப் பார்த்தான். அவன் முகத்தில் சாப்பிட்ட களை இருப்பதாகத் தோன்றவில்லை. மாறாகப் பசியின் சோர்வு அவனிடத்தில் இருந்தது. பழனி தன் நோட்டை ஒருமுறை புரட்டிப் பார்த்தான். பிறகு, "செல்வமணி, நீ பொய் சொல்கிறாய். ஐந்து பாடங்கள் மொத்தம் இருபது பக்கங்கள். இதை எழுதவே குறைந்தது முக்கால்மணி நேரம் பிடிக்கும். அப்படியிருக்க நீ சாப்பிடுவதற்கு ஏது நேரம்? செல்வமணி, எனக்காக ஒரு வேலை செய்கிறாயா?"

ஓ! உனக்காக எந்த வேலை வேண்டுமானாலும் செய்கிறேன்” என்றான் செல்வமணி.
"அப்படியானால் என்னுடன் வா" என்றான் பழனி. செல்வமணி ஒன்றும் புரியாமல் பழனியுடன் சென்றான்.

பள்ளி அருகே ஒரு தேநீர்க்கடை இருந்தது. பழனி செல்வமணியை அங்கே அழைத்துச் சென்றபோதுதான் செல்வமணிக்கு விஷயம் புரிந்தது. அவன் சாப்பிடவில்லை என்பதற்காக அவனுக்குச் சிற்றுண்டி வாங்கித் தர அழைத்து வந்துள்ளான். இதைப் புரிந்து கொண்ட செல்வமணி கடைக்குள் நுழையாமல் வெளியே நின்றான்.

"செல்வமணி, ஏன் நின்றுவிட்டாய்? எனக்காக ஒரு வேலை செய்வதாக இப்போதுதானே சொன்னாய்? நான் ஒன்றும் பெரிய வேலை தரவில்லை. கொஞ்சம் உன் வயிற்றை நிரப்பிக்கொள். அதுதான் எனக்காக நீ செய்யவேண்டிய வேலை" என்றான் பழனி.

செல்வமணி எத்தனை மறுத்தும் பயனில்லை. பழனியின் வேண்டுகோளுக்கு இணங்குவது தவிர வேறு வழியில்லை. அதனால் பழனி அன்போடு வாங்கித் தந்த சிற்றுண்டியைச் சாப்பிட்டான்.

செல்வமணியின் வீடு பள்ளியிலிருந்து ஒன்றரை மைல் தூரத்திலிருந்த குசப்பேட்டையில் இருந்தது. அங்கே ஒரு சின்னக் குடிசையில் செல்வமணி வசித்தான். அவனுக்கு அப்பா இல்லை. அம்மா வீட்டு வேலை செய்து மகனைக் காப்பாற்றி வந்தாள். வீட்டு வேலை முடித்தபிறகுதான் சமைப்பாள். பகல் சாப்பாட்டுக்கே செல்வமணி மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து போய் நடந்து வர முடியாது. இரவில் ஏதாவது சாதம் மீதியானால் அதைக் கட்டிக்கொண்டு வருவான். இல்லையானால் அம்மா தரும் கால் ரூபாய், அரை ரூபாய்க்கு ஏதாவது வாங்கிச் சாப்பிடுவான். அன்று அந்தக் காசும் இல்லை. அதனால் செல்வமணி சாப்பிட முடியவில்லை.

இதையெல்லாம் செல்வமணியிடமிருந்து பழனி தெரிந்து கொண்டான். எப்படிப்பட்ட வறுமை! "கொடிது கொடிது வறுமை கொடிது! அதனினும் கொடிது இளமையில் வறுமை" என்பது நூற்றுக்கு நூறு உண்மையல்லவா? செல்வமணியின் வாழ்க்கை அவன் உள்ளத்தை உருக்கியது.

"பகலில் வீட்டுக்குப் போனால் சாப்பிடும் சாப்பாட்டை, நான் சாயந்திரம் போய்ச் சாப்பிட்டுக் கொள்வேன். எனக்கு இது பழக்கமாகிவிட்டது. அதனால் நீ வருந்தாதே" என்றான் செல்வமணி.

"செல்வமணி, என்னிடம் சைக்கிள் இருக்கிறது. பகலில் இது எனக்குத் தேவையில்லை. நான் சாப்பிடும் இடத்துக்கு நடந்துபோனால் கூட ஐந்து நிமிஷத்துக்கு மேல் ஆகாது. அதனால் இனிமேல் தினமும் என் சைக்கிளை எடுத்துக் கொண்டு போ. சாப்பிட்டுவிட்டுச் சைக்கிளில் வந்து விடு. பசியோடு படித்தே நல்ல மார்க்கு வாங்குகிறாய். பசியில்லாமல் படித்தால் இன்னும் நிறைய மார்க்கு வாங்குவாய்" என்றான் பழனி.

அன்று முதல் செல்வமணி, பகல் மணி அடித்ததும் பழனியின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போவான். வீட்டில் சாதமோ, பிற வீடுகளில் கிடைத்த இட்லி தோசையோ இருக்கும். அதைச் சாப்பிட்டு விட்டுத் தெம்போடு திரும்புவான்.

அந்தச் செல்வமணிதான் அன்று மாலை பழனி வீட்டுக்குப் போகும்போது அவனிடம் வந்தான்.

"என்ன செல்வமணி, வீட்டுக்குப் போகவில்லையா?" என்று கேட்டான்.

"வீட்டுக்குத்தான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பழனி, எங்க பெரியம்மா திருவொற்றியூரில் இருக்காங்க. அவங்களுக்கு எங்கம்மா ஏதோ பணம் தரவேண்டுமாம். அதை என்னை எடுத்துக்கொண்டு போய்க் கொடுக்குமாறு சொன்னாங்க. நாளைக்குச் சனிக்கிழமைதானே. அதனால் நாளைக்குப் போகலாம் என்று நினைக்கிறேன். பஸ்ஸில் போனால் நிறையச் செலவாகும். முடியுமானால் உன் சைக்கிளைக் கொடு. அதை மாலை நாலுமணிக்குள் திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து விடுகிறேன்" என்றான் செல்வமணி.

"நாளைக்குக் காலையில் வா. சைக்கிளைத் தருகிறேன். ஆனால் நாலு மணிக்குள் கொண்டுவந்து கொடுத்துவிட வேண்டும்" என்று சொன்னான் பழனி.

செல்வமணி மகிழ்ச்சியோடு வீட்டுக்குப் போனான்.

பழனி அன்று மாலை ஏஜென்ஸிக்குச் சென்றான். அன்று பேப்பர் வரக் கொஞ்சம் நேரமாகி விட்டது. அதனால் சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பழனி புறப்படும்போதே மணி ஏழு இருக்கும். வெகு வேகமாக சைக்கிளை மிதித்துக் கொண்டு சென்றான் பழனி. சூளை வந்ததும் மடமடவென்று கடைகளுக்குப் பத்திரிகை விநியோகம் செய்துகொண்டே வந்தான். அங்காளம்மன் கோயில் தெருவில் ஒரு கடைமுன் சைக்கிளை நிறுத்தினான். பத்திரிகையைக் கடையில் கொடுக்க வேண்டும். பத்திரிகைக் கடையில் கொஞ்சம் கூட்டம் இருந்தது. அதனால் கடைக்காரன் சற்று தாமதித்துப் பத்திரிகையைப் பெற்றுக்கொண்டு, பணத்தைக் கொடுத்தான். பழனி அதை வாங்கிக் கொண்டு திரும்பினான். அவனுக்குப் ‘பகீர்’ என்றது. கடைக்கு முன்னே நிற்க வைத்திருந்த சைக்கிளைக் காணோம். அதில் மற்ற கடைகளுக்குப் போட வேண்டிய பேப்பரும் இருந்தது. பழனி என்ன செய்வான்?

ஒவ்வொரு கடையிலும் சைக்கிளைப் பூட்டிவைத்துப் பிறகு திறப்பதால் வேலை தாமதமாகும். அதனால் அவன் கடை முன் சைக்கிளை வைக்கும்போது அதைப் பூட்டுவதில்லை. ஆனால், இப்படி நேரும் என்று பழனி நினைக்கவேயில்லை.

அருகே இருந்தவர்களைக் கேட்டான். அவர்கள் செய்தித்தாளில் இருந்த காரசாரமான செய்திகளில் மூழ்கி இருந்தார்களே தவிர சைக்கிளைக் கவனிக்கவில்லை. போலீசில் புகார் செய்யலாம் என்று பழனி கிளம்பினான்.

செல்வமணி மறுநாள் சைக்கிள் கேட்டது நினைவுக்கு வந்தது. அவனுக்குச் சைக்கிள் தரமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டான். இன்னொரு சைக்கிள் வாங்குவது என்பது எளிதல்லவே. அதையும் நினைத்தான். இத்தகைய நினைவுகளுடன் போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் சென்றான்.

நான்கைந்து தெருக்களைக் கடந்ததும் ஒரு சந்து. அதில் நுழைந்து சென்றான். சந்தின் மூலையில் ஒரு சைக்கிள் இருப்பதைப் பார்த்தான். "கடவுளே! அது என் சைக்கிளாக இருக்கக்கூடாதா?" என்று நினைத்துக்கொண்டே அதன் அருகே ஓடினான். அது அவன் சைக்கிள்தான். சைக்கிளின் பின்னே பேப்பர் கட்டு அப்படியே இருந்தது. சைக்கிளில் மாட்டியிருந்த பையும் அப்படியே இருந்தது. பழனி சுற்றுமுற்றும் பார்த்தான். அந்தச் சந்தில் யாருமில்லை. கடைமுன் விட்ட சைக்கிளை இங்கே கொண்டு வந்துவிட்ட திருடன் யார்? திருடன் என்றால் சைக்கிளை இங்கேயே ஏன் விட்டுவிட்டுப் போகவேண்டும்? பேப்பர், பை முதலிய யாவும் வைத்தபடியே இருக்கின்றனவே?

பழனிக்கு இப்படியே சிந்தித்துக்கொண்டு நிற்கவோ, துப்பறியும் வேலை செய்து திருடனைக் கண்டுபிடிக்கவோ நேரமில்லை. இன்னும் இருக்கும் கடைகளுக்குப் பேப்பர் போட வேண்டாமா? "திருடியவன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். சைக்கிளை இங்கே விட்டுவிட்டுப் போனானே, அதுவரையில் அவனுக்கு நன்றி" என்று சொல்லிவிட்டுத் தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு போனான் பழனி.

மறுநாள் செல்வமணி வந்தான். சைக்கிளை அவனிடம் கொடுத்தான் பழனி. ஞாபகமாக, "செல்வமணி! சைக்கிளை நிறுத்தும்போது அதைப் பூட்டிவை" என்று சொல்லி அனுப்பினான்.

திங்கட்கிழமையன்றுதான் பழனிக்கு யார் சைக்கிளை எடுத்துச் சென்றது என்பது தெரியும். மாணவர் தலைவன் தேர்தலில் தோற்ற நாவுக்கரசு சூளை அஷ்டபுஜம் சாலையில் இருப்பவன். அவன் வெள்ளிக்கிழமை மாலை பேப்பர் கடையில் சைக்கிளைப் பார்த்தான். அவனுக்குப் பழனியைப் பிடிக்காது. அவன் துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்கச் சைக்கிளை அங்கிருந்து எடுத்துச்சென்று வேறு சந்தில் விட்டுவிட்டான். இதைப் பெரிய வீரச்செயலைப் போலத் தன் நண்பன் ஒருவனிடம் வர்ணித்துக் கொண்டிருந்ததைச் செல்வமணி கேட்டு விட்டான். அவன் உடனே அதைப் பழனியிடம் சொல்லவில்லை. நேரே தலைமையாசிரியரிடம் போய்ச் சொல்லிவிட்டான். தலைமை ஆசிரியர் உடனே பழனியை அழைத்துச் சைக்கிள் காணாமற்போனது உண்மைதானா என்று விசாரித்தார். பழனி, நடந்ததைச் சொன்னான். சைக்கிளை எடுத்தவன் யார் என்பது தெரியாது என்றும் சொன்னான். தலைமை ஆசிரியர் நாவுக்கரசை அழைத்து விசாரித்தார். நாவுக்கரசு உண்மையை ஒப்புக்கொண்டான்.

தலைமை ஆசிரியர் கடுங்கோபம் கொண்டார். "நாவுக்கரசு! இதுபோல் ஏதாவது இனிமேல் செய்தாயோ, உன்னைப் பள்ளியில் இருந்தே விலக்கிவிடுவேன்" என்று எச்சரித்தார். அது மட்டுமா, நாவுக்கரசின் தந்தையை வரவழைத்து, அதே மாதிரி எச்சரித்தார். நாவுக்கரசின் தந்தை நாவுக்கரசை நையப்புடைத்தார்.

நாவுக்கரசின் கோபமெல்லாம் பழனியின் மீது திரும்பியது. அவன் மீது நாவுக்கரசு கொண்ட பகை, குறைவதற்குப் பதில் வளர்ந்தது. சமயம் கிடைக்கும்போது பழிக்குப் பழி வாங்கத் திட்டமிட்டான்.

பிப்ரவரி சென்றது. மார்ச் வந்தது. பழனி ஒரு நொடியையும் வீணாக்காது படித்து வந்தான். மார்ச் கடைசி வாரத்தில் ஆண்டுத் தேர்வு. அதில் முதல் மார்க்கு வாங்க வேண்டுமல்லவா? மார்ச் இரண்டாவது வாரத்தில் பழனியின் உள்ளம் மகிழ்ச்சியால் நிறையும் நிகழ்ச்சி நடந்தது. மல்லிகை தொடர்கதைப் போட்டியில் காளித்தம்பியின் கதை பரிசு பெற்றது. அதே இதழில் காளித்தம்பி எழுதிய பரிசுத் தொடர்கதை ஆரம்பமானது. பழனியை மாணவர்களெல்லாம் பாராட்டினர். ஆசிரியர்கள் பாராட்டினர். தலைமை ஆசிரியர் இறைவழிபாடு நடக்கும்போது பழனிக்கு மாலையிட்டுப் பாராட்டினார்.

பழனி மகிழ்ச்சியில் மிதந்தான். அவன் எழுதிய கதை தன் சிறப்பால் பரிசு பெற்றது. தந்தையின் பொருளால் புகழால் பரிசு கிடைத்தது என்று சொல்ல முடியுமா? நினைக்கவும் முடியுமா?

மல்லிகையின் ஆசிரியர் ஆயிரம் ரூபாய் அனுப்பினார். காளித்தம்பியின் புகைப்படம் ஒன்றையும் அனுப்புமாறு கேட்டிருந்தார். பழனி தன் படத்தை அனுப்ப விரும்பவில்லை. பழனிதான் காளித்தம்பி என்பது இப்போது பள்ளி வரை தெரியும். படம் வந்தால் மதுரையிலும் தெரியுமல்லவா? அதனால் "தற்போது படம் கைவசம் இல்லை. விரைவில் படம் எடுத்து அனுப்புகிறேன்" என்று மல்லிகை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினான். படம் உண்மையில் கையில் இல்லை. ஆனால், படம் எடுக்க முயற்சி செய்யாமல் இருந்தான்.

அது மார்ச் மாதம் கடைசித் திங்கட்கிழமை. அன்றுதான் ஆண்டுத் தேர்வு ஆரம்பம். விடியற்காலையில் பழனியை எழுப்பிவிட்டுப் போனான் காளி. பழனி படித்துக்கொண்டிருந்தான். மணி சுமார் ஆறரை இருக்கும். அப்போது அவன் அறைமுன் யாரோ நிற்பது தெரிந்தது. பழனி எழுந்து பார்த்தான். இரு போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தார்கள். "இவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்?" என்ற வியப்போடு அவர்களைப் பார்த்தான். போலீஸ்காரர்களில் ஒருவர் “தம்பி! உன் பெயர் என்ன?” என்று கேட்டார்.

"பழனி! ஏன் கேட்கிறீர்கள்?"

"பழனியா? பொய் சொல்லாமல் சொல்லு. நீ மதுரையிலிருந்து வந்தவன்தானே?"

பழனி சற்றுத் தயங்கினான்.

"உம்! சொல்லு" போலீஸ்காரர் அவசரப்படுத்தினார்.

"ஆமாம். நான் மதுரையிலிருந்துதான் வந்தேன்" என்றான் பழனி.

"சரி நட ஸ்டேஷனுக்கு" என்று அதிகாரக் குரலில் சொன்னார் போலீஸ்காரர்.

"போலீஸ் ஸ்டேஷனுக்கா? எதற்கு?"

பழனி கேட்டான். இதுவரை பேசாமல் இருந்த மற்றொரு போலீஸ்காரர் "எதுக்கா? விருந்து வைக்கிறதுக்கு. திருட்டு நாயே! எப்பேர்ப்பட்ட திருட்டைச் செய்துட்டு எதுக்குன்னா கேக்கறே? நட ஸ்டேஷனுக்கு" என்றார்.

"திருட்டா? நானா?" பழனி இன்னும் ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் "எங்கிட்டே ஒண்ணும் கதை அளக்காதே, எல்லாம் இன்ஸ்பெக்டரிடம் சொல்லு! இப்ப மரியாதையா எங்கக்கூட வா" என்றார் போலீஸ்காரர்.

பழனி அறையை மூடிவிட்டு அவர்களுடன் சென்றான். அன்றைக்குத்தான் தேர்வு. அன்றுதானா இப்படி ஒரு பழி வரவேண்டும்? "வெண்ணெய் திரண்டு வரும்போது பானை உடைந்த கதை மாதிரி நடந்துவிட்டதே! தேர்வு எழுதவில்லை என்றால் முதல் மார்க் எப்படி வாங்குவது? போலீஸ்காரர்கள் எப்போது விடுவார்களோ" என்று பயந்தவாறு பேலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றான்.

மணி பத்து.

பள்ளி மணி கணகணவென்று ஒலித்தது. மாணவர்களின் சப்தம் பெருகி, பிறகு ஓய்ந்தது. ஆசிரியர் வினாத்தாளைக் கொடுத்துக் கொண்டே வந்தார். அவர் பழனி தேர்வுக்கு வராததைக் கவனித்து வியந்தார். தேர்வு நடக்கும் அறைகளைச் சுற்றி வந்த தலைமை ஆசிரியரும் பழனி வராததைக் கண்டு வியந்தார். அதே நேரத்தில் பழனி போலீஸ் ஸ்டேஷனில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறான் என்பது அவர்களுக்குத் தெரியாது.

தொடரும்...

About The Author