மடை திறந்து… (4)

என்னப்பா, எல்லாரும் நலம்தானே? இங்கேயும் எல்லாம் நலமே!

போனவாரம் சரியா எழுத முடியாம போனதுக்குக் காரணம் சனிக்கிழமை ஆனந்த் – அனிதா வீட்ல நடந்த சந்திப்பு. ஏதாவது மாத்தி மாத்தி விளையாடிட்டே இருந்ததுல நேரம் போனதே தெரியலை. (நான் கூட தம்போலால பரிசு வாங்கினேனே!!!) காலைல போயிட்டு நடுராத்திரிலதான் வந்து சேர்ந்தோம்… மறுநாள் அவசர அவசரமா மடையைத் திறந்துவிட வேண்டியதாச்சு… அப்படி இருந்தும் உங்களுக்குப் பிடிச்சிருந்தது மகிழ்ச்சியே!

சாந்தி,
என்னை ஒரு தடவைதான் சந்திக்கணும்னு விருப்பமா?  நிலாச்சாரல் வாசகர்களுக்கான சந்திப்பு எதுவும் நடக்கறதில்லை. ஆனா குழுவினருக்கான சந்திப்பு நிறைய நடந்திருக்கு. எல்லாருமா சேர்ந்து நிலாச்சாரலை இன்னும் உயர்த்தினோம்னா, வாசகர் சந்திப்பெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு…

சுரேஷ்,
எனக்கு உங்க கமென்ட் கிட்டத்தட்ட இனிய அதிர்ச்சி. தத்துவமா பேசி போரடிக்கறதாதான் நான் நினைச்சிட்டிருந்தேன். அதுக்கும் வாசகர்கள் இருக்காங்கங்கறது இன்னும் என்னை அதிகமா என்னோட ஆன்மிக அனுபவங்களைப் பகிர்ந்துக்கத் தூண்டிருக்கு. ரொம்ப நன்றி…

மினி,
நமக்கு தருமி மாதிரி கேள்வி கேக்கத்தான் தெரியும்… கவலையே படாதீங்க… கேள்விகளுக்குக் குறைச்சலே இருக்காது.

அபரிமிதமான அன்புடன்,
நிலா

நிபந்தனையற்ற அன்புதான் கடவுள்ங்கறதுதான் என்னோட நம்பிக்கை உங்கள்ல பலருக்குத் தெரிஞ்சிருக்கும். ஆனா இந்த அன்பைச் செய்ய முடியாது; அன்பாக இருக்கத்தான் முடியும். இதை ஆங்கிலத்தில சொன்னா இன்னும் தெளிவா இருக்கற மாதிரி தோணுது – You cannot do love; you can only BE love. (இந்தக் கருத்தை நான் முதன் முதலா கேட்டது எங்கேன்னு சொன்னா ஆச்சரியப்படுவீங்க… மேல படிங்க)

நாம மற்றவங்ககிட்ட அன்பு செலுத்த முயற்சி செய்தோம்னா, அது ஒரு செயல்; சேவை. அது முழுமையான அன்பில்லை. எப்போ நம்மை நாமே முழுமையா ஏற்றுக் கொள்றோமோ, அப்போ நாம அன்பாவே மாறிடறோம். எந்த முயற்சியுமே செய்யாம, நமக்குள்ளேர்ந்து அன்பு பொங்கிப் பரவும்… எப்படி இந்த நிலையை அடையறது? நம்மைப் பற்றி நாம என்ன நினைக்கறோம்னு தெரிஞ்சுக்கறதுதான் இதுக்கான துவக்கம். போனவாரம் சொன்ன கண்ணாடி பயிற்சி செஞ்சீங்களா, இல்லையா? இல்லைன்னா, படிக்கறதை நிறுத்திட்டு, கண்ணாடி முன்னால போய் நின்னு, உங்க கண்ணுக்குள்ள ஆழமா பார்த்து உங்க பெயர் சொல்லி அழைச்சு, “நான் உன்னை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்”னு வாய்விட்டு சொல்லுங்க. அது 0-10 அளவுகோல்ல எவ்வளவு தூரம் உண்மையா தோணுதுன்னு கவனிங்க… சரியா?

சில வருடங்கள் முன்னால வெறி பிடிச்ச மாதிரி ஏகமா வாசிச்சேன்; அப்பறம் ஏகத்துக்கு கேட்டேன் – யூட்யுப், பாட் காஸ்ட்… அப்போ தற்செயலா நித்யானந்தாவோட சொற்பொழிவைக் கேட்க நேரிட்டது. அந்த சொற்பொழிவிலதான் ‘You can only be love’ங்கற கருத்தைக் கேட்டேன். சட்டுன்னு ஒரு ஜன்னல் திறந்தது மாதிரி இருந்தது.

நித்யானந்தாவோட ‘நிச்சயமான நிரந்தரமான தீர்வுகள்’ படிச்சிருக்கேன். ரொம்ப நல்ல நூல். எனக்கென்ன ஆச்சர்யம்னா இவ்வளவு ஞானமிருக்கறவர் ஏன் திருட்டுத்தனமா காதல் செய்யணும்கறதுதான். அப்போ அவர் அவரை, அவரோட உணர்வுகளை ஏற்றுக் கொள்ளலையோ? அப்படின்னா அவர் போதனைகளை அவர் பின்பற்றலையே… அதுதான் எனக்கு பெரிய ஏமாற்றத்தைத் தந்தது.

ஆனா நாம அவரையும் சம்பந்தப்பட்டவர்களையும் அளவுக்கதிகமா கேவலப்படுத்திட்டோம்கறது என்னோட எண்ணம். ஒரு குரு காதல்வயப்படறது அவ்வளவு தப்பா? தப்புன்னே சிலருக்குத் தோணினாலும் அதுக்காக அவர் அந்தரங்கத்தை பொதுவில போட்டு அவமதிக்கணுமா? அப்படியே போட்டாலும் அதை சிடில விக்கற அளவுக்குத் தரம் தாழ்ந்தோம்னா, நாம எப்படிப்பட்ட கூட்டம்? என்னைப் பொறுத்தவரை, அந்த நிகழ்வு நித்யானந்தாவைக் கேவலப்படுத்திச்சோ இல்லயோ, நம்ம சமூக அவலங்களை, வக்கிரங்களை வெளிக்கொண்டு வந்திச்சுங்கறதுதான் உண்மை.

பல சமயம் இந்த மாதிரி மாறுபட்ட கருத்துக்களைச் சொல்லும்போது முதல்ல பலத்த எதிர்ப்பு எழும். அப்புறம் இன்னும் விளக்கி விளக்கிச் சொன்ன பின்னால, பொதுவில எதிர்ப்பு எழுப்பின பலர் தனியா, ‘நீங்க சொல்றது இப்பத்தான் எனக்குப் புரியுது’னு சொல்லிருக்காங்க. ஒருத்தர் எங்கிட்டே ‘என் மூளைக்குள்ள நீங்க குண்டு ஒண்ணைப் போட்டுட்டீங்க. என்னோட எண்ணங்களெல்லாம் மாறிப் போச்சு’ன்னு சொன்னார். அதுக்காக நான் சொல்றதெல்லாம் சரின்னு எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனா ‘இதுவும் ஒரு சாத்தியம்’னு மாற்றுக் கருத்துக்களைக் கவனிக்கற திறந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டோம்னா மனசில பல கதவுகள் திறக்கும்.

இந்தப் படத்தைப் பாருங்க:
https://www.nilacharal.com/wp-content/uploads/2011/02/old-lady-young-woman-optical-illusion.gif

என்ன தெரியுது உங்களுக்கு? இளம் பெண்? மூதாட்டி? நம்மள்ல ஒருத்தருக்கு இது இளம் பெண்ணாகவும், இன்னொருத்தருக்கு அது மூதாட்டியாகவும் தெரியலாம். (ரெண்டு பேருமே படத்தில இருக்காங்க) எனக்குத் தெரியறதுதான்னு சரின்னு பிடியா பிடிச்சோம்னா அந்தப் படத்தில இருக்கற கலைநயத்தை இழந்திடறோமில்லையா?

நான் காலேஜ் படிக்கும்போது எழுத்தாளர் பாலகுமாரன் கூட ஒரு நேருக்கு நேர் இருந்தது. அவர் ‘வாழ்க்கைல தியாகம்னு ஏதுமில்லை. ஒவ்வொருத்தரும் தான் நல்லா ஃபீல் பண்ணணும்கறதுக்காக செய்யற செயல்களை எப்படி தியாகம்னு சொல்றது’ன்னு கேட்டதும் எனக்கு பயங்கரமா கோபம் வந்திருச்சு. அப்படின்னா, ‘காந்தி செய்ததெல்லாம் தியாகமில்லையா?’ னு கேட்டேன். அவர், ‘குழந்தே நீ என்னை மாட்டிவிடப் பார்க்கறே… நீ இன்னும் நிறையப் படிக்கணும்’னார். எனக்கு ஏகப்பட்ட இறுமாப்பு அவரை மடக்கிட்டதா… இப்ப நினைச்சுப் பார்த்தா என்னோட அறியாமை தெளிவா தெரியுது. அப்போ அவர் சொன்னதில இருந்த ஆழத்தைப் பார்க்கற திறந்த மனப்பான்மை இருந்திருந்தா என்னோட வாழ்க்கையே மாறிப் போயிருக்கலாம்… எனினும்… அந்த அறியாமைக்கும் அது தந்த அனுபவங்களுக்கும் பற்பல அர்த்தங்கள் இருக்கறதைப் பார்க்க முடியறதால… அனைத்தும் நலமே!
தத்துவ மழை ஓவராப் போச்சோ? கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண இந்த விளப்பரத்தைப் பாருங்க… 6 வினாடிதான் கொஞ்சம் கவனமா பார்த்தாத்தான் புரியும்…

http://www.youtube.com/watch?v=ORBgejUAEuE
செம கூல்…

2011 கிரிக்கெட் உலகக் கோப்பை லோகோ ரொம்ப அழகா இருக்கில்லைங்க? எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நுணுக்கமான வடிவமைப்பு; பொருத்தமான வண்ணங்கள்! வாழ்க வடிவமைப்பாளர்!

https://www.nilacharal.com/wp-content/uploads/2011/02/2011-world-cup-cricket-logo.gif

எதேச்சையா என்னோட கறுப்பு வெள்ளை படமொண்ணை ஃபேஸ்புக்ல போடப் போக அங்கே ஒரு தனிக் கச்சேரியே ஆரம்பிச்சிருச்சி… பாலசுந்தர் சக்திவேல் ‘வானமென்ற காகிதத்தில் மின்னலெனும் பேனா கொண்டு உங்கள் கருத்துக்களை எழுதவேண்டும்… மடை திறந்து பத்துமான்னு தெரியலை’ன்னு சொன்னார்… அவரோட வரிகள் நல்லா இருக்கறதுனால அவரை எழுதச் சொல்லி சொல்லிருக்கேன்.
உங்களுக்கும் விருப்பமிருந்தா இணைஞ்சிக்கங்க:

http://en-gb.facebook.com/people/Nila-Raj/720120663

எனக்கு ஆமிர்கான் ரொம்பப் பிடிக்கும் – Very versatile actor & of course, good looking! அவரோட டோபி காட் பார்த்தேன். ரொம்ப யதார்த்தமா இருந்தது. ஆனா ஆமிர் சில காட்சிகள்ல இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்னு தோணுச்சி. ஆமிரோட இரண்டாவது மனைவியான கிரண் ராவ்தான் இயக்குனர். வித்தியாசமான கதைக்களம், திரைக்கதைக்காக அவரைப் பாராட்டலாம்.

பிரதான கதாநாயகனான ப்ரதீக் (பேர் நல்லா இருக்கில்லைங்க!), முக்கிய கதாபாத்திரமான கீர்த்தி ரெண்டு பேருமே ரொம்ப நல்லா பண்ணிருக்காங்க. கீர்த்தி முகத்தில அப்படி ஒரு innocence…! ஸ்மிதா பாடீல் – ராஜ் பாபரோட மகன்தானம் இந்த ப்ரதீக்! பிரகாசமான எதிர்காலம் இருக்கு இவருக்கு…
இந்தப் படத்தில நான் கட்டிருக்கற புடவை மைசூர் சில்க்னு நான் சொல்லாமலே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்… எங்க கல்யாண சமயத்தில குமரன் சில்க்ஸ்ல வாங்கினது. என்னோட செலக்ஷன்தான்… என்னுடைய புடவைகளை என் விருப்பப்படி வரிசைப் படுத்தச் சொன்னா இது இரண்டாவது இடத்தில வரும்னு நினைக்கிறேன். நல்லா அடி அடின்னு அடிச்சு இப்போ அம்மாகிட்டே கொடுத்தாச்சு… கழுத்தில போட்டிருக்கற குட்டி நெக்லஸ் நிறைய படங்கள்ல இருக்கறதுனால அதுல ஏதாவது விசேஷம் இருக்கான்னு ஹேமா கேட்டிருந்தாங்க. ஆமா, அதுல ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு. இன்னொரு தடவை சொல்றேன்.

இந்தப்படம் நிலாக்குழு சந்திப்பு சம்ரட்சணால்ல நடந்தப்போ எடுத்தது. சந்திப்பு பற்றி ரிஷபன் அழகா ஒரு கட்டுரை எழுதிருக்கார்… பல படங்களோட… சுட்டி தர்ற பொறுமையெல்லாம் இல்லைங்க  தேடிப் படிங்க விருப்பமிருந்தா…

Nila with Baba

சிவசங்கர் பாபா பக்கத்தில பவ்யமா உக்காந்திருக்கேன்ல… ஆனா அவர்கிட்டே ஏடாகூடமா நிறைய கேள்வி கேட்பேன்… ஒவ்வொரு முறையும் நான் இந்தியா போகும்போது சம்ரட்சணா போய் ஒரு நாளாவது இருந்துட்டுத்தான் வருவேன். புதுசா சக்தி கிடைச்ச மாதிரி இருக்கும்.

ஒரு தடவை சுசில் ஹரி மாணவர்களுக்கு ஏதாவது ஒரு லெக்சர் தரச் சொன்னார் திடீர்னு… நான் சுத்தமா எதிர்பார்க்கலை. தயாரும் செய்யலை. ஆனா கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசினேன். ஒரு நண்பர் சொன்னார், ‘you displayed supreme confidence’னு. ஆனா அது எப்படி சாத்தியமாச்சுன்னு என்னால விளக்கமுடியாது. நான் நினைக்கிறேன் – இந்த பிரபஞ்ச சக்தியை யாரெல்லாம் அவங்க மூலமா பாய அனுமதிக்கறாங்களோ அவங்க மூலமா அது சுத்தி இருக்கறவங்ககிட்டேயும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துது. நமக்குள்ளே இருக்கற சக்தியை அது வெளிப்படுத்துது. அப்படித்தான் பாபாவும் ஒரு கருவியா இருக்கார்னு நினைக்கிறேன். என்னை தங்கள் சம்ரட்சணா குடும்பத்தில் ஒருத்தியாய் நினைக்கும் அந்த வசுதேவக் குடும்பத்தைப் பற்றி பின்னொரு நாள் பேசலாம்.

இந்த வாரம் எழுத ஆரம்பிச்சு அடுத்த வாரத்துக்கும் சேர்த்து கொஞ்சம் எழுதிட்டேன்… கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. எந்தப் பாசாங்குமில்லாம பேசறதில இருக்கற சுதந்திரம் ரொம்ப சுகமானது. பார்த்திபன் ஒரு பேட்டில சொல்லிருந்தார், ‘நாம எல்லாருமே நிறைய முகமூடிகள் போட்டிருக்கோம்… யார்கிட்டே பேசறோம்கறதைப் பொறுத்து சில பல முகமூடிகளைக் கழட்டி வைக்கிறோம்’. உண்மைதானே!

என்னோட பல முகமூடிகளைக் கழற்றிட்டு என்னை நானா இருக்க அனுமதிக்கறதுக்காக உங்க எல்லாருக்கும் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்…

அடுத்தவாரம் இன்னும் பேசலாம்… நீங்களும் பேசினால் மகிழ்வேன்…

அபரிமிதமான அன்புடன்,
நிலா…

About The Author

8 Comments

  1. chitra

    நிலா…உண்மையாவே மடை திறந்துதான்..ரொம்ப அருமை..தங்கு தடையற்ற ஆற்றொழுக்கான நடை..உள்ளத்திலே உண்மை ஒளி உண்டாகில் வாக்கினிலே உண்மையொளி உண்டாகும்.

  2. leela

    i am an NRI Parent shuffling my time between my two daughters abroad and home. for last few years nilacharal has been literally its meaning, bringing in substances which i enjoy reading. hats off to you dear nila for what you are doing to the like of us-saga pakshigal!- this open talk you have started is real good, making one to think….. i wold like to share my experiences, but then am not good with thanglish typing, it would be a pleasure if i can share my thoughts in the language i love……….anyway, keep the good work going- LR

  3. Shanthi

    Hi Nila
    Thanks for acknowledging the request, sure will find out more about the group meets.
    This Saturday we took my elder brother for sightseeing in London, we were waiting for the Big bus in one of its designated stop near Tower of London and I saw a Silver Merc crossing us .. Number plate
    N6 NILA , do not know that is yours, but thought of you that second and said Hi to you …..
    Recently I read Silent Power by Stuart Wilde… Silent talking…..and Silent Power and his way of talking about the great power in the Universe and communicating with it, also reminded of your talks. There is so much for me to learn and share. Now enjoying your casual talks on Nilacharal.
    Withlove
    Shanthi

  4. mini

    Nila, nice one again. I liked the way you expressed about love. yes,now i understand. I was thinking about this doing love. it will be a action if i try to do that. it should come automatically. that will be the true love. thanks for giving this. Do you have any gray and pink combination saree/salwar or any other dress? Last week neenga pottu iruntha saree pathi yochichapa sky colors than nabagam vanthathu.

  5. Bharathi

    வாழ்கையில் ஒரு பிடிப்பும் இல்லாத என்னை நிலா மாற்றிவருகிறாள் ( பிடிச்சவங்ககிட்ட நீ வா போ ன்னு நிறைய உரிமை எடுத்துக்குவேன்)

  6. maleek

    அடடா…. வாங்க வாங்க, உங்க ஸ்டைல்லேயே சொல்லிட்றேன்
    அபரிதமான சந்தோஷம்.

  7. suresh

    nila,

    I think, we never been happy, we are acting that I am happy (cheating ourself in some situation!) and we do always finding the way to happy through the materialise or knowledge or whatever the possibilities!… like cat trying to catch its own tail,

    reall-ave nammalala happya erruka mudiuma? errungangala?
    or
    ella whole life-um eppadi than errkuma? Serching/analysis/changing mind state/etc.
    or
    ella “santhosama errukennu solrathu” kattukathiya?

    (it is based on my own experience, no blame, so far what i have experienced is running behind the happiness and what i realised…there is no such a things)

    Suresh
    Brisbane (Australia)

  8. Maithreyi

    ஏப்படி Tகமிழ் எலுதுக்கல் எலுதுவது? கெல்ப் மெ…….

Comments are closed.