மி‎ன்சார சிக்கனம் தேவை இக்கணம்! (2)

மின்விசிறி:

சீலிங் •பேன் ஒரு இரவு முழுவதும் ஓடினால் 22 யூனிட் மின்சாரத்தை ஒரு மாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். பலரும் நினைப்பது போல வேகமாக ஒடும் மின்விசிறி அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுவதில்லை. குறைந்த வேகத்தில் ஒடும் மின்விசிறியால் ரெகுலேட்டரின் சூடாகி ஆற்றல் வீணாகும். சாதாரண ரெகுலேட்டர் 20 வாட்ஸ் அதிக மின்சாரத்தைக் குறைந்த வேகத்தில் ஓடும் போது எடுத்துக் கொள்ளும். இதை மின்ணணு ரெகுலேட்டரை உபயோகிப்பதால் குறைக்கலாம். பழைய மின்விசிறியில் சத்தம் வரக் காரணம் அத‎ன் மேல்புறத் தட்டு சரியாக பொருத்தப்படாமல் ‏இருந்தாலோ, தவறான இணைப்புகளினாலோ இருக்கலாம். அதை உடனடியாக கவனித்து சரி செய்யுங்கள்.

குளிர்சாதனப் பெட்டி:

வீடுகளில் பயன்படுத்தப்படும் குளிர்சாதனப் பெட்டிகள் பெரும்பான்மையான வீடுகளில் மாதத்திற்கு 30-35 யூனிட் மின்சாரத்தை எடுக்கும். 10 வருடத்திற்கு மேற்பட்ட குளிர்சாதனப் பெட்டி 1.5 மடங்கு அதிக மின்சாரத்தை இழுக்கும். அத்தகைய நிலையில் அதை உடனடியாக மாற்றுங்கள். குளிர்சாதனப் பெட்டியின் கதவை அடிக்கடி திறந்து மூடுவதால் பெட்டியின் உள்புற வெப்பநிலை அதிகரித்து அதிக மின்சாரத்தை எடுக்கும். தேவைப்படும் நேரங்களில் மட்டும் திறந்து மூடுங்கள்.

நடைமுறையில் உபயோகப்படுத்தப்படும் 165 லிட்டருக்குப் பதில் முடிந்தால் சிறிய பெட்டியைப் பயன்படுத்துங்கள். நான்கு நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு 80லி குளிர்சாதனப் பெட்டியே போதுமானது. குளிர்சாதனப் பெட்டியின் அளவு, மாடலைப் பொறுத்து ஒரு நாளைக்கு 1.2 முதல் 4 யூனிட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும்.

குளிர்சாதனப் பெட்டியை நீங்கள் வைத்திருக்கும் இடத்தைப் பொறுத்தும் அதன் பயன்பாடு மாறுபடும். அடுப்புக்கு அருகிலோ, சூரிய ஒளி நேராகப் படும்படியோ வைப்பதைத் தவிர்த்து வெளிப்புறச் சுவற்றுக்கு அருகில் வையுங்கள். சில இன்ச் இடைவெளி பெட்டியைச் சுற்றி இருக்குமாறு வைப்பதால், காற்றோட்டம் நன்றாக இருக்கும்.

குளிர்சாதனப்பெட்டியின் உள்ளே மற்றும் •பிரிசரையும் அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். ஜஸ் கட்டிகளால் நிரம்பிய •பிரிசர் இயங்க அதிக ஆற்றல் தேவைப்படும். அப்பகுதியை சுத்தம் செய்வதால் மின்சாரச் செலவைக் குறைக்கலாம். குளிர் காற்று வெளியேறுவதைத் தடுக்க, பெட்டியின் கதவுகளை அதிக நேரம் திறந்தே வைத்திருப்பதைத் தவிருங்கள். பெட்டியின் சீலையும் (seal) அடிக்கடி பரிசோதியுங்கள். அதன் மூலமும் குளிர்ந்த காற்று வெளியேறலாம்.

சூடான உணவுப் பொருட்களை அப்படியே பெட்டியின் உள்ளே வைப்பதால், அவற்றை குளிர்விக்க அதிக மின்சாரம் செலவாகும். அறை வெப்பநிலைக்கு வந்த பின் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வையுங்கள்.

அயர்ன் பாக்ஸ்:

ஒரு குடும்பத்திலுள்ள அனைவரும் வாரத்திற்கு ஒருமுறை ஒன்றாக அயர்ன் செய்வதை வழக்கமாக்குங்கள். அதன் மூலம் மின்சாரத்தை மிச்சப்படுத்துவதுடன் உங்களின் நேரமும் மிச்சமாகும்.

டிவி மற்றும் டிவிடி:

டிவியைப் போட்டுவிட்டு வேறு வேலைகளைக் கவனிப்பதைத் தவிர்த்து, நீங்கள் பார்க்கும்போது மட்டும் டிவியை ஆன் செய்யுங்கள். டிவி மற்றும் டிவிடி போன்றவற்றை ரிமோட்டால் நிறுத்தாமல் சுவிட்சையே நிறுத்துங்கள். ரிமோட்டால் நிறுத்தும் போது டிவி முழுமையாக நிறுத்தப்படாமல் stand-by முறையில் இயங்க சிறிது மின்சாரத்தை பயன்படுத்தும். ரிமோட்டால் நிறுத்துவதன் மூலம் 6 வாட்ஸ் மின்சாரத்தை ஒரு மணி நேரத்திற்கும், டிவியிலேயே ஆப் செய்வதால் 0.5 முதல் 1 வாட்ஸ் வரையும் மின்சாரத்தை டிவி பயன்படுத்தும். அதனால் பிளக் பாயிண்டிலேயே டிவியை நிறுத்துங்கள். பிளக்கை பிடுங்க வேண்டிய அவசியம் டிவி, சிடி பிளேயருக்கு இல்லை.

ஒரு நாளைக்கு 10 மணி நேரம் ஓடும் டிவி ஒரு மாதத்திற்கு 30 யூனிட் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். செல்போன், சிடி/டிவிடி, மைக்ரோவேவ் போன்ற உபகரணங்களும் மெயின் சுவிட்சில் நிறுத்தப்படுவதால் தேவையற்ற மின்சாரப் பயன்பாடு தவிர்க்கப்படும்.

வாஷிங் மெஷின்:

ஆடைகளை சிறிய லோடுகளில் துவைப்பதால் நேரமும், மின்னாற்றலும் வீணாகிறது. அதைத் தவிர்க்க மெஷின் நிரம்பும் அளவிற்கு ஆடைகளைத் துவையுங்கள். டிரையரில் போடும் முன் ஆடையில் தண்ணீர் முழுவதும் வடிந்து சற்றே உலர்ந்த நிலையில் இருக்கிறதா.. என பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

விளக்குகள்:

ஒரு கட்டிடத்தின் மின்சாரப் பயன்பாட்டில் 20% விளக்குகளுக்கு செலவாகிறது. முடிந்தளவு பகல் நேர வெளிச்சத்தையும், இரவில் லெட் லைட்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த அளவைக் குறைக்கலாம். உபயோகத்தில் இல்லாத போது விளக்குகள், மின்விசிறி, கொசுவர்த்தி மேட் போன்றவற்றை சுவிட்ச் ஆப் செய்வது மிக முக்கியம். ஒரு மணி நேரம் எரிவதற்கு 5 வாட்ஸ் மின்சாரத்தை கொசுவர்த்தி மேட் எடுத்துக் கொள்ளுகிறது. Thermostat நிலையில் இருக்கும் போது 1-1.5 யூனிட் மின்சாரம் செலவாகிறது.

LED எனப்படும் ஒளி உமிழும் விளக்குகளை இரவு நேரங்களில் பயன்படுத்துங்கள். குறைந்த ஒளி உமிழும் LED விளக்குகளை பயன்படுத்தி முக்கியமான பெரிய விளக்குகளின் பயன்பாட்டைக் குறையுங்கள்.

நம் தினசரி வாழ்க்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்து கடைபிடிப்பதன் மூலம் அதிகளவில் மின்னாற்றலை சேமிக்க முடியும். உதாரணமாக சில மணி நேரம் வெளியில் செல்லுகையில் கணினியை நிறுத்தி விடுதல், உபயோகிக்காதபோது கணினித் திரையை நிறுத்துதல் போன்றவற்றின் மூலம் மின்சாரம் மற்றும் பணம் மட்டும் சேமிக்கப்படுவதில்லை, சுற்றுச் சூழல் மாசுபாடு குறைகிறது

(தொடரும்)”

About The Author

1 Comment

  1. maleek

    எல்லா வீடுகளிலும் இருக்கவேண்டிய பயனுள்ள குறிப்புகள்.தகவல் தமயந்திகள்
    வாழ்க!.

Comments are closed.