சில்லுனு ஒரு அரட்டை

ஹலோ ஃபிரெண்ட்ஸ்,

நான் இங்கே நலம். நீங்க எல்லோரும் நலம்தானே?

கீதா, நானும் உங்களைப் போலதான் குளிர்சாதனப்பெட்டியை கொஞ்ச நேரம் சேர்ந்தாப்போல உற்றுப் பார்த்ததுக்கே நாலு தும்மல் போடுவேன். ஆனாலும் சில நேரங்களில் எதிர்பாராத விஷயங்கள் நடக்கிறதுண்டு. உதாரணமா, ஒரு முறை எனக்கு ஜலதோஷம் ரொம்ப நாள் சரியாகவே இல்லை. அதுவும் இருமல் இருந்துகிட்டே இருந்தது. இரண்டு மாசமாச்சு சரியாகும் போலவே தெரியலை. (நானோ மாதம் ஒருமுறை ஐஸ்க்ரீம்னு கணக்குப் போட்டு சாப்பிடுறவ!) ஆசையை அடக்க முடியாம ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன். அப்புறம் நடந்ததுதான் உல்டா. அவ்வளவு நாளாயிருந்த இருமல் சுத்தமா நின்னு போச்சு. அம்ருதாஞ்சன் விளம்பரத்துல சொல்ற மாதிரி சொல்லனும்னா "போயே போச்சு, போயிந்தே, its gone". அதுக்காக எல்லோரும் இது மாதிரி செய்யனும்னு சொல்லலை. ஆனா ஒரு விஷயத்துல ஒவ்வாமை இருந்தா எல்லா விஷயத்துலேயும் அப்படியே நடக்கும் என்று கட்டாயம் எதுவுமில்லைங்கிறது என்னுடைய கருத்து.

அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்த அளவு மக்களின் ஆதரவிருக்கும்னு நம்ம அரசாங்கம் நிச்சயமா எதிர்ப்பார்த்திருக்கலை. தீகார் ஜெயிலோ (அ) ராம் லீலா மைதானமோ, இடத்தைப் பத்தி கவலையில்லாம தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்துல அவர் உறுதியா இருக்காரு. அது சம்பந்தமா ஊடகங்கள்ல பல செய்திகள் வந்தது. அதில் என்னை கவர்ந்த சில செய்திகளை இங்கே உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் பங்கு பெற ராம் லீலா மைதானத்துக்கு வந்த சமையல்காரர்கள் சிலர், அங்கே வரும் மக்கள் பசியால தவிக்கக்கூடாதுன்னு நினச்சிருக்காங்க. மைதானத்துக்கு அருகிலேயே சமையலுக்கான பாத்திரங்களையும், பொருட்களையும் வரவழைத்து, சமைக்கத் தொடங்கிட்டாங்க. "தினமும் குறைந்தது 30,000 பேருக்கு உணவு வழங்குகிறோம். ‘ராமருக்கு அணில் உதவியது’ போல எங்களால் முடிந்த உதவியை அன்னா ஹசாரேவுக்கு நாங்கள் செய்கிறோம்" என்கிறார்கள்.

போராட்டத்தில் பங்கேற்ற சுவாமி என்ற ஒரு தனி நபரிடம், அவர் போரட்டத்தில் கலந்து கொண்டதற்கான காரணத்தை பத்திரிக்கையாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் தன்னுடைய சகோதரர் ஒரு சாலை விபத்தில் இறந்த போது, தன்னுடைய சகோதரரின் உடலை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றதில் இருந்து இறுதி சடங்குகள் முடியும் வரை பல இடங்களில் தான் லஞ்சம் குடுத்தாகவும், தன்னுடைய நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது என்பதற்காக தான் இந்தப் போரட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகக் கூறினார்.

Anna Hazareநமக்கு மிகவும் பரிச்சயமான இந்தியாவின் மணல் சிற்பி சுதர்ஷன் பட்னாயக், ஊழலை எதிர்த்து நடத்தும் அன்னா ஹசாரேவின் போராட்டத்தில் தன்னுடைய பங்கேற்பைத் தன்னுடைய மணல் சிற்பத்தின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார். பூரி நகரத்தில் உள்ள கடற்கரையில் அன்னா ஹசாரேவின் உருவத்தை மணலில் சிற்பங்களாக்கி, ‘ஆயிரம் அன்னா ஹசாரேக்கள் தோன்றிட வேண்டும்’ செய்தியையும் அதனுடன் இணைத்துள்ளார். தன்னுடைய மாணவர்களுடன் இணைந்து 5 மணி நேரத்தில் இந்த சிற்பத்தை உருவாக்கியுள்ளார் சுரேஷ் பட்னாயக். (கலை, சுரேஷ் பட்னாயக்கின் மற்றொரு சிற்பம் உங்கள் ரசனைக்கு) இதே போன்று மணிப்பாலைச் சேர்ந்த மணற்சிற்பிகளும் களி மண்ணாலான அன்னா ஹசாரேவின் உருவத்தை மணிப்பாலின் பேருந்து நிலையத்தில் வைத்திருப்பதன் மூலம் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அன்னா ஹசாரேவைப் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை நீளமான பத்திகளாக இல்லாமல் அவர் வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளின் மூலம் அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே உள்ள சுட்டியில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.nilacharal.com/enter/celeb/anna_hazare.asp
 Coin collection
சமீபத்துல கோவையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் கிட்டத்தட்ட 100 கடைகள் இடம் பெற்றிருந்தன. இது அதுன்னு இல்லாம பலவகையான தலைப்புகளிலும் நிறைய புத்தகங்கள் இருந்தன. எப்பவும் போல எல்லாப் புத்தகங்களையும் ஆசை தீரப் பார்த்துட்டு சில கண்ணதாசன் புத்தகங்களும், சித்தர்கள் சம்பந்தமான் சில புத்தகங்களும் வாங்கிட்டு கிளம்பும் போது, பல நாடுகளின் நாணயங்களும், ரூபாய் நோட்டுக்களும் அங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, மலேஷியா போன்ற நாடுகளின் நாணயங்கள், ரூபா நோட்டுக்கள் மட்டுமில்லாம நம் நாட்டின் பழைய நாணங்களும் அங்கே வைக்கப்பட்டிருந்தன. இவைகளெல்லாம் பார்வைக்கு மட்டுமின்றி விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன. இது போன்ற நாணயங்கள் சேர்ப்பதை பொழுதுபோக்காகக் கொண்ட பல சிறுவர்கள் நாணயங்கள், ரூபாய் நோட்டுக்களின் விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டிருந்தாங்க.

நம்முடைய நிலாச்சாரலில் வெளிவந்த ஒலி வடிவிலான அலைபேசி நேர்காணலைக் கேட்ட என்னுடைய நண்பர் ஒருவர், "நீ ஏன் பிரபலமானவர்களை பேட்டியெடுப்பதில்லை? இந்த மாதிரியான ஒலி வடிவ நேர்காணலை எத்தனை பேர் கேக்கறாங்கன்னு உனக்குத் தெரியுமா? இதனால உனக்கென்ன கிடைக்குது? பிரலமானவர்களைப் பேட்டி எடுத்தா உனக்கும் பேர் கிடைக்குமில்லையா?"ன்னு கேட்டாரு. அதுக்கு நான் சொன்னேன், "இன்னைக்கு இருக்கும் பிரபலமானவர்கள் எல்லோரும் ஆரம்பத்துல இருந்தே பிரபலமாயிருந்தவங்க இல்லை. பிரபலமானவங்க எல்லோருமே கொஞ்சம் கொஞ்சமா அவங்களுடைய உழைப்பால வளர்ந்தவங்கதான். திரு.மாரிமுத்து, திரு.வெங்கடேஷ் அவர்களோட பேசும் போது பல விஷயங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைச்சுது. பல நேரங்களில் வாழ்வில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது நான் சோர்வடைந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்வதைக் கேட்கும்போது என்னுடைய பிரச்சனைகளெல்லாம் ஒண்ணுமேயில்லைங்கிற எண்ணம் எனக்கு வருது. இது மாதிரியான ஒலி வடிவ நேர்காணலைக் கேட்கும் பலரில் யாராவது ஒருவருக்கு ஊக்கம் ஏற்படும் வகையில் அது இருந்திருந்தா அதுவே எனக்குப் பெரிய சந்தோஷம்"னு சொன்னேன்.

கடைசிக் கட்டி மாம்பழத்துக்கு வரலாம். காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மிதக்கும் தபால் நிலையத்தை அறிமுகம் செய்திருக்காங்க. ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி ஜம்மு, காஷ்மீரின் முதல் அமைச்சர் திரு.உமர் அப்துல்லாவும், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. சச்சின் பைலட்டும் ஸ்ரீநகரில் உள்ள டால் ஏரியில் இந்த மிதக்கும் தபால் நிலையத்தைத் துவக்கி வைத்திருக்காங்க. இந்தியாவின் முதல் மிதக்கும் தபால் நிலையம் என்ற பெருமை இதற்குண்டு. இந்த தபால் நிலையம் மூலமாக அனுப்பப்படும் கடித உறைகளில் டால் ஏரி மற்றும் ஸ்ரீநகர் மாநிலத்தின் இயற்கைக் காட்சிகளின் படங்கள் இருப்பது இதன் சிறப்பம்சம். கூடிய விரைவில் மிதக்கும் வங்கியையும் அறிமுகப்படுத்தவிருக்காங்க.

சரிங்க.. நம்பளுடைய அரட்டையை அடுத்த வாரம் தொடரும் வரை டா டா… பை பை… ஸீயூ…

About The Author

2 Comments

  1. கலையரசி

    அன்பு யஷ்!,

    நீங்க குறிப்பிட்டிருப்பது போல் அண்ணா ஹசாரேவுக்கு இந்த அளவு மக்கள் ஆதரவு கிடைக்கும்னு யாருமே எதிர்பார்க்கல. குறிப்பா படிச்ச இளைஞர் சமுதாயம் போராட்டத்துல குதிச்சது வரவேற்கப்பட வேண்டிய ஒன்னு. போராட்டம்னு பொதுமக்கள் வீதியில இறங்கிப் போராட ஆரம்பிச்சிட்டா, எந்த அரசா இருந்தாலும், மக்கள் குரலுக்குச் செவி கொடுத்தே ஆகணும்.

    பட்நாடக்கோட ஹசாரே சிற்பமும் நன்றாயிருக்கு!

    பேட்டி பத்தி நீங்க சொல்லியிருப்பது ரொம்பச் சரி யஷ்! பிரபலமானவங்க ஏற்கெனவே பல பத்திரிக்கைகள்ல, தொலைகாட்சியில பேட்டி கொடுத்திருப்பாங்க. ஏற்கெனவே அவங்ககிட்ட கேட்ட கேள்விகளையே திரும்பத் திரும்பக் கேட்டு பேட்டி வெளியிடறதுக்குப் பதிலா, இதுமாதிரி உழைப்பால முன்னேறுகிறவர்கிட்ட பேட்டி எடுத்து வெளியிடும்போது அவங்களோட அனுபவங்கள் நமக்குப் புதுசா இருக்கும். பேட்டி எடுக்கிறவ்ங்களுக்கும் ஆத்ம திருப்தி கிடைக்கும்.

Comments are closed.