பணமுதலைகளும் பலிகடாக்களும்

ஆயத்த ஆடைத் தொழிலில் மறைந்திருக்கும் அரசியல்!

பத்திரிக்கைகளில் இன்றும் தலைப்புச் செய்தியாக வந்துகொண்டிருக்கும் வங்கதேச அவலம் எல்லோரும் அறிந்ததே. ஒருவரில்லை, இருவரில்லை சுமாராக 400 பேர் வரையில் அநியாயமாகச் சாவைச் சந்தித்து இருக்கின்றார்கள். நிச்சயமாக, இதைவிட அதிகமானவர்கள் மரணித்துள்ளார்கள் என்பதே உண்மை! இவர்கள் பெரிய பணமுதலைகளின் பலிகடாக்களாகி இருக்கின்றார்கள் என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்!

இவர்களை அடிமை வேலை வாங்கியிருக்கின்றார்கள் என்று சாடியிருக்கின்றார் போப்பாண்டவர். ஆம்! அடிமை வேலைதான் இது. வறுமையால், கிடைக்கும் ஊதியத்திற்குக் கொடுக்கும் வேலையைச் செய்வோம் என்று வந்தவர்கள், அதற்கு விலையாகத் தம் உயிர்களைக் கொடுத்திருக்கின்றார்கள். இவர்கள் கால் வலிக்க, கைகள் கெஞ்ச, கண்கள் இருள, கடினமாய் உழைத்ததை உற்சாகமாய் வாங்கிக் கொண்ட மேற்கத்திய நாட்டு நிறுவனங்கள், மாத ஊதியமாக இவர்களுக்குக் கொடுத்தது வெறும் 38 யூரோக்கள் (50 டாலர்கள்) மாத்திரமே! ஆனால், இவர்கள் தைத்த ஒரே ஓர் ஆடையின் சந்தை விலையே அதை விட அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பிந்திய செய்திகளின்படி, 410 பேர் இடிபாடுகளிடையே சிக்கி இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த 8 மாடிக் கட்டடம் சரிந்து விழுந்த பின்பு, இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட இறந்த உடல்கள் தொகைதான் 410 . இன்னும் 140 பேரைக் காணவில்லை என்கிறார்கள் இராணுவ அதிகாரிகள். 2500 பேர் காயப்பட்டிருக்கின்றார்கள். வங்கதேச வரலாற்றிலேயே தொழிற்சாலையொன்றில் நடந்த மிக மோசமான விபத்தும் அதிக உயிரிழப்பும் இதுதான்!

இந்த 8 மாடிக் கட்டடத்தை ராணா பிளாசா (Rana Plaza) என்று அழைக்கின்றார்கள். இந்தக் கட்டடம் இடிந்து விழுந்த சமயம் 3000 பேர் வரையில் வேலை செய்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள். விபத்துக்கு முதல் நாள், கட்டடத்தின் ஒரு பகுதியில் இலேசான வெடிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. பல கடைகளும், வங்கியும் இதன் காரணமாகக் கடையை அடைத்து விட்டன. ஆனால், மூன்று துணித் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருந்தன. அவற்றில் பணியாற்றிய அனைவரும் வேலைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளார்கள். அந்தத் துணித் தொழிற்சாலைகளின் ஊழியர்கள்தான் விபத்தின்போது அநியாயமாக உயிரிழந்திருக்கின்றார்கள்.

இதனால் தொழிலாளிகள் கொதித்தெழுந்திருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட கட்டடச் சொந்தக்காரருக்கு மரண தண்டனை கொடுக்குமாறு ஆர்ப்பரிக்கின்றார்கள். சம்பள உயர்வு வேண்டும், அந்தச் சம்பளத்தை ஒழுங்காகத் தர வேண்டும், வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் என்றெல்லாம் கோரிக்கைகள் எழுப்பியிருக்கின்றார்கள்.

பல கிராமங்களை உள்ளடக்கிய நாடாக இருப்பதால் விவசாயத்தில் தன்னிறைவு பெற்று வறுமையைக் குறைக்க வேண்டும் என்பதே முதலில் வங்கதேச அரசின் குறியாக இருந்தது. விவசாயத்தை அடுத்து, நாட்டின் ஏற்றுமதி அளவை அதிகரிப்பது அரசின் இன்னொரு குறி. சணல், தேயிலை போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் கணிசமான வெற்றியைக் கண்டிருந்தாலும், அச்சுறுத்தும் வெள்ள அபாயம், உலகச் சந்தையில் சணல் விலையின் வீழ்ச்சி போன்ற காரணிகள் நாட்டின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்திருந்தன. இதைத் தொடர்ந்து அரசு தன் கவனத்தைத் திருப்பிய இடந்தான் துணி உற்பத்தி!

கடந்த இருபது ஆண்டுகளாக, இங்குள்ள ஆடைத் தொழிற்சாலைகள்தான் கணிசமான வருமானத்தை நாட்டுக்குத் தேடிக்கொடுத்து வருகின்றன. தற்போதைய நிலையில், ஒவ்வோர் ஆண்டும் 500 கோடி டாலர் பெறுமதியான ஆடைகளை இந்த நாடு ஏற்றுமதி செய்துவருகின்றது. இந்தத் தொழிற்சாலைகள் சுமாராக 30 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகின்றன. இதில் 90 விழுக்காட்டினர் பெண்களே!

இப்பொழுதெல்லாம், வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளிடம் தம் உற்பத்திப் பணிகளைக் கையளிப்பது நாம் உலகெங்கும் காணும் ஒன்றாகி விட்டது. பெருமளவு பணத்தை மிச்சம் பிடிக்கலாம் என்பதுதான் இவர்களின் தலையாய நோக்கம். குறைந்த செலவு நிறைந்த உற்பத்தி எனும் இவர்களின் எதிர்பார்ப்பு இதனால் நன்றாகவே நிறைவேறுகிறது.

நாடு விட்டு நாடு மாறிய உற்பத்தி, இன்று பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. 1950களிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் வட அமெரிக்க நாடுகளும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம் ஆடை உற்பத்திக்காக ஆசிய நாடான ஜப்பானை அணுகத் தொடங்கின. ஆனால் 65இலிருந்து 83 வரையான காலக்கட்டத்தில், ஜப்பான் அதிக வருமானம் ஈட்டக்கூடிய மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தன் கவனத்தைத் திருப்பியது. இதனால், ஆடைத் தொழிலில் இருந்த 4 இலட்சம் ஜப்பானியத் தொழிலாளிகளின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டன.

இதன் எதிரொலியாக 70களில், ஆடை உற்பத்தி ஜப்பானின் கைகளிலிருந்து ஆசிய நாடுகளான தென் கொரியா, தாய்வான், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடம் கைமாறியது. ஆனால், ஆசியப் புலிகள் என வர்ணிக்கப்பட்ட இந்த நாடுகளின் மிகையான உற்பத்திச் செலவும், வணிகச் சங்கங்களின் தலையீடும் உற்பத்தியைத் தொடர முடியாமல் திணற வைத்தன.

அப்பொழுதுதான், வளரும் நாடுகளாக இருந்த பிலிப்பைன்ஸ், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளிடம் ஆடைத் தொழிற்சாலைகள் தஞ்சம் புகுந்துகொண்டன. 80களில் நடந்த இது 90கள் வரைக்கும் தொடர்ந்தது.

இந்தக் காலக்கட்டத்தில், ஆடை உற்பத்தித் தொழிலில் நுழைந்ததுதான் இக்கட்டுரையில் அலசப்படும் வங்கதேசம்! இந்த ஆடை உற்பத்தியால் அவலச் சாவுகளைச் சந்தித்த வங்கதேசம்!!

வங்கதேசத்தைப் பொறுத்த வரை, முழுக்க முழுக்க வேதனையின் அடிப்படையில்தான் ஆடை உற்பத்தித் தொழில் வாய்ப்புகள் அதிகமாகத் தேடி வந்தன. அமெரிக்காவில் 10.12 டாலர் ஊதியம் வழங்கப்படும் அதே உற்பத்திக்கு வங்கதேச நாட்டவர் பெறுவது வெறும் 30 சதந்தான். இதன் காரணமாக, வங்கதேசத்தில் உற்பத்தி என்றுமில்லாதவாறு எகிறிக் குதித்தது. தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அபரிமிதமாக அதிகரித்தது. 1991இல் 5,82,000 ஆக இருந்த தொழிலாளிகளின் தொகை, 1998இல் 14,04,000 ஆக உயர்ந்தது. அதே சமயம், அமெரிக்காவில் 11,06,000 ஆக இருந்த தொழிலாளிகள் எண்ணிக்கை 1998இல் 7,65,800 ஆகச் சரிந்தது.

துணியை வெட்டி, தைத்து நவீன ஆடைகளாக்கும் பணியை வங்கதேசம் செய்தாலும், மலிவான விலையில் அதற்கான துணி கிடைக்க வேண்டுமே? இங்கே கைகொடுத்தன ஆசியப் புலிகள் என்று வர்ணிக்கப்பட்ட நாடுகள். இவர்கள் வங்கதேசத்துக்குத் துணியை விநியோகிக்கும் அதே நேரத்தில், ஆயத்த ஆடைகளை இறக்குமதி செய்யும் மேற்குலக நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பாலமாகவும் திகழ்ந்து வருகின்றார்கள். இதன் விளைவாகத்தான் பிரித்தானியாவின் மார்க்ஸ் அண்டு ஸ்பென்சர்ஸ் (Marks & Spencers), சி அண்டு ஏ (நெதர்லாந்து) [C&A (Netherlands)] ஆகிய நிறுவனங்களை வங்கதேசம் தன் கைக்குள் போட்டுக்கொள்ள முடிந்தது. இவர்கள் தமது ஆயத்த ஆடைகளை விற்கும் விலையைவிட 5 தொடக்கம் 10 மடங்கு வரை அதிக விலைக்கு விற்கின்றார்கள் இந்த ஆடைகளை இறக்குமதி செய்பவர்கள்!

தென் கொரியாவின் தேவூ (Daewoo) நிறுவனம் அந்த நாட்டின் மிகப் பெரியதொரு நிறுவனம். தென்கொரிய ஆயத்த ஆடை ஏற்றுமதியில் முதலிடம் வகித்தவர்கள். தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவு ஏற்றுமதியை இவர்கள் செய்து வந்ததால், குறைவாக ஏற்றுமதி செய்யும் இன்னொரு நிறுவனத்துடனான ஒப்பந்தம் இவர்களுக்குத் தேவைப்பட்டிருக்கின்றது. இதில் சிக்கியதுதான் வங்கதேசம்! தங்களுக்குத் தேவையான துணியைப் பெற்றுக் கொள்ள வங்கதேசம் இந்நிறுவனத்தைச் சார்ந்திருக்க, வெளிநாடுகளில் வங்கதேசத்துக்கான சந்தையைத் தேடிக்கொடுப்பதுதான் இந்த நிறுவனத்தின் திட்டம். இதற்காக, வங்கதேச நிறுவனமான தேஷ் (Desh) உடன் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்த இந்தக் கொரிய நிறுவனம் புதிய நம்பிக்கைகளை வங்கதேச மண்ணில் விதைத்தது. வரலாற்றை மாற்றி அமைத்தது. வங்கதேசத்தின் ஏற்றுமதி கிடுகிடுவென உயர்ந்தது. ஆடை உற்பத்தியில் வங்கதேசம் கணிசமான மாற்றத்தைக் காண இந்த ஒப்பந்தமே முக்கியக் காரணியாக அமைந்தது.

இதனால் கிடுகிடு வளர்ச்சியை நாடு சந்தித்தாலும், அந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்த தொழிலாளிகள் நிலையை யாரும் சிந்தித்துப் பார்ப்பதாக இல்லை. மிக மோசமான சூழலில், உற்பத்தியின் பெரும் சுமையைத் தாங்கிக் கொண்டு பணியாற்றிய தொழிலாளிகளின் நிலை மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்தது. ஓர் ஆய்வின்படி, நேர்காணலின்போது சந்தித்த 90 விழுக்காட்டினர் காய்ச்சல், வயிற்று வலி, கண் வலி, காதுவலி, தலைவலி, இருமல் என ஏதோ ஒரு பிணியால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிய முடிந்தது. இந்த நோய்களுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்கத் தொழிலாளிகள் மருத்துவச் சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டதில், 75 விழுக்காட்டினர் வேலைக்கு வரும்போது ஆரோக்கியமாக இருந்து, வேலை முடிந்துபோகும்போது நோயாளிகளாகச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலை செய்வதற்கு ஒவ்வாத சூழல், அடிப்படை வசதிகள் இல்லாமை, மோசமான வேலை நிபந்தனைகள், இங்கு தரப்படும் அழுத்தம், மிகக் குறைந்த ஊதியம் எனப் பல காரணங்கள் இவர்களை நோயாளிகளாக்கி வருகின்றன. சேர்ந்து சில மாதங்களில் வேலையை உதறிவிட்டுப் போகுமளவிற்கு இவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றார்கள். அதிகபட்சம் 4 ஆண்டுகளுக்கு மேல் எவருமே ஒரே இடத்தில் வேலை செய்வதில்லை என்பது சோகமான கதை!

இங்குள்ள தொழிற்சாலைகளில், தீப்பற்றிக் கொள்வது என்பது புதிய செய்தியில்லை. அண்மையில் நடந்ததுபோலவே, 2005இல் கட்டடம் சரிந்து விழுந்தது. 64 ஆடை உற்பத்தித் தொழிலாளிகள் இறந்தார்கள். இப்பொழுது போலவே அப்பொழுதும் தொழிற்சாலைச் சொந்தக்காரர் கைதானாலும், சட்டநடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. இதிலிருந்து பல தடவைகள் தொழிற்சாலைகள் தீப்பற்றிக் கொண்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கானவர்கள் இறந்துள்ளார்கள். இதையெல்லாம் மிஞ்சுமாற்போல இந்த ஆண்டு 8 மாடிக் கட்டடமே சரிந்து விழுந்து பல நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கின்றார்கள்.

பணமுதலைகளாக ஓர் இனம் நடமாட, இன்னோர் இனம் பலிகடாக்களாக எவ்வளவு காலத்திற்குத்தான் தம் தலைகளை நீட்டிக் கொண்டிருப்பது? இனியாவது இந்த அப்பாவித் தொழிலாளிகளுக்கு நியாயம் கிடைக்குமா?

About The Author