பார்த்ததில் ரசித்தது! படித்ததில் பிடித்தது!! – 22.2

Kasthuri with Bhagavan Shri Baba
பகவான் ஸ்ரீ பாபாவுடன் கஸ்தூரியைப் படத்தில் காணலாம்.

பிரசாந்தி நிலையத்தில், (புட்டபர்த்தி) ஒருநாள் மதிய வேளையில், பிரஸ் இருக்கும் தாழ்வாரத்தில் கஸ்தூரி நின்று கொண்டிருந்தபோது பக்தர் ஒருவர் அவரிடம் ஸ்வாமியைப் பற்றி ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டார்.

"இல்லை, ஒரு மாதப் பத்திரிக்கைதான் அச்சிடப்படுகிறது" என்று பதில் சொன்னார் கஸ்தூரி. ஏமாற்றத்துடன் அவர் அங்கிருந்து சென்றார். மந்திரிலிருந்து இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாபா கஸ்தூரியை அழைத்து, "அவர் என்ன கேட்டார்" என்றார். கஸ்தூரி, "அவர் உங்களைப் பற்றிய புத்தகங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டார்".

"நீ என்ன சொன்னாய்?"

"புத்தகங்கள் இல்லை என்றேன்".

"அது சரியான பதில் இல்லை. இந்த ஸ்வாமி புத்தகங்கள் வாயிலாக அறியப்படக்கூடியவர் இல்லை என்று நீ சொல்லி இருக்க வேண்டும்". இதைச் சொல்லி விட்டு பாபா கஸ்தூரியைப் போக அனுமதித்தார்.

இதை அடுத்து வெங்கடகிரிக்கும் மதராஸுக்கும் பாபா விஜயம் செய்தார்.

அந்த வார இறுதியில் பாபா புட்டபர்த்திக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் வியாழக்கிழமை அன்றே திரும்பி வந்து விட்டார். கஸ்தூரியை வரச் சொன்னார். ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்று பயந்தவாறே சென்ற கஸ்தூரியை பாபா புன்னகையுடன் பார்த்தார். பிறகு கூறினார்:-

"அங்கே மதராஸிலும் வெங்கடகிரியிலும் எல்லோரும் ஸ்வாமியைப் பற்றி ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நீ இங்கே பேசாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்!"

பங்களூரில் முதன் முதலாகச் சந்தித்த சந்திப்பிற்குப் 11 வருடங்களுக்குப் பிறகு, பாபா காலம் கனிந்து விட்டது என்று திருவுளம் கொண்டார் போலும்!

கஸ்தூரி உற்சாகமாக பாபாவைப் பற்றிய புத்தகத்தை எழுதி முடித்தார். நூல் முடிந்தது, ஆனால் அதற்கு என்ன பெயரைச் சூட்டுவது? கஸ்தூரி குழம்பினார். ஸ்ரீ சத்ய சாயிபாபாவில் S, S, S என 3 Sகள் வரும். பாபாவும், "நான் யெஸ் யெஸ் யெஸ் (S, S, S) என்று சொல்லாமல் யாராலும் இங்கு வர முடியாது" என்று அடிக்கடி கூறுவதுண்டு. ஆகவே, எஸ் என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் சாந்தம், சுந்தரம், சிவம், சந்தோஷம், சுகம் போன்ற வார்த்தைகளைச் சிந்திக்கலானார் கஸ்தூரி. தாவணகெரே பிளாட்பாரத்தில் ரயிலுக்காகக் காத்திருந்தபோது அவருக்கு மின்னலாக ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற பெயர் தோன்றியது. அதையே நூலின் பெயராக வைத்தார். பாபாவும் உடனடியாக அதை ஆமோதித்து அனுக்ரஹித்தார். ‘சத்யம் சிவம் சுந்தரம்’ என்ற வார்த்தைகளை ஸ்வாமி விவேகானந்தர் தனது சொற்பொழிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் என்று பாபாவின் அணுக்கத் தொண்டர்களில் ஒருவரான டாக்டர் பகவந்தம் தெரிவித்தார். பக்தி யோகம் பற்றி அமெரிக்காவில் ஸ்வாமி விவேகானந்தர் ஆற்றிய அந்தச் சொற்பொழிவில் சத்யத்தின் அவதாரம் வருவதைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர், சத்யம் சிவம் சுந்தரம் என்று குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ சத்ய சாயியின் வருகையைக் குறிக்கும் புத்தகத்தின் பெயரும் சத்யம் சிவம் சுந்தரம்தான்! என்ன அழகிய பொருத்தம் இது!!

அடுத்து சில நாட்கள் கழித்து, துளஸிதாஸர் எழுதிய ராமசரிதமானஸத்திலும் இதே வார்த்தைகளைத் தற்செயலாகக் கஸ்தூரி பார்த்து மனம் மிக மகிழ்ந்தார். 1923ஆம் ஆண்டிலிருந்து 1948ஆம் ஆண்டு வரை நிகழ்ந்ததைப் புத்தகம் தொகுத்துக் கூறி இருந்தது.

1960ஆம் ஆண்டு வெளியான புத்தகம் பக்தர்களைப் பரவசப்படுத்தியது. எட்டு ஆண்டுகள் கழிந்தன. பின்னர் ‘சத்யம் சிவம் சுந்தரம்’ நூலின் இரண்டாம் பாகம் வெளியானது.

கஸ்தூரி அவர்களின் 75ஆம் வயதில் (1972ஆம் ஆண்டு) சாயி சரிதத்தின் மூன்றாம் பாகம் வெளிவந்தது. அதற்குப் பத்து வருடங்கள் கழித்து நான்காம் பாகம் வெளிவந்தது.

கோடிக்கணக்கான மக்களைப் பரவசப்படுத்திய ‘சத்யம் சிவம் சுந்தரம்’ பாபாவின் நூற்றுக்கணக்கான அற்புதச் செயல்களை அதிகாரப்பூர்வமாகத் துல்லியமாக விளக்குகிறது. ஆற்றொழுக்குப் போன்ற அற்புத நடையில் எழுதப்பட்ட சரிதம் இது.

1926க்கும் 1982க்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்! உலகில் சாயிபாபாவைத் தெரியாத நாடுகளே இல்லை. சாயி சமிதிகள் உலகெங்கும் வெற்றிகரமாக பாபாவின் செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தன. விஞ்ஞானிகள், பக்தர்கள், அறிஞர்கள், உலக நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், சாமான்ய மக்கள், பக்தர்கள் என ஆயிரமாயிரம் பேர் யாத்திரை செய்யும் தலமாக பிரசாந்தி நிலையம் மாறிய விந்தைக் காட்சியை உருவாக்கி இருந்தார் பாபா!

பாபாவின் அற்புதம் அதல பாதாளத்தையும் வானின் உயரத்தையும் அளந்த நிகழ்ச்சிகள் ஏராளம். 800 அடி ஆழத்தில் அதல பாதாளத்தில் கர்நாடகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் விழுந்து விட்ட ஒரு பக்தர் காப்பாற்றப்பட்டதையும், 20,000 அடி உயரத்தில் பறந்தபோது விமானம் விபத்துக்குள்ளாகி ஒரு பக்தர் காப்பாற்றப்பட்டதையும் கஸ்தூரி அறிந்து அதிசயித்தார்.

"நான் உலகெங்கும் வியாபித்துள்ளேன். ஒவ்வோர் அங்குலமும்!" என்று அருளிய பாபாவின் சத்திய வாக்கை மெய்ப்பிப்பது போல உலகெங்குமுள்ள அவரது பக்தர்கள் அடைந்த அற்புத அனுபவங்கள் எண்ணிலடங்கா!

பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பாபாவைப் பற்றி இதுவரை வந்து விட்டன; இன்னும் வருகின்றன!

"நானே சிவ சக்தி! நான் சனாதன சாரதி! நான் உங்களில் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக இயற்றப்பட்ட பகவத் கீதையை அருளுவேன்" என்று அருளிய அவதாரத்தின் லீலைகளை அருகிலிருந்து நாள்தோறும், கணம்தோறும் கஸ்தூரி அனுபவித்தார்.

-தொடரும்

About The Author