அந்தியிலே கவிதைப் பந்தியிலே(1)

மந்தியின் தாடை போலச்
சிவந்திட்ட மேற்கு வானில்
செந்தழல் பரிதி மெல்லச்
சென்றுவீழ் மாலை நேரம்
சிந்தையில் உயர்ந்தோர் போலச்
சிறந்திடும் மலையின் மீது
விந்தைசால் தங்கப் போர்வை
விருப்புடன் போர்த்து வைக்கும்

மலர்தொறும் சென்று மீளும்
மணிச்சிறை வண்டின் காட்சி
அலுவலில் இளையோன் நாட்டில்
அலுவலில் வாயில் தோறும்
கலக்கமாய் ஏறி மீளும்
காட்சியைக் காட்டும்! காற்றில்
அலைந்திடும் சருகின் ஓசை
அன்னவன் நெடுமூச் சொக்கும்

இரந்துயிர் வாழ்வோன் கெஞ்சி
இளித்திடுங் காட்சி ஆடி
வருந்தென்றல் தழுவும் முல்லை
வாயினில் தோன்றும்! வாட்டும்
பெரும்பிணி வறுமை யுற்றோர்
பிழைத்திட லின்றி வீழும்
பருவரல் காட்சி கூம்பும்
தாமரை பரிந்து காட்டும்

About The Author