அன்புடன் இதயம் (2)

ஊரும் உலகமும்
உறவும் காட்சிகளும்
தப்பும் தவறுமாய் மொழிபெயர்த்தாலும்
நடுநாசி சிவக்க என் செயல் முகர்ந்து
முழுமனம் பூட்டி
உள் நியாயம் புரிந்த
உன் ஆறுதல் பரிசத்தில்
என்னுயிர் காக்க

அன்பே நீயென் உடன் வருவாயா

சரியா – நூறுசதம்
அழகா – அற்புதம்
என்னும்
இதய மலர்வு வார்த்தைகளும்

சரியா – ம்ஹூம்
அழகா – மாற்று
என்னும்
அக்கறை விமரிசனங்களும்
தந்தருள

அன்பே நீயென் உடன் வருவாயா

தன்னம்பிக்கை தத்தளிக்கும்
தோல்வித் தருணங்களில்
உன் நம்பிக்கையோடு
இந்த உலக நம்பிக்கை
அனைத்தையும்
என்னம்பிக்கைக்குள் ஊற்றி ஊற்றி
தைரிய தீபம் ஏற்ற

அன்பே நீயென் உடன் வருவாயா

அருகில் இருந்தாலும்
தூரத்தே வாழ்ந்தாலும்
அதே அடர்வில் அக்கறை சுரந்து
அன்பைப் பொழிய

அன்பே நீயென் உடன் வருவாயா

சுக்கல் சுக்கலாய்
மனம் நொறுங்கிக் கிடக்கும்
இருள் பொழுதுகளில்
நான் மறைத்தாலும்
என் கவலைகள் மோப்பமிட்டு
கருணைக் கரம் நீட்டி
இடர்முள் களைய

அன்பே நீயென் உடன் வருவாயா

இத்தனையும் கொண்ட உன்னை
என் ஆருயிர்ப் பொக்கிசமாய்
ஆராதித்து ஆராதித்து
நான் பாதுகாக்க

அன்பே நீயென் உடன் வருவாயா

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author