அமானுஷ்யன் -2

CBI டைரக்டர் மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்தின் முன் காரில் இருந்து இறங்குகையில் பத்திரிகை நிருபர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டார்கள்.

"சார் அடிஷனல் டைரக்டர் ஆச்சார்யாவைக் கொலை செய்தது யார் என்று தெரிந்து விட்டதா?"

"உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் இருக்கிறதா?"

"CBI அடிஷனல் டைரக்டர் கொலைக்கு அரசியல் காரணங்கள் இருக்கும் என்று நினைக்கிறீர்களா?"

மஹாவீர் ஜெயின் கைகளை உயர்த்தி மேலும் வரவிருக்கும் கேள்விகளை நிறுத்தினார். "அவரைக் கொன்றவர்கள் யார் என்பதை கூடிய சீக்கிரம் கண்டு பிடிப்போம். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. அவரைக் கொன்றவர்களைக் கண்டு பிடிக்க போலீஸ் ஒரு சிறப்புக் குழு அமைத்துள்ளது. அவர்களுக்கு இதில் முழு ஒத்துழைப்பு தருவதுடன் எங்கள் தரப்பிலும் விசாரணை நடக்கும். இப்போதைக்கு வேறெதுவும் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். நன்றி"

நிருபர் கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது. "உங்களுக்கும் ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று கூறுகிறார்களே அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?"

மஹாவீர் ஜெயின் புன்னகையுடன் சொன்னார். "எனக்கும் என் மனைவிக்கும் இடையே எக்கச்சக்கமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன…..எங்களுக்குத் திருமணமாகி இருபத்தி எட்டு வருடங்கள் ஆகின்றன. என் மனைவி இன்னும் இருக்கிறார்…..என்னை அதிகாரம் செய்து கொண்டு"

பலத்த சிரிப்பலைகள் எழ மஹாவீர் ஜெயின் தன் அலுவலகத்திற்குள் நுழைந்தார். தன் அறை நாற்காலியில் அமர்ந்த போது கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்வி அவர் மனதை நெருடியது. அவருக்கும் இறந்த ஆச்சார்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள்….

எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஆச்சார்யா மீது அவருக்கு பெரும் மரியாதை இருந்தது. மனிதர் மிக நேர்மையானவர். நல்லவர். ஆனால் அவர் சில விஷயங்களில் ரகசியமாக இயங்கி வந்தார். கடைசியில் எல்லாம் முடிந்த பிறகுதான் ஜெயினுக்கே தெரிவிப்பார். உதாரணமாக, சென்ற வருடம் ஒரு போதை மருந்து கடத்தல் கும்பலை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்த விதம். CBI ஆட்கள் அந்த கேஸில் ஈடுபடுத்தப்படவில்லை. யாரோ ரகசியமாகத் தெரிவித்தார்கள் என்று சொல்லி, தகவல் தெரிவித்தவருக்கு பெரும் தொகை ஒன்றையும் அவர் பெற்றுத் தந்தார். ஆனால் ஜெயினுக்குத் தெரியும் யாரோ வெளியாட்கள் சிலரை வைத்துக் கண்டுபிடித்திருக்கிறார் என்று. அது பல நாட்கள் செய்த வேலையின் பலன். ஆனால் தகவல் தெரிவித்ததாகச் சொன்ன நபர் அல்லது கண்டு பிடிக்க உதவிய நபர் அல்லது நபர்கள் யார் என்று இன்று வரை ஜெயினுக்குத் தெரியாது. ஆச்சார்யா தன் சொந்த அதிகாரத்தில் அதை வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

ஜெயினுக்கு அவருடைய ரகசியத்தன்மை பெரும் எரிச்சலைக் கிளப்பியது. பல முறை வெளிப்படையாகவே அதை அவரிடமும், மற்ற உயர் அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இருந்தார். CBI வெளி மனிதர்களைத் தங்கள் துப்பறியும் வேலைகளுக்குப் பயன்படுத்துவது புதிதல்ல என்றாலும் முழுக்க முழுக்க யாரோ ஒரு சில வெளியாட்களை அவர் பயன்படுத்துவது தவறு என்று ஜெயின் சொன்ன போது, இங்குள்ளவர்களுள் ஒரு சிலர் மூலம் வெளியாருக்கு தகவல்கள் சுலபமாகச் செல்கிறது என்பதுதான் காரணம் என்பது போல ஆச்சார்யா சொன்னார். யார் அந்தப் புல்லுருவிகள் என்று கேட்டதற்குச் சரியாகத் தெரியவில்லை என்பது அவரது பதிலாக இருந்தது.

வழக்கமான கேஸ்களை அவருடைய டிபார்ட்மெண்ட் ஆட்களே கவனித்து வந்தார்கள் என்றாலும் இப்போதும் ஏதோ ஒரு பெரிய கேஸை அவர் திரை மறைவில் துப்பறிந்து வந்தார் என்று ஜெயினுக்கு சந்தேகம் தோன்றியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு இரவில் ஆச்சார்யா ஜெயினுக்குப் போன் செய்திருந்தார்.

"சார். நாட்டையே அதிர வைக்கிற மாதிரியான சில தகவல்களை ஆதாரத்தோட வைத்திருக்கிறேன். நாளைக்குக் காலையில் உங்க டேபிள்ல வைக்கிறேன்."

அப்போதைக்கு என்னவோ ஜெயினுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது. அவருக்குத் தெரியாமல் தானாகவே ஒரு கேஸை எடுத்துக் கொண்டு திரைமறைவில் இந்த முறையும் ஆச்சார்யா துப்பறிந்து சொல்ல வருவது அவருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஆச்சார்யா சொல்ல வருவதற்கு முன் கொலை செய்யப்பட்டு விட்டார்.

ஆச்சார்யாவின் மனைவி பெங்களூரில் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சென்றிருந்ததால் ஆச்சார்யா வீட்டினுள் தனியாகவே அன்று இருந்திருக்கிறார். நள்ளிரவில் அவர் வீட்டுக்குக் காவல் இருந்த போலீஸ் கான்ஸ்டபிள் முதலில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பின் அவருடைய வீட்டுக்குள் கொலையாளியோ, கொலையாளிகளோ நுழைந்திருக்கிறார்கள். கதவு உடைக்கப்படவில்லை என்பதால் உள்ளே நுழைந்த நபர் அல்லது நபர்கள் ஆச்சார்யாவுக்குத் தெரிந்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆள் யார் என்று பார்க்காமல் நள்ளிரவில் கதவைத் திறப்பவரல்ல அவர். உள்ளே நுழைந்த நபர்/கள் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு அவருடைய வீட்டுப் பொருள்களைக் கண்டபடி துவம்சம் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்….

போலீஸ் விசாரணையின் போது அவரிடமும் கேள்வி கேட்டார்கள். அப்போது ஜெயின் கடைசியாக ஆச்சார்யா செய்த போன் கால் பற்றி சொல்லவில்லை. அந்த போன் காலை அவர் ஏதோ ஒரு காயின் பாக்ஸ் போனிலிருந்துதான் செய்திருந்தார் என்பதால் போலீசிடம் அந்தத் தகவல் இருக்கவில்லை. இவராகவும் அதை சொல்லவில்லை. போலீசில் இருந்து பத்திரிகைகளுக்கு இந்தத் தகவல் கசிவதை அவர் விரும்பவில்லை.

இதை தங்கள் தரப்பிலிருந்தே ரகசிய விசாரணை செய்வது நல்லது என்று ஜெயின் நினைத்தார். அதுவும் இப்போதைய தலைமை அலுவலகத்தில் இல்லாத, தங்கள் வட்டார அலுவலகத்தில் உள்ள ஏதாவது ஒரு திறமையான அதிகாரியைக் கொண்டு விசாரணை நடத்துவது உத்தமம் என்று தோன்றிய உடனேயே அவருக்கு ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. உடனே சென்னை அலுவலகத்திற்குப் போன் செய்தார்.

*******

அவன் இன்னும் தன் மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்துக் கொண்டுதான் இருந்தான். எதுவுமே நினைவில்லை. அவனுக்கு நினைவிற்கு எதுவும் வரவில்லை என்பது தெரிந்த மூத்த பிக்கு அவனுடைய சட்டை, பேண்ட் ஆகியவற்றை பரிசோதித்துப் பார்த்தார். ஒரு சிறிய காகிதம் கூட இருக்கவில்லை. சட்டை, பேண்ட் இரண்டும் ரெடிமேடாக இருந்ததால் தையல்காரன் பற்றிய தகவல் கூட இருக்கவில்லை. பிறகு மூத்த பிக்கு சொன்னார். "இப்போது எதுவும் நினைவுக்கு வரா விட்டால் பரவாயில்லை. கவலைப்படாமல் தூங்கு. இன்னொரு முறை தூங்கி எழுந்தால் எல்லாம் நினைவுக்கு வரும்" அவர் ஏதோ விதைகளைக் கசக்கி முகர வைத்து அவனை மறுபடி உறங்க வைத்தார்.

அவன் மறுபடி எழுந்து இப்போதும் யோசிக்கிறான். உலகத்திலேயே ஒரு மனிதனுக்கு மிகவும் பரிச்சயமான பெயர் தன் சொந்தப் பெயராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஏனோ அதுவே அவனுக்கு நினைவுக்கு வரவில்லை. அவனுக்கு நினைவு இருப்பதெல்லாம் புத்த பிக்குகளும் இந்த புத்த விஹாரமும்தான். மற்றதெல்லாம் துடைத்தெடுத்தது போல் நினைவரங்கம் வெறுமையாக இருந்தது. தலையில் அடிபட்டது காரணமாக இருக்குமா? தோள்பட்டையில் குண்டு பாய்ந்திருந்ததை மூத்த பிக்கு சிகிச்சை செய்து எடுத்தாரே, யார் சுட்டார்கள்? ஏன் சுட்டார்கள்?

தலையும், தோளும் வலித்தது பெரிதாகத் தோன்றவில்லை. எதுவும் நினைவுக்கு வராதது பயங்கரமாக இருந்தது.

அப்போது புத்த விஹாரத்தின் வெளியே சலசலப்பு கேட்டது. அவன் காதைக் கூர்மையாக்கினான்.

வெளியே இரண்டு இளைஞர்கள் இளைய பிக்குவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். "இங்கே ஏதாவது மனித உடல் விழுந்திருந்ததா?"

அவர்கள் கேட்ட விதத்திலேயே அவர்கள் உயிருள்ள உடலைத் தேடவில்லை, செத்த பிணத்தைத்தான் தேடுகிறார்கள் என்பது அந்த இளைய புத்த பிக்குவிற்குத் தெரிந்து விட்டது. அவர்களை இதுவரை அந்தப் பகுதியில் பார்த்ததில்லை. அவர்கள் நினைப்பது போல் அவன் சாகவில்லை உயிர் பிழைத்து விட்டான் என்று சொல்ல நினைத்த இளைய பிக்கு வந்திருந்த ஆட்களின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தார். நல்ல மனிதர்களாகத் தெரியவில்லை. கண்களில் ஒருவித கொடூரம் தெரிந்ததை அவர் கவனித்தார். இவர்கள் கொலை செய்ய முயன்ற கூட்டத்தாராகக் கூட இருக்கலாம். இல்லையென்றால் இவர்களுக்கு எப்படி ஒரு பிணம் இந்தப் பகுதியில் விழுந்து கிடக்கும் என்று தெரியும்? அப்படி எதுவும் இந்தப் பகுதியில் விழவில்லை என்று சொல்வதே உள்ளே உள்ள வாலிபனுக்கு பாதுகாப்பு என்று தோன்றியது. ஆனால் இந்த புத்த விஹாரத்தில் சேரும் போது அவர் சத்தியம் செய்திருக்கிறார்- எந்தக் காரணத்தை வைத்தும் பொய் சொல்ல மாட்டேன் என்று!

செய்த சத்தியம் பெரிதா உயிர் பெரிதா என்று தனக்குள் கேட்டுக் கொண்ட இளைய பிக்கு சத்தியம் திரும்பவும் செய்து கொள்ளலாம், ஆனால் உயிர் போனால் திரும்பி வருமா? என்று யோசித்து முகத்தில் ஆச்சரியத்தைக் காட்டி "இல்லையே" என்றார்.

வந்தவர்களில் ஒருவன் திரும்பத் தயாரானான். அடுத்தவன் அவனைத் தடுத்து நிறுத்தி புத்தவிஹாரத்தின் கதவைக் காட்டினான். கதவில் இரத்தக் கறை இருந்தது……

இளைய பிக்குவிற்கு ஒரு கணம் இதயத்துடிப்பு நின்று போனது

(தொடரும்)

About The Author

1 Comment

Comments are closed.