அருள் புரியும் அஷ்டலட்சுமிகள்

மனிதனின் வாழ்க்கையில் ஆரோக்கியம், பணம், நல்ல உறவுகள் ஆகியவை முக்கிய அம்சமாக வருகின்றன. மனிதனுக்கு இவை மூன்று மட்டும் இருந்துவிட்டால் மன திருப்தியும், வாழ்க்கையில் அனைத்தையும் பெற்று விட்டது போல ஒரு உணர்வும் கிடைக்கின்றன.

மஹாலட்சுமி, ரித்தி லட்சுமி, சித்தி லட்சுமி, கீர்த்திலட்சுமி, கிருஹலட்சுமி, சத்ருவினாஸினி லட்சுமி, சஞ்சீவினி லட்சுமி, காந்தி லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு வடிவங்களில் மனிதனுக்கு அருள் பொழிகிறாள்.

ரித்திலட்சுமி

ரித்திலட்சுமியின் அருளால் தொட்டதெல்லாம் துலங்கும் என்பது போல வாழ்க்கையில் வெற்றியையே காணலாம். சாமானியமனிதன் சாதனை படைக்கக் கூடிய திறனைப் பெறலாம். ரித்திலட்சுமி பசுமையை நேசிப்பவள், இயற்கையில் குடி கொள்பவள். மரம், பூச்செடிகள் வைத்திருக்கும் இல்லத்தில் ரித்திலட்சுமி குடி இருக்கிறாள்.

சித்திலட்சுமி

சித்திலட்சுமி மனிதனுக்குப் படிப்பு, ஞானதிருஷ்டி, திறமை, புத்திசாலித்தனம் போன்றவற்றை வாரி வழங்குகிறாள். இவளது அருளால் மனிதன் படிப்பிலும், தொழிலிலும் ஈடுபாட்டோடு செயல்படுகிறான். சித்திலட்சுமி ஒருவருக்கு அறிவையும், ஆற்றலையும் கொடுக்கிறாள். இல்லத்தின் கதவுகள் வடக்கு திசையை நோக்கியிருந்தால், அந்த இல்லம் சித்திலட்மியின் வரம் பெற்ற இல்லமாகக் கருதப்படுகிறது.

கீர்த்தி லட்சுமி

கீர்த்தி லட்சுமியின் பார்வையில், பெயர், புகழ், மதிப்பு, ஆகியவை மனிதனைத் தேடி வருகின்றன. அனைவராலும் போற்றக் கூடிய மனிதனாகத் திகழ்வதற்கு கீர்த்தி லட்சுமியின் அருள் கிடைக்க வேண்டும். வீட்டின் கிழக்குத் திசையில் வேண்டாத வஸ்துக்களை நிரப்பாமல் சுத்தமாக வைத்திருக்கும் இல்லத்தில் கீர்த்திலட்சுமி குடி கொள்கிறாள் என்று சொல்லலாம்.

க்ருஹலட்சுமி

க்ருஹலட்சுமி உறவுகளை பலப்படுத்துவதில் பெரிதும் துணை புரிகிறாள். இவளது துணையால் கணவன் மனைவியரிடையே நிலவும் உறவில் சுமூகத்தையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையையும் காணலாம். க்ருஹலட்சுமி இல்லத்தில் பிரகாசத்தை நேசிப்பவள். படுக்கும் அறை நேர்த்தியாகவும் சுத்தமாகவும் அமைந்த இல்லத்தில் அவள் அருள்மழை பொழிகிறாள்.

ஸத்ருவினாஸினி லட்சுமி

ஸத்ருவினாஸினி லட்சுமி என்பவள் மனிதனுக்குப் பாதுகாப்பான வாழ்க்கையைக் கொடுக்கிறாள். இந்த லட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பகைவர்கள் இல்லாத வாழ்க்கை அமைகிறது. பகைமையை அறவோடு ஒழித்து ஒற்றுமையை வளர்ப்பவள் இந்த ஸத்ருவினாஸினி லட்சுமி என்று சொல்லலாம். தென்கிழக்குத் திசையில் வேண்டாத சாமான்களை ஒழிப்பதால் அந்த இல்லத்திற்கு இவளது அருள் கிடைக்கிறது.

சஞ்சீவினி லட்சுமி

சஞ்சீவினி லட்சுமியின் அருளால் மனிதன் நோயில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையைப் பெறுகிறான். ஆரோக்கியமான மனிதன் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுகிறான். குளிக்கும் அறை, படுக்கும் அறை சுத்தமாக இருக்கும் இல்லம் சஞ்சீவி லட்சுமியின் அருளைப் பெற்ற இல்லம் என்று சொல்லலாம்.

காந்தி லட்சுமி

அழகான வசீகரமான தோற்றத்தையும், பொலிவையும் தருபவள் காந்தி லட்சுமி. காந்தி லட்சுமியின் அருளால் மனிதன் மற்றவர்களைத் தன்பால் ஈர்க்கும் திறனைப் பெறுகிறான். அக்கம் பக்கத்திலுள்ள சாக்கடைத் தண்ணீர் ஒழுகாமல் மிகவும் சுத்தமாக இருக்கும் இல்லத்தில் காந்தி லட்சுமி குடிகொள்கிறாள். தினம் சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் இவளது அருளைப் பெறுகிறார்கள்.

தனலட்சுமி

வடகிழக்குத் திசையில் தனலட்சுமி வாசம் புரிகிறாள். தனலட்சுமி செல்வத்தைக் குறிக்கிறாள். வடகிழக்கு மூலை சுத்தமாகவும் வேண்டாத சாமான்கள் நிரப்பாமல் காலியாகவும் வைத்திருக்கும் இல்லத்தில் தனலட்சுமி குடி கொள்கிறாள். தனலட்சுமி மனிதனின் செல்வ நிலையை உயர்த்துவதில் பெரிதும் துணை புரிகிறாள். வடக்கு, கிழக்கு திசைகளில் அமைந்துள்ள அறைகளில் அதிக ஜன்னல்கள் இருந்தால் அந்த இல்லத்திற்கு தனலட்சுமியின் அருள் கிடைப்பதில் சந்தேகமில்லை என்று சொல்லலாம்.

இவ்வாறாக, எட்டு வடிவங்கள் கொண்ட மஹாலட்சுமியின் அருளைப் பெற்ற மனிதன், வாழ்க்கையின் எல்லா வரங்களையும் பெற்றவன் என்று சொன்னால் அது மிகையாகாது.

Source : From Indian God and Goddess

About The Author