அறிவியலும் தொழில் நுட்பமும் ( 13)

படகுகளில் பாய்மரங்கள் (sails) கட்டப்பட்டிருத்தல்:

இப்புவி முழுதும் ஏறக்குறைய முக்கால் பகுதி தண்ணீரால்தான் நிரம்பியுள்ளது; அதாவது கடல் நீரால் சூழ்ந்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக, இவ்வுலகிலுள்ள மக்கள் இந்த நீரைக் கடந்து செல்வதற்கான வழிமுறைகளைக் கண்டுபிடித்து வந்துள்ளனர். முதலில் அவர்கள் கட்டுமரத் தோணிகளைத் (rafts) துடுப்புகளுடன் (oars) பயன்படுத்தினர். கி.மு.2900 வாக்கில் எகிப்தியர்கள் பாய்களைக் (sails) கொண்ட படகுகளைப் பயன்படுத்தத் துவங்கினர். அப்போது முதல் கடந்த நூற்றாண்டு வரை இத்தகைய கடல்வழிப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இப்போது எந்திரங்கள் பொருத்தப்பட்ட பெரிய கப்பல்கள் முதல் விளையாட்டு, மீன் பிடித்தல் மற்றும் உள்ளூர் வாணிகம் போன்றவற்றிற்கான சிறிய கப்பல்கள் வரை பலவகைக் கப்பல்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடலில் செலுத்தப்படும் கப்பல்கள் காற்றின் ஆதரவையே பெருமளவு நம்பியுள்ளன. இருப்பினும், கடல் பயணம் மேற்கொள்வோர் காற்றின் திசையை மாற்ற இயலாது; ஆனால், தாங்கள் பயணம் செய்யும் திசையை விரும்பிய வண்ணம் மாற்றிக் கொள்ள இயலும்.

பாய்மரப் படகுப் பந்தயம் என்பது (yacht racing) இக்காலத்தில் புகழ் வாய்ந்த ஒன்று. இவ்வகைப் பந்தயத்தில் படகு செல்லும் திசையோட்டத் (tacking) திறனைக் கொண்டு வெற்றி தீர்மானிக்கப் படுகிறது.

கார்களில் எஞ்சின்களின் (engines) பயன்பாடு:

ஆற்றலைப் பயன்படுத்திச் சாலையில் ஓடிய முதலாவது வாகனத்தில் நீராவியே பயன்படுத்தப் பட்டது. இருப்பினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், உள் எரி எஞ்சினைப் (internal combustion engine) பயன்படுத்தத் துவங்கிய பின்னரே மோட்டார் போக்குவரத்து வெற்றிகரமாக அமைந்தது. உள் எரி எஞ்சினில் பொதுவாக பெட்ரோல் அல்லது டீசல் ஆகியவையே எரி பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எரிபொருளானது உலோக உருளைகளுக்குள் (metal cylinders) எரியூட்டப்படுகிறது. இதன் காரணமாக உருளையினுள் இருக்கும் உந்து தண்டு (piston) மேலும் கீழும் ஏறி இறங்குகின்றது. இத்தகைய மேலும் கீழுமான அசைவு வணரித் தண்டினால் (crank shaft) திருப்பு இயக்கமாக (turning movement) மாற்றப்பட்டு, இருசுகளும் (axles) சக்கரங்களும் (wheels) இயங்கி, மோட்டார் கார் முன்னே செல்லமுடிகிறது. எஞ்சினானது மின்மாற்றிக்கான (alternator) திறனை வழங்கி அதனால் மின்னோட்டம் (electric current) உற்பத்தி செய்யப்படுகிறது. இம்மின்சாரம் மின்கலனில் (battery) சேமிக்கப்பட்டு, காரின் விளக்குகள் எரியவும் துடைப்பான்கள் இயங்கவும் பிற மின் சாதனங்கள் செயல்படவும் உதவுகிறது.

பெரும்பாலான பெட்ரோல் எஞ்சின்கள் மிகுதியான ஒலியையும் ஊறு விளைவிக்கும் புகையையும் உண்டாக்குகின்றன. அமைதியான மற்றும் தூய்மையான மின் கார்கள் தற்போது வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் மின்கலன்கள் தொடர்ந்து மறுமின்னூட்டம் (recharging) செய்யப்பட வேண்டியுள்ளது.

About The Author