அறிவியலும் தொழில் நுட்பமும் (11)

ரைட் சகோதரர்கள் (Wright Brothers):

மக்கள் வானத்தில் பறப்பதற்கு அவ்வப்போது முயற்சிகள் மேற்கொண்டாலும், வெற்றிகரமாக விமானத்தில் பறப்பதில் போட்டி இருந்துகொண்டேதான் வந்தது. முழுக் கட்டுப்பாட்டுடன் வானத்தில் பறப்பதற்கான விமானத்தைக் கண்டுபிடித்து அதில் வெற்றிகரமாக பறந்து காட்டியவர்கள் ரைட் சகோதரர்களே. அவர்களது முதலாவது வான் பயணம் 1903இல் அமெரிக்காவிலுள்ள கிட்டி ஹாக் என்னுமிடத்தில் நடைபெற்றது.

ரைட் சகோதரர்களின் விமானம் பெட்டி வடிவில் அமைந்த பெரியதோர் பட்டம் (kite) போன்று இருந்தது; இரண்டு முன்னியக்கச் சுழலிகளை (propellers) எந்திரத்தின் துணை கொண்டு சங்கிலிகளால் இயக்கினர். கிளமெண்ட் அட்லர் என்பவர், ஃபிரான்சு நாட்டில் 1890ஆம் ஆண்டு நீராவியின் துணை கொண்டு ஒரு விமனத்தை இயக்கிக் காட்டினார் என்றாலும், நடைமுறைக்கேற்ற, கட்டுப்பாட்டுடன் கூடிய, வெற்றிகரமாகப் பறக்கக் கூடிய விமானத்தை இயக்கியவர்கள் ரைட் சகோதரர்களே.
ஃராங்க் விட்டில் என்பவர் 1928-30களில் முதலாவது ஜெட் எஞ்சினை வடிவமைத்தார்; இருப்பினும் ஒரு ஜெட் விமானத்தை இயக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. ஹான்ஸ் வான் ஒஹெய்ன் என்னும் ஜெர்மன் பொறியாளர் இதைப் போன்றதொரு ஜெட் எஞ்சினை உருவாக்கி 1939ஆம் ஆண்டு வாக்கில் ஒரு விமானத்தைப் பறக்கச் செய்தார்.

உலங்கு ஊர்தி (helicopter) :

மக்கள் வானில் பறக்கத் துவங்குவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே லியோனார்டா டா வின்சி (1452-1519) என்பவர் வானில் பறப்பதற்கு ஏற்ற வகையில் இருக்கக்கூடிய ஹெலிகாப்டர் போன்ற அமைப்பிற்கான திட்டத்தை வரைந்தார். எனவேதான் இது நவீன கண்டுபிடிப்பாகக் கருதப்படுவதில்லை. ஹெலிகாப்டரில் அமைந்துள்ள முன்னியக்கச் சுழலிகள் (propellers) போன்ற மிகப் பெரிய சுழலிகளைச் (rotors) சுழலச் செய்து, அதனைக் காற்றில் மேலெழுப்பி வானில் பறக்கச் செய்யப்படுகிறது. இச்சுழலிகள் குறுகிய இறக்கைகள் போல் செயல்பட்டு, காற்றில் விரைந்து சுழலுவதால், ஹெலிகாப்டர் மேலே உயர்த்தப்படுகிறது. சுழலும் தகடுகளின் (blades) கோணத்தை மிகுதிப்படுத்தி புவிக்கு மேலே இது உயர்த்தப்படுகிறது. மேலும் இத்தகடுகளின் கோணம் உயர்த்தப்படுவதால், ஹெலிகாப்டர் காற்றுக்கு எதிராக நீந்தி, முன்னோக்கிச் செல்லவும் வழியுண்டாகிறது.

காற்றுத் திண்டூர்தி (hover craft) என்பது தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் செல்லும் வானூர்தி வகையாகும். இது தட்டையான அடிப்பாகத்தைக் (flat bottomed) கொண்ட கப்பல் போல் அமைந்து, பெரிய முன்னியக்கச் சுழலிகளால் இயக்கப்படுகிறது. இதன் கீழுள்ள திறப்பிகள் உண்டாக்கும் காற்றுத் திண்டைக் (cushion of air) கொண்டு இது முன்னோக்கிச் செலுத்தப்படுகிறது.

About The Author