அறிவியலும் தொழில் நுட்பமும் ( 12)

சூரியக் கடிகாரங்கள் (sundials):

மனித இனத்தின் முதல் கடிகாரம் என சூரியனைத்தான் குறிப்பிட வேண்டும். பழங்காலத்தில், ஒரு நாளின் நேரத்தை, வானில் சூரியன் செல்வதைக் கொண்டே, மனிதர்கள் அறிந்து வந்தனர். பின்னர், சூரியன் வானில் செல்வதற்கேற்ப, தரையில் நிழலின் நீளம் மாறுவதை மனிதர் பார்த்தனர். எனவே, தரையில் ஏற்படும் நிழல் நீளத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு, சூரியனின் போக்கினால் அறிவதை விடத் துல்லியமாக நேரத்தைக் கணக்கிட இயலும் என மனிதர் கண்டறிந்தனர். சூரியக் கடிகாரத்தை எளிதாக வடிவமைப்பதற்கான முதற்படியாக இது விளங்கியது. முதலாவது சூரியக் கடிகாரம், கம்பம் ஒன்றைத் தரையில் நட்டு, சுற்றிலும் நிழல்கள் விழும் இடத்தில் கற்களைப் பதித்து உருவாக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இதன் மூலம் வளர்ச்சியுற்ற சூரியக் கடிகாரங்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வந்தன.

சூரியக் கடிகாரங்களின் கண்டுபிடிப்புக்குப் பின்னர் நேரத்தை அறிவதற்கான பிற வழிமுறைகள் வளர்ச்சியுற்றன. மணிக் கண்ணாடிகள் (hourglasses) மற்றும் மெழுகு வர்த்திகள் எரிதல் போன்றவற்றைக் கொண்டு நேரத்தை அறிதல் இதில் அடங்கும். தற்போதைய பல்வகைப்பட்ட கடிகாரங்கள் துல்லியமாக நேரத்தை அறிவதற்கான பெரும் வளர்ச்சியாக விளங்குகின்றன.

நேரத்தை அளவிடுதல் (Measurement of Time):

நேரத்தை அடிப்படையாக வைத்துத்தான் தற்போது மனிதர்கள் தம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்கின்றனர். வேட்டையாடி வந்த பழங்கால மக்கள் பகல் நேரத்தில் வேட்டையாடச் சென்றனர். வேளாண்மை வளர்ச்சியுற்ற பின்னர், உரிய நேரத்தில் பயிரிடுவதற்கான பருவ காலங்களை அறியத் தொடங்கினர்.

பண்டைய நாட்களில், சூரியனின் வான் பயணத்தின் அடிப்படையில், ஒரு நாளின் நேரம் அறிந்துகொள்ளப் பட்டது. மேலும் நிலவின் ஒழுங்கான தோற்றம், வளர்ச்சி, முழுமை அடைதல், தேய்தல், மறைதல் ஆகியவற்றின் அடைப்படையிலும் நாட்கள் கணக்கிடப்பட்டன. தற்கால வாழ்க்கை முறை, நேரத்தையே பெருமளவுக்குச் சார்ந்துள்ளது; மிகத் துல்லியமான கடிகாரங்களின் துணையோடு நாளின் ஒவ்வொரு மணித்துளியும் அளவிடப்படுகிறது. தற்காலக் கடிகாரங்கள் பெரும்பாலும் எண்ணிலக்க (digital) அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இத்தகைய கடிகாரங்கள் மின்னணுச் சுற்றினால் (electronic circuit) அமைந்து, எண்ணிலக்கக் குறியீடுகளைப் பெறுகின்றன. மின்னணுக் கடிகாரங்கள் இருமக் குறியீடுகள் (binary codes) வாயிலாக எண்ணிலக்க சமிக்கைகளைப் (signals) பெற்று நேரத்தை ஆண்டு/மாதம்/நாள்/மணி/ மணித்துளி/நொடி என்னும் முறையில் இலக்க வகையில் காட்டக்கூடியவை.

About The Author