அறிவியலும் தொழில் நுட்பமும் (20 )

வானில் பறந்த முதல் விமானம்

முதலாவது ஆகாய விமானம், ஆற்றலுடன், தொடர்ச்சியாகக், கட்டுப்பாட்டோடு பறந்தது, 17 டிசம்பர் 1903இல் அமெரிக்காவிலுள்ள வட கலிஃபோர்னியா பகுதியில் உள்ள கிட்டி ஹாக் (Kitty Hawk) என்னுமிடத்தில்தான்.
வரலாற்றுப் புகழ் மிக்க இந்தப் பயணத்திற்கான விமானத்தை வடிவமைத்து உருவாக்கிய சகோதரர்கள் ஆர்வில் ரைட் (Orville Wright) மற்றும் வில்பர் ரைட் (Wilbur Wright) எனப்படும் ரைட் சகோதரர்களே ஆவர். ஃப்ளையர் (Flyer) எனப் பொருத்தமாகப் பெயர் சூட்டப்பட்ட இந்த விமானத்தை முதன்முதலில் ஓட்டிப் பயணம் செய்தவர் ஆர்வில் அவர்களே. இவர் வானில் 120 அடி தூரத்தை 12 வினாடிகளில் பறந்து பயணம் செய்தார்; இதன் பிறகு இதே விமானத்தில் வில்பர் 175 அடி தூரத்தை வானில் அதே 12 வினாடிகளில் கடந்தார்.

பின்னர் இவ்விரு சகோதரர்களும் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து பறந்தனர். ஆர்வில் இப்போது 200 அடி தூரத்தை 15 வினாடிகளிலும் அவரது சகோதரர் வில்பர் 852 அடி தூரத்தை 59 வினாடிகளிலும் பயணம் செய்து சாதனை படைத்தனர்.

காற்றுத் திண்டூர்தி (hover craft) கண்டுபிடிக்கப்பு

காற்றுத் திண்டூர்தி (hover craft) என்பது தரைக்கு மேலே சிறிது தொலைவு நீரிலும் நிலத்திலும் செல்லும் வானூர்தி வகையாகும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் கிறிஸ்டோபர் காக்ரெல் (Christopher Cockerel) அவர்கள் 1955ஆம் ஆண்டு இவ்வகை வானூர்தியைக் கண்டுபிடித்தார். சுமார் 80 ஆண்டுகளாக அறிவியலாளர்களைக் குழப்பி வந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வு காண அவர் முடிவெடுத்தார். 1870ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் பொறியாளரான ஜான் தார்னிக்ராஃப்ட் (John Thornycroft) என்பவர், ஒரு கப்பலைத் தனது உடற்பகுதி மற்றும் தண்ணீருக்கு இடையே எவ்வித உராய்வுமின்றி காற்றுத் திண்டின் (cushion of air) ஊடே நீந்திச் செல்லும் வகையில் வடிவமைக்க முயற்சி செய்து வந்தார். படகுக்குக் கீழே எவ்வாறு காற்றை உள்ளடக்கச் செய்வது எனத் தெரியாமல் அவர் திகைத்து நின்போது, கிறிஸ்டோபர் காக்ரெல் படகுக்குக் கீழ்ப் பகுதியில் காற்றை நிலை நிறுத்துவதற்கான ஒரு ரப்பர் பகுதியை இணைத்து இப்பிரச்சினையை வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தார். இது மிகச் சிறப்பாக வினை புரிந்து காற்றுத் திண்டூர்தி உருவாக்கப்பட்டது.

About The Author