அறிவியலும் தொழில் நுட்பமும் (4)

அணுக்கருத் திறன் (nuclear power)

அணுக்கருத் திறன் நிலையத்தினுள்ளே (nuclear power station) பல நூறு கோடிக்கணக்கில் யுரேனியம் அணுக்கள் சிதைக்கப்பெற்று ஏராளமான அணு ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆற்றலைக் கொண்டு நீரைக் கொதிக்க வைத்து, அதிலிருந்து வரும் நீராவியால் (steam) மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அணுக்கருவின் ஆற்றலால் உண்டாகும் மின்சாரம் மிகப் பெரிய அளவில் கிடைப்பதோடு, இதற்காகும் உற்பத்திச் செலவும் மிகவும் குறைவாகும். ஆனால் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக இவ்வகையிலான மின் உற்பத்தி குறைந்த அளவிலேயே நடைபெறுகிறது. அணு மின் உற்பத்தி நிலையத்தில் அமைந்துள்ள அணு உலையைச் (nuclear reactor) சுற்றி பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடிமனான காரை அதாவது காங்கிரீட் (concrete) சுவர் அமைக்கப்படுகிறது.

அணுகுண்டு (atom bomb) பேரழிவை உண்டாக்கக் கூடிய ஆயுதம் என்பதும் அதனால் விளையும் தீமைகள் எண்ணற்றவை என்பதும் வரலாறு நமக்குக் கற்றுத் தந்துள்ள பாடம். எனவேதான், அணுகுண்டைச் சோதனை செய்து பார்ப்பதையும் தடை செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.

அணுக்கரு உலைகள் (nuclear reactors)

அணுவிலிருந்து ஆற்றல் வெளிப்படும் போது உண்டாகும் கதிர்வீச்சினால் (radiation) அபாயகரமான கதிர்கள் தப்பிச் சென்று ஆபத்தை விளைவிக்கக் கூடும்; இதனால்தான் அணு ஆற்றல் காரணமாக மக்கள் அச்சம் கொள்கின்றனர். கதிர்வீச்சு மனிதர் மற்றும் பிற விலங்கினங்களின் உடலினுள் நுழைவது அவர்களுக்குப் பெரும் ஆபத்தை உண்டாக்கக் கூடியதாகும். பெருமளவிலான கதிர்வீச்சு, உயிரணுக்களில் (cells) பாய்ந்து செல்லும் போது, உயிரணுக்கள் சிதைவுற்று அல்லது உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைந்து, உடல் வலுவிழந்து போகும். ஒரு சாதாரண அணு ஆற்றல் உற்பத்தி நிலையத்தில் உயிரினங்களுக்கு மாபெரும் தீங்கு விளைவிக்கும் எராளமான அணுக்கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இக்கழிவுகள் எஃகுத் தொட்டிகளில் (steel tanks) கொட்டப்பட்டு, காங்கிரீட்டில் வைத்துப் புதைக்கப்படும்.

அணு உலையினுள் யுரேனியம் அல்லது புளுடோனியம் அணுக்கள் பிளவுபடுத்தப்படுகின்றன அல்லது சிதைக்கப்படுகின்றன. இச்செயல் முறை அணுக்கருப் பிளவு (nuclear fission) எனப்படுகிறது. இதன் விளைவாக ஏராளமான ஆற்றல் வெளிப்படுத்தப்படுவதோடு அபாயங்களும் ஏற்படக் கூடும். எனவேதான் அணு உலைகள் தொடர்ந்து மிகவும் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டியுள்ளது.

About The Author