அறிவியலும் தொழில் நுட்பமும் (6)

ஒளியிழைக் (optical fiber) கம்பிகள்:

ஒளியிழைக் கம்பி என்பது கண்ணாடியின் நுண்ணிய மற்றும் மெல்லிய இழையால் ஆனது; இதன் ஊடே ஒளித் துடிப்புகள் (light pulses) கடந்து செல்ல முடியும். ஒளியானது மின்சாரத்தை விட மிக விரைந்து செல்லக்கூடியது; எனவே ஒளி வடங்கள் (optical cables) மின்தடை ஏதுமின்றி, நீண்ட தொலைவுக்குத் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளப் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய கண்ணாடி இழைகள் ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கான செய்திப் பொதிகளைச் சுமந்து செல்லக் கூடியவை.
நீங்கள் தொலைபேசியில் பேசும்போது, உங்கள் குரல் லேசர் ஒளிச் சமிக்கைகளாக மாற்றப்பட்டு, ஒளியிழைகள் எனப்படும் மிக மெல்லிய இழைக் கண்ணாடிக் குழல்கள் (fiber glass tubes) வழியே அனுப்பப்படுகின்றன. இந்த ஒளியிழைகளுள் ஒன்றின் வாயிலாக மட்டும் 150,000 எண்ணிக்கையிலான பல்வேறு உரையாடல்களை அனுப்ப முடியும்.

ஒளியிழையானது ஒப்பனையுடன் கூடிய அலங்கார ஒளி விளக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒளி பல்லாயிரக்கணக்கான சின்னஞ்சிறு கண்ணாடி இழைகளில் எதிரொளித்து கிறிஸ்துமஸ் மரம் போன்ற அலங்காரப் பொருட்களில் மிளிர்வதைக் கண்டிருக்கலாம்.

தகவல் தொடர்புப் பரிமாற்ற வசதிகள் (means of communication):

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை விரைவான செய்திப் பரிமாற்றம் என்பது குதிரையின் வேகத்தைப் பொறுத்தே அமைந்திருந்தது. கடல் கடந்த செய்திப் பரிமாற்றமோ கப்பலின் வேகத்தைச் சார்ந்திருந்தது. இத்தாமதத்தை உடைத்தெறிந்த கண்டுபிடிப்புதான் மோர்ஸ் கோட் (Morse code) எனப்படும் தந்தி வழியான தகவல் பரிமாற்றம். இதன் வாயிலாகச் செய்தியானது மின்சாரத்தைப் பயன்படுத்தித் தந்தி வழி அனுப்பப்பட்டது.
ஆனால் இன்றோ, ஒளிப்படங்கள், எழுதப்பட்ட ஆவணங்கள், பேச்சொலிப் பதிவுகள் அல்லது தொலைக்காட்சிப் படங்கள் ஆகிய அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் துணைக்கோள்கள் (satellites), வானொலித் தகவல் பரிமாற்றங்கள் (radio communications) ஆகியவை வாயிலாக அனுப்பப்படுவதை நாம் காண்கிறோம், உணர்கிறோம். பல்வேறு துணைக்கோள்கள், பல்வேறு சுற்றுப்பாதைகளில் (orbits) இவைகளுக்காக உலகம் முழுதும் அனுப்பப்பட்டு பயணம் மேற்கொள்கின்றன. மேலும் தொலைபேசிச் செய்திகள் மற்றும் தொலைக்காட்சிப் படங்கள் போன்றவற்றின் சமிக்கைகள் எதிரொளிக்கப்படுவதற்காக (reflect) பல்வேறு துணைக்கோள்கள் பயன்படுத்தப்படுகின்றன.

குறைவான ஆற்றல் கொண்ட நுண்ணலைகளைப் (microwaves) பயன்படுத்தி மொபைல் தொலைபேசிகள் (mobile phones) வாயிலாக, ஓரிடத்திலிருந்து செய்தியை அனுப்பவும் பெறவும் இப்போது நம்மால் முடிகிறது.

About The Author