அறிவியல் துளிகள் (33) -உலகையே மாற்றப்போகும் பத்து பிரம்மாண்டமான கண்டுபிடிப்புகள்

இன்றைய உலகம் எவ்வளவோ மாறி விட்டது! பழைய காலத்தில் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததெல்லாம் இன்று நடைமுறையில் நடக்கிறது. காரிலிருந்து ஆகாய விமானம் வரை அனைத்தையும் இயக்குவதற்கு சின்னச் சின்ன கணினிகள் உதவிகள் புரிகின்றன. காரை அசெம்ப்ளி செய்வதிலிருந்து வீட்டைச் சுத்தம் செய்வது வரை ரொபாட்டுகள் "பணி புரிய" வந்து விட்டன! அறுவைச் சிகிச்சைக்கு லேஸர் உள்ளிட்ட அதி நவீன சிகிச்சைகள் பயன்படுத்தப் படுகின்றன. க்ளோனிங் என்பது நடைமுறையில் வந்து விட்டது. விண்வெளியில் நிரந்தரமாக ஒரு தளம் இன்று இருக்கிறது. சந்திரனின் இறங்கி வெற்றி கண்ட மனிதன் செவ்வாய் மீது கண்ணைப் பதித்து விட்டான்!

இனி கண்டுபிடிக்க ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி கேட்கக் கூடிய அளவில் அறிவியல் வளர்ந்து விட்டது. என்றாலும் கூட இது ஒரு ஆரம்பம் தான், இனி மேல் தான் நிஜமான கண்டுபிடிப்புகள் வரப் போகின்றன என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். உலகம் வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்துதல், கான்ஸர் உள்ளிட்ட உயிர்கொல்லி நோய்களை அறவே இல்லாமல் ஒழித்தல், நீர் போன்ற ஆதார வளங்கள் குறைவதைத் தடுத்தல் போன்ற சவாலான பிரச்சினைகள் உள்ளனவே, இதைப் போக்க அறிவியல் முனையட்டுமே என்கின்றனர் அறிஞர்களில் இன்னொரு சாரார்!

இந்தச் சூழ்நிலையில் இன்றைய விஞ்ஞானிகள் ரகசியமாக ஆராய்ச்சி செய்து வரும் துறைகள் எத்தனையோ! அவற்றில் பல பிரம்மாண்டமான மாற்றங்களை எதிர்கால உலகில் ஏற்படுத்தப் போகின்றன. அவற்றில் டாப் டென்னை – முக்கியமான பத்தை இங்கே காண்போம்!

பத்தாவது கண்டுபிடிப்பு: மனதை அறிதல்

அறிவியல் புனைகதைகளில் வரும் மனம் அறியும் கருவிகள் பற்றிப் படித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் இப்போது நியூரோ ஸயின்டிஸ்டுகள் (மூளை இயல் விஞ்ஞானிகள்) மூளையை ஸ்கான் செய்து பார்ப்பதில் வெகுவாக முன்னேறி விட்டனர். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் மக்கள் என்ன செய்வார்கள் என்பதை அவர்களால் இன்று சரியாகக் கூற முடிகிறது. அரை நிமிடத்திற்கு முன்னால் ஒரு மனிதன் என்ன தவறு செய்யப் போகிறான் என்பதை மிகச் சரியாக அவர்களால் கூறி விட முடியும்! மூளை செயல்பாட்டில் எதை முன்னுரிமை கொடுத்து மூளை செய்யப் போகிறது என்பதை இன்ஃப்ரா ஒளி மூலம் கண்டுபிடிக்கும் ஒரு புதிய உத்தியையும் விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட செயல்பாடுகளில் மூளை பாட்டர்ன் எனப்படும் அமைப்புகளை பகுத்தாய்வு செய்வதன் மூலமாக அனைத்தையும் அவர்களால் கண்டு பிடிக்க முடியும்! இனி இணைய தளத்தில் அல்லது ட்விட்டரில் விஞ்ஞானிகளின் மனங்கள் மட்டும் கலந்து கொள்ளும் மாநாடு கூட நடத்தப்படலாம்! அந்த அளவு மனம் பற்றிய ஆராய்ச்சி முன்னேறி விட்டது. மனத்தோடு மனம் பேசும் நாள் -கற்பனை உலக மையமான காதல் காவியங்களிலிருந்து இடம் பெயர்ந்து – நிஜ உலகிற்கு வந்து சேரும் நாள் நெருங்குகிறது!

ஒன்பதாவது கண்டுபிடிப்பு: 90 நிமிடங்களில் உலகைச் சுற்றலாம்!

உலகின் பிரசித்தி பெற்ற நாவலான ‘அரவுண்ட் தி வோர்ல்ட் இன் 80 டேஸ்’ (எண்பது நாள்களில் உலகைச் சுற்றி) என்ற நாவலில் பிலியாஸ் பாக் என்ற கற்பனைக் கதாபாத்திரம் சுவாரசியமான ஒன்று. பிலியாஸ் பாக் 80 நாள்களில் உலகைச் சுற்ற என்ன பாடு பட்டார் என்பதை இந்த நாவல் சுவைபடச் சொல்லும். ஆனால் எதிர்கால உலகில் அனைத்துப் பயணிகளும் விரும்பினால் ஒரே மணி நேரத்தில் உலகைச் சுற்றி வந்து விடலாம்! அமெரிக்க விமானப் படையும் ப்ரேஸிலும் இணைந்து ஒரு ‘இலகு ரக விமானக் கொள்கையை’ உருவாக்கி இருக்கிறது. இதன் படி லேஸரினால் வானில் ஏற்படுத்தப்படும் வெடிப்புகள் பயணிகளையும் அவர்களது பொருள்களையும் பத்திரமாக உலகின் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு சில நிமிடங்களில் கொண்டு சேர்த்து விடும்! இது தவிர பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்படுவதால் விண்வெளி விமானங்கள் அதிவேகத்தில் சாதாரண விமானங்கள் இன்று பறப்பது போல அதிக எண்ணிக்கையில் அதிக இடங்களிலிருந்து இயக்கப்பட இருக்கின்றன. ஆகாயப் போக்குவரத்தில் இது ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகிறது

எட்டாவது கண்டுபிடிப்பு: அற்புதமான செயற்கை மனித உறுப்புகள்!

அமெரிக்காவில் வெகு விரைவில் கை கால்களை இழந்தவர்கள் இனி செயற்கை உறுப்புகளுடன் வலம் வர முடியும்! சாதாரண மனிதர்கள் தங்கள் கை கால்களை இயக்குவது போல அவற்றை இயக்கி அவர்கள் உபயோகப்படுத்தப் போகிறார்கள்! மிக அதி நவீன செயற்கை உறுப்புகள் ஸ்மார்ட் மைக்ரோப்ராஸஸர்களைப் பயன்படுத்தப் போகிறது. இதன்மூலம் சிறிய மூளை போல அவை இயங்கி அதைப் பயன்படுத்தும் பயனாளிகள் எப்படி தங்கள் கை அல்லது கால்களை இயக்க எண்ணுகிறார்கள் என்பதை அறிந்து அப்படிப்பட்ட இயக்கத்திற்கு உதவி புரியும்! மனிதர்களும் குரங்குகளும் ஏற்கனவே மூளை சிக்னல்களை மட்டும் பயன்படுத்தி ரோபாட் கைகளையும் டிஜிடல் பயன்பாடுகளையும் இயக்கும் அற்புதம் செயல்முறையில் வந்து விட்டது! இதனால் மூளை, செயற்கை அங்கங்களுடன் இணைந்து செயல்படுவது உறுதி செய்யப்பட்டு விட்டது! இந்த அதி நவீன உத்தி செயற்கை அங்கங்களைப் பொருத்தி உள்ளோர் அவை தங்களுடன் பிறவியிலேயே அமைந்திருக்கும் இயற்கை உறுப்புகளைப் போலவே உணரக் கூடிய அற்புதம் நடக்கப் போகிறது!

அறிவியல் அறிஞர்கள் வாழ்வில்……

மனிதனும் உருளைக்கிழங்கும்

எரிக் நெஸ்லர் அமெரிக்காவில் டெக்ஸாஸ் பல்கலைக் கழகத்தில் சவுத்வெஸ்டர்ன் மெடிகல் சென்டரில் மூளை இயல் விஞ்ஞானியாகப் பணி புரிபவர். இவர் ஹ்யூமன் ஜெனோம் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

ஹ்யூமன் ஜெனோம் ப்ராஜக்டில் மனித மரபணுக்களின் பட்டியல் வரிசை தயாரிக்கப்பட்ட போது அதில் 35000 ஜீன்களே இருந்தன. இந்த எண்ணிக்கை உருளைக் கிழங்கில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கையைப் போலவே இருந்தது. இதைக் கண்ட எரிக் நெஸ்லர்,
"உருளைக் கிழங்கைப் போல மனிதனும் இதில் இருப்பது ஒரு பெரிய அவமானமாக அல்லவா இருக்கிறது" என்று வேடிக்கையாகக் கூறினார். படைப்பில் உருளைக்கிழங்கும் மனிதனும் ஜீன் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் ஒரே அளவு தான்!

படைப்பின் விசித்திரம் எப்படி இருக்கிறது, பாருங்கள்!!

***************

நன்றி : பாக்யா

About The Author