அறிவியல் முத்துக்கள் (12)

எய்ட்ஸ் (AIDS)

AIDSஎய்ட்ஸ் என்பது தமிழில் ஈட்டிய நோய்த் தடைக் காப்புக் குறைபாட்டு நோய், எதிர்ப்புச் சக்திக் குறைவு நோய், ஏமக் குறைவு நோய் எனப் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது. இது Aquired Immune Deficiency Syndrome – AIDS என்பதன் மொழிபெயர்ப்பாகும். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மிகக் கொடிய நோயாகக் கருதப்படுவது இது. இந்நோய் மனித உடலில் எதிர்ப்புச் சக்திக் குறைபாட்டிற்கான நச்சு நுண்ணுயிரிகளால் (virus) தோற்றுவிக்கப்படுகிறது. இக்கிருமிகள், நோய்த் தடைக் காப்புக் குறைபாட்டு நோய்க் கிருமிகள் (Human Immune Deficiency Virus – HIV), அதாவது எச் ஐ வி (HIV) கிருமிகள் என அழைக்கப்படுகின்றன. மனித உடலில் புகுந்து நோய் விளைவிக்கும் பிற நுண்ணுயிரிகளை எதிர்த்து, உடல் நலத்தைப் பேணும், நோய்த் தடுப்புப் பாதுகாப்பு நுட்பவியலையே சீர்குலைத்து விடுவதால், இக்கிருமிகள் மற்ற நச்சு நுண்ணுயிரிகளில் இருந்து வேறுபட்டவையாக உள்ளன. மேலும் இக்கிருமிகள் ஏதேனும் சில காரணங்களால் தூண்டப்பெறும் வரை பல ஆண்டுகள் உடலில் செயலற்று இருக்கக்கூடியவை. அடுத்து இக்கிருமிகள் தூண்டப்பெற்றுவிட்டால் உடலில் உள்ள நோய்த் தடைக்காப்பு அல்லது எதிர்ப்புச் சக்தி அமைப்பையே சீர்குலைத்துவிடும். இந்நிலையில் சாதாரண தொற்றுநோய்க் கிருமிகளைக்கூட எதிர்க்கும் ஆற்றலை உடல் இழந்து விடுகிறது; இதன் விளைவு மிகவும் மோசமானதாகும்; சாவிலிருந்து தப்பிக்க இயலாது.

எச் ஐ வி பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து, உடல் திரவங்கள் வாயிலாக, நல்ல உடல் நிலையில் உள்ளவர்க்கும் இக்கிருமிகள் பரவக்கூடியன. நோயாளியுடன் மேற்கொள்ளப்படும் பால்வினைச் செயல்பாடுகள் இக்கிருமிகள் பரவுவதற்கு மிக முக்கியமான ஒரு காரணமாகும். எச் ஐ வி பாதிக்கப்பட்ட கருவுற்ற தாயின் வயிற்றிலுள்ள குழந்தைக்கும் இந்நோய் பரவக்கூடும். மேலும் நோய் பாதிக்கப்பட்டவர் அளிக்கும் குருதிக் கொடை வாயிலாகவும் எய்ட்ஸ் பரவும்.

ஒவ்வாமை (Allergy)

Allergyஅயற்பொருள் ஒன்றை உட்கொள்வதால்/தொடுவதால்/சுவாசிப்பதால் உடல்நலத்திற்குக் கெடுதல் ஏற்படும் பிணி நிலையே ஒவ்வாமை எனப்படுகிறது. தாவர இனப்பெருக்க நுண்துகள்கள் (spores) பூந்தாதுக்கள் (pollen), பூனைகளின் மயிரிழைகள், முட்டை, பால், மீன் போன்றவற்றின் புரதங்கள் ஆகியவை ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்களுள் அடங்கும். வீட்டிலுள்ள தூசு ஒவ்வாமை ஏற்படுத்தும் மிகச் சாதாரண அயற்பொருளாகும்.

அயற்பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் உடலின் பாகங்களில் மட்டுமே ஒவ்வாமையின் அறிகுறிகளாக, தோல் சிவந்து போதல் அல்லது தோல் தடித்தல் ஆகியன சாதாரணமாகத் தோன்றும். இருப்பினும் அயற்பொருட்கள் இரத்தத்துடன் கலக்கும்போது, அதனால் உடலின் எப்பகுதியில் வேண்டுமானாலும் எதிர்வினையின் விளைவுகள் தோன்றக்கூடும்.

நடைமுறையில் ஒவ்வாமைகள் அனைத்தும், உடலின் தற்காப்பு வழிமுறைகளின் (defence mechanisms) மிகை எதிர்வினைகளால் (over reaction) உண்டாகின்றன; இரத்த வெள்ளை உயிரணுக்கள், ஒவ்வாமை ஊக்கிகளை (allergens) அபாயகரமான தொற்று உயிரிகளாகக் கருதி அவற்றுடன் வினைபுரிவதால் ஒவ்வாமை உண்டாகிறது. இயல்பான நிலைமைகளில், இரத்த வெள்ளை உயிரணுக்கள் (லிம்போஸைட்கள்) பாக்டீரியா, நச்சுக்கிருமிகள் மற்றும் புரோடீனேசியஸ் போன்ற அயற்பொருட்களுடன் தொடர்பு கொள்வதால் நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உற்பத்தியாகின்றன. இந்த நோய் எதிர்ப்பொருட்கள் அயற்பொருட்களுடன் சேர்ந்து அப்பொருளின் விளைவை மட்டுப்படுத்தி விடுகின்றன. ஆனால் தீங்கு ஏற்படுத்தாத புரதத்துக்கு எதிராக ஒரு நோய் எதிர்ப்பொருள் உண்டாகும்போது, அது தன்னைத்தானே உயிரணுக்களுடன் இணைத்துக் கொள்கின்றது; இவ்வுயிரணுக்களில் ஹிஸ்டமின் என்னும் வேதிப்போருள் உள்ளது. குறிப்பிட்ட அந்தப் புரதம் உடலில் மீண்டும் நுழையும்போது ஹிஸ்டமின் வெளிப்படுத்தப்படுகின்றது. இச்செயல்பாட்டினால் இரத்தத் தந்துகிகள் (capillaries) பெரிதாகின்றன; அவற்றின் சுவர்ப் பகுதிகளில் கசியும் தன்மை உண்டாகி இரத்தத்திலுள்ள திரவப் பொருட்கள் அருகிலுள்ள திசுக்களுள் கசிந்து அவை வீக்கமடைகின்றன. இரத்தத் தந்துகிகள் விரிவடைவதால் ஒவ்வாமையின் காரணமாகச் சிகப்பு நிறமும் அரிப்பும் கூட உண்டாகின்றன.

About The Author