அறிவியல் முத்துக்கள் (17)

மாற்று வழி இதய அறுவை சிகிச்சை (By-Pass Surgery)

By-pass Surgeryமாற்று வழி இதய அறுவை சிகிச்சை என்பது இதயத்தின் செயல்பாட்டைச் சீரழிக்கும் வகையில் இதயத் தமனிகளில் (arteries) தடை ஏற்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கும் ஒரு வழி முறையாகும். தமனிகள் என்பவை இதயத் தசைகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்களாகும். இந்நாளங்களில் கொழுப்புப் பொருட்கள் படிவதால், படிப்படியாக சுருக்கமடைந்து அதில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டுவிடக் கூடும். இது நிகழும் போது, இதயத்தின் குறிப்பிட்ட பகுதிக்கு இரத்தம் வழங்கப்படுவது குறைந்து போகும் அல்லது முழுமையாக நின்று போகும்; இந்நிலையில் நோயாளி கடுமையான மார்பு வலியால் பாதிக்கப்படுவார் அல்லது இறந்து போகவும் நேரிடும். அப்போது இரத்தம் வழங்குவதற்கு அடைப்பட்ட தமனிக்கு மாற்று வழி ஒன்று அளிக்கப்படும்; இதற்கு நோயாளியின் கால் பகுதியிலிருந்து எடுக்கப்படும் சிரைத் (Vein) துண்டு ஒன்றைப் பொருத்திப் பயன்படுத்துவர்.

மாற்று வழி இதய அறுவை சிகிச்சையின் போது, நோயாளியின் இதயத்திலிருந்து இரத்தம் அகற்றப்படும், இதற்கு இரு குழாய்கள், ஒன்று பெருந் தமனியிலும் (aorta) மற்றொன்று பெருஞ்சிரையிலும் (vena cava), செருக்கப்படும். இவ்விரு குழாய்களும் இதய – நுரையீரல் எந்திரத்தில் இணைக்கப்பட்டு, அறுவை சிகிச்சையின் போது, இரத்தத்தைப் பம்ப் செய்தல் ஆக்சிஜனேற்றம் ஆகியன மேற்கொள்ளப்படும். நோயாளியின் இதயம் காலி செய்யப் பட்ட உடனே, அது நின்று போய்விடும் அல்லது அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் பொருட்டு மருந்துகளைக் கொண்டு அல்லது மின் அதிர்ச்சி அளித்து நிறுத்தப்படும்.

கம்பி வடத் தொலைக் காட்சி (Cable Television)

Cable Televisionஉயர் அதிர்வெண் ரேடியோ அலைகளுக்கு (high frequency Radio waves) மாறாக கம்பிவடங்கள் வாயிலாக ஒலி மற்றும் உருவங்கள் ஆகியவற்றைப் பல தொலைக்காட்சிகளுக்கும் பரப்பும் தொழில் நுட்ப முறையே கம்பி வடத் தொலைக்காட்சி ஆகும். ஒளிபரப்பும் நிலையங்களால் பரப்பப்படும் தொலைக்காட்சி சமிக்ஞைகள் (signals) உயர் அதிர்வெண் அலைகளாக இருப்பதால், அவற்றைப் பெறும் ஆண்டனா (Receving antenna) ஒலி/ஒளிப் பரப்பிக்கு (transmitter) நேர் வரிசையில் இருந்தால் மட்டுமே சரியாக அவற்றைப் பெற முடியும். நீண்ட தூரத்தில் பெறப்படும் சமிக்ஞைகள் மிகவும் வலிமை குன்றி இருக்கும். மேலும், குன்றுகள், மலைகள், உயரமான கட்டடங்கள் ஆகியவற்றால் தொலைக்காட்சி சமிக்ஞைகள் தடுக்கப்படுகின்றன. இத்தகைய நிலைமைகளில் கம்பி வடத் தொலைக்காட்சி உதவி புரிகிறது. தகுதியான இடத்தில் நிறுவப்படும் ஒரே ஒரு ஆண்டனாவின் உதவியுடன், பல தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒரே நேரத்தில் சமிக்ஞைகளைப் பெற முடிகிறது. ஆண்டனாவிலிருந்து வரும் சமிக்ஞைகள் பெருக்கமடைந்து வடங்களின் வலையமைப்பு வாயிலாக தொலைக்காட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. செயற்கைக் கோள்களால் பரப்பப்படும் சமிக்ஞைகளும் கூட பெரிய வட்டு-ஆண்டனாவால் (dish antenna) வடங்கள் வாயிலாக பரப்பப்படுகின்றன.

காப்பிடப்பட்ட வடங்கள் (insulated cables) வாயிலாகப் பரப்பப்படும் சமிக்ஞைகள் தொலைக்காட்சிகளால் தெளிவாகப் பெறப்படும். இந்த வடங்கள் ஓரச்சு வடங்களாகும் (Co-axial cables); இதில் மைய அச்சுக் கடத்தியானது (central core conductor) மற்றொரு கடத்தியால் – ஒரு வலையால் (mesh) – சூழப்பட்டிருக்கும். இதனால், வடங்கள், வளைக்கப்பட்டாலும் முறுக்கப்பட்டாலும் கூட, ஒரு கடத்தியால் எடுத்துச் செல்லப்படும். சமிக்ஞைகள் மற்றொன்றால் எடுத்துச் செல்லப்படும் சமிக்ஞைகளுக்கு இடையூறு செய்வதில்லை. மேலும், சமிக்ஞைகளை வலிமைப்படுத்த ஒலி/ஒளி பெருக்கிகளும் (amplifiers) பயன்படுத்தப்படுகின்றன; இதனால் ஒவ்வொரு தொலைக்காட்சியும் போதுமான வலிமையுடன் சமிக்ஞைகளைப் பெற்று தெளிவான உருவம் கிடைக்கிறது.

About The Author