அறிவியல் முத்துக்கள் (2)

உடலின் சீரான வெப்ப அளவு

நமது மூளையில் உள்ள ஹைபோதாலமஸ் (hypothalamus) என்பது உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் உள்ளிருப்பு நுட்பக் கருவியாக விளங்குகிறது. மூளை வழியாகப் பாய்ந்து செல்லும் இரத்தத்தின் வெப்பநிலையும், நமது தோலில் அமைந்துள்ள வெப்பநிலை உணர் நரம்புகளின் செய்திகளும் ஹைபோதாலமசுக்கு அனுப்பப்படுகின்றன. அந்த ஹைபோதாலமசின் ஒரு பகுதி, உடலின் இயல்பு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையை உணர்வதாகவும், மற்றொரு பகுதி இயல்பு நிலைக்குக் கீழ்ப்பட்ட வெப்பநிலையை உணர்வதாகவும் அமைந்துள்ளன. உடலில் மிகுதியாக வெப்பம் உண்டாகும்போது, வியர்வையால் கூடுதல் வெப்பம் நீக்கப்பட்டு விடுகிறது. சுற்றுச்சூழல் குளிர்ந்து போகும்போது, தேவையான கூடுதல் வெப்பம் வளர்சிதை மாற்றத்தாலும் (metabolism), நடுக்கம் போன்ற தசைச் செயல்பாட்டினாலும் பெறப்படுகிறது. இம்மாற்றங்களுக்கு, உடல் செயல்பாடுகளை அனிச்சையாக மேற்கொள்ளும் வழிகளைக் கட்டுப்படுத்தும் நரம்புகளே, காரணமாக அமைகின்றன.

நீர்மூழ்கிக் கப்பல்

மிதப்புத் திறன் (buoyancy) என்ற அறிவியல் கோட்பாட்டின் அடிப்படையில், நீர்மூழ்கிக் கப்பல் தேவைக்கேற்ப கடலுக்கடியில் செல்லவும், கடல் நீருக்கு மேல் வருவதற்குமான வகையில் வடிவமைக்கப்பட்டு கட்டப்படுகிறது. உறுதியான எஃகினைக் கொண்டு கட்டப்பட்ட இரு சுவர்ப் பகுதிகள் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ளன. கப்பல் நீரினுள் செல்ல வேண்டுமெனில் சுவர்களுக்கு இடையே உள்ள பகுதியில் நீர் நிரப்பப்படும். இதனால் கப்பலின் எடை கூடி, அது நீரினுள் மூழ்கிச் செல்லும். கடற்பகுதிக்கு மேல் கப்பல் வர வேண்டுமெனில், சுவர்ப் பகுதிகளுக்கு இடையே உள்ள நீர் வெளியேற்றப்பட்டு, அப்பகுதியில் காற்று நிரப்பப்படும். இதனால் எடை குறைந்து, கப்பல் நீருக்கு மேல் மிதக்கும்.”

About The Author

1 Comment

  1. Dr. S. Subramanian

    Clear, concise, and crisp explanation of hypothalamus activity and the principle of submarine function. Good job!

Comments are closed.