அறிவியல் முத்துக்கள் (21)

குழந்தைகளின் பால் பற்கள்

Milk Toothவளர்ந்து வரும் தாடை எலும்புகளில் (jaw bones) 32 பற்களுக்கும் இடமளிக்கும் பொருட்டு பால் பற்கள் விழ வேண்டியது கட்டாயமாகிறது. பின்னர் தோன்றப் போகும் இப்பற்கள் அளவில் பெரிதானவை; பல ஆண்டுகளுக்கு உறுதியாக நிலைத்திருக்கப் போகின்றவை. குழந்தை பிறந்த ஆறேழு மாதங்களில் சுமார் 20 பால் பற்கள் முளைக்கத் துவங்குகின்றன; இவையனைத்தும் அதற்கு இரண்டரை அல்லது மூன்றாண்டுகள் நிரம்பும்போது முழுமையாக வளர்ந்து விடுகின்றன. குழந்தை வளர வளர அதன் தாடை எலும்பும் பெரிதாக வளர்கிறது. அப்போதுதான் பின்னர் தோன்றப்போகும், அளவில் பெரிய, நிலையான பற்களுக்கு இடமளிக்க இயலும். பால் பற்கள் தோன்றும்போதே, நிலையான பற்களும் முளைக்கத் துவங்குகின்றன என்பதுதான் உண்மை. இந்நிலைப் பற்கள் வளர்கையில், பால் பற்களின் வேரைத் துண்டித்து விடுகின்றன. இதனாலேயே பால் பற்கள் விழ வேண்டியதாகிறது. முதலாவது கடைவாய்ப் பல் முளைக்கத் துவங்கும் போது குழந்தையின் பால் பல் விழத்துவங்குகிறது; இந்நிகழ்ச்சி குழந்தையின் ஆறாவது வயதில் நடைபெறுகிறதெனலாம்.

பதியம் செய்யப்பெற்ற உறுப்புகள் (transplanted organs)

Kidneyதனிப்பட்ட ஒவ்வொருவரின் உடலிலும் சில சிறப்புப் புரோட்டின் மூலக்கூறுகள் (molecules) உள்ளன. இவையே பதியம் செய்யப்பெற்ற சிறு நீரகம் போன்ற உறுப்புகள் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைகின்றன. எதிர்ப்புப் பொருள்கள் (anti-bodies) என அழைக்கப்பெறும் மேற்கூறிய மூலக்கூறுகள், அயல் உறுப்புகளை அவற்றிலுள்ள எதிர்ப்புத் தூண்டிகள் (antigens) வாயிலாக எளிதில் இனம் கண்டு கொள்ளுகின்றன. நோயாளி ஒருவருக்குப் பதியம் செய்யப்படவேண்டிய உறுப்பு மற்றொருவர் உடலில் இருந்து பெறப்படுவதாகும். இவ்வாறு பெறப்படும் உறுப்பில் உள்ள எதிர்ப்புத் தூண்டிகள் நோயாளியின் உடலில் இருப்பதில்லை. எனவே நோயாளிக்கு உறுப்பு பதியம் செய்யப்பட்டவுடன், அவரது உடலில் எதிர்ப்புப் பொருள்கள் தோன்றுகின்றன; அவை பதியம் செய்யப்பட்ட உறுப்பிலுள்ள எதிர்ப்புத் தூண்டிகளை எதிர்த்துப் போரிடத் துவங்கும். இதனால் கொடையாகப் பெறப்பட்ட உறுப்பு அழிக்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு நெருங்கிய உறவினர்களிடமிருந்து உறுப்புகளைப் பெற்றுப் பதியம் செய்தல், அல்லது மாற்றுக் குருதியை விரவிக்கும் (blood transfusion) போது கடைபிடிக்கப்பெறும் திசு ஒத்திசைவு (tissue matching) முறையைக் கையாளுதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். மேலும் பதியம் செய்யப்பெற்ற பிறகு தகுந்த மருந்துகளை நோயாளிக்கு அளிப்பதன் வாயிலாகவும் உறுப்புகள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.

வயிற்றில் புளியைக் கரைப்பது போன்ற உணர்வு

Stomach Upsetதேர்வு எழுதுவதற்கு முன்னரும், வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் போதும், கிரிக்கெட் ஆட்டத்தில் நமது அணி தோற்றுப்போகும் நிலையில் இருக்கும் போதும் ஒரு வகையான அசாதாரண நிலைக்கு நாம் ஆட்படுவதுண்டு. அப்போது நமக்கு ஏற்படும் உணர்ச்சியை வயிற்றில் புளியைக் கரைப்பது போல இருக்கிறது எனக் கூறுகிறோம். வயிற்றின் குடல் பகுதியில் அமைந்திருக்கும் அடர்த்தியான நரம்புப் பின்னலில் இருந்து அப்போது வெளிப்படும் உணர்வுச் சமிக்ஞைகளே இதற்குக் காரணம். மேற்கூறிய அந்நரம்புப் பின்னல் குடல் நரம்பு அமைப்பு என அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு உணவுக்குழாய், வயிறு, குடல் ஆகியவற்றின் திசுக்களுக்குள் அமைந்துள்ளது. இது நமது மூளையைப் போன்று பணியாற்றுகிறது எனலாம். நாம் உணர்ச்சிக்கு ஆட்படும்போது, மூளையைப் போன்றே இந்நரம்புப் பின்னலமைப்பும் சில வேதிப் பொருள்களை வெளிப்படுத்துகின்றது. இதன் காரணமாகவே வயிற்றில் புளியைக் கரைப்பது போன்ற உணர்வுக்கு நாம் ஆளாகின்றோம்.

About The Author