அறிவியல் முத்துக்கள் (36)

குளோனிங் (Cloning)

Cloning"எளிய முறையில் கூறுவதென்றால் ‘குளோனிங்’ என்பது ஒரே மாதிரியாக நகலெடுத்தல் என்று பொருள்படும். "குளோன்" என்பது ஒரு மூலத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு உயிர்ப்பொருள் (organism) அல்லது உயிர்ப்பொருள்களின் ஒரு குழு ஆகும். ஆங்கிலச் சொல்லான ‘குளோன்’ (‘Clone’) என்பது கிரேக்கச் சொல்லான ‘klon’ என்பதிலிருந்து பெறப்பட்டது; இக்கிரேக்கச் சொல்லின் பொருள் "கிளை/ தண்டு/ குருத்து" என்பனவாகும். மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகள் அல்லது தண்டுகள் அந்த மர / தாவர இனத்தைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே மூலத் தாவரத்திலிருந்து வேறொரு உயிர்ப்பொருள் உருவாவதை இது குறிக்கிறது.

மரபுப் பொறியியலின் (genetic engineering) வளர்ச்சியினால், தாவரம் அல்லது விலங்கு ஒன்றின் ஒற்றை உடல் உயிரணுவிலிருந்து (somatic cell) ஒரு முழு உயிர்ப்பொருளையே இப்போது உருவாக்க முடியும். உடல் உயிரணுக்கள் இரு தொகுதி குரோமோசாம்களைக் கொண்டிருப்பதால், அவை உயிர்ப்பொருள் பற்றிய எல்லா மரபுத் தகவல்களையும் பெற்றுள்ளன. நல்ல தரம் வாய்ந்த ஒரு மூலத் தாவரத்திலிருந்து பெறப்பட்ட மூல உயிரணுக்களைக்கொண்டு, சீரான தரம் வாய்ந்த ஏராளமான உயர்வகைத் தாவரங்களை உருவாக்குவதற்குரிய சிறந்த உயிரித் தொழில்நுட்பக் (bio-technological) கருவியாக இப்போது ‘குளோனிங்’ விளங்குகிறது. சோதனை முறையில் விலங்குகளைக் குளோனிங் செய்வது 1952இல் அமெரிக்க அறிவியல் அறிஞர்களான ராபர்ட் பிரிக்ஸ் மற்றும் தாமஸ் ஜே. கிங் என்போரால் மேற்கொள்ளப்பட்டது.

குறுவட்டு (Compact disk)

Compact Diskஉலோக வட்டு ஒன்றில் லேசர் (laser) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்க முறைக் கேட்பொலி அல்லது ஒளித்தோற்றத் (digital audio or video) தகவல்களைப் பதிவு செய்யும் அல்லது சேமிக்கும் ஓர் அமைப்பே குறுவட்டு எனப்படுகிறது. அலுமினிய வட்டு ஒன்றில் லேசர் ஒளிக்கற்றையால் நுட்பமாகப் பொறிக்கப்பட்ட (etched) பகுதிகளில் தரவுகள் (data) சேமிக்கப்படுகின்றன. ஒலிப்பதிவுத் தட்டுகளைப் போல் சுழலும் குறுவட்டை, லேசரைப் பயன்படுத்தி ஸ்கேன் (scan) செய்து, சேமிக்கப்பட்ட தகவல்கள் வாசிக்கப்படுகின்றன. பொறிக்கப்பட்ட குழிவுப் பகுதி 0 எனவும் சமதளப் பரப்பு 1 எனவும் வாசிக்கப்பட்டு இலக்கமுறை ஒலி எழுப்பப்படுகிறது. லேசர் ஒளிக்கற்றை (beam) சமதளப் பரப்பை எவ்விதத்திலும் சேதப்படுத்தாததால், இசை அல்லது ஒலி குறுவட்டிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி மறு ஒலிபரப்பு செய்யப்படுகின்றது; இதனால் இத்தகைய இசைக் குறுவட்டுகள் (music compact discs), கிராமஃபோன் ஒலித்தட்டுகள் மற்றும் ஒலி நாடாக்களை (tape recorders) முழுமையாக நீக்கிவிட்டன. மேலும் குறுவட்டுகளில் உரைகள், படங்கள், ஒலி ஆகிய தரவுகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் ஏராளமான அளவில் பதிவு செய்ய இயலும். எடுத்துக்காட்டாக, படங்கள் உரைகள் உட்பட 30 தொகுதிகள் கொண்ட என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா கலைக்களஞ்சியத்தை ஒரே குறுவட்டில் சேமிக்க முடியும். ஏற்புத் திறன், சேமிப்புத் திறன் உட்படப் பல்வகைத் திறன்கள் காரணமாக வீட்டில் பொழுதுபோக்குக்கான மற்றும் வருங்காலக் கணினி அமைப்புகளுக்கான ஓர் ஊடகமாக குறுவட்டு விளங்கி வருகிறது.

கணினிச் சொடுக்கி (computer mouse)

Computer Mouseவிசைப்பலகையைப் (keyboard) பயன்படுத்தாமல் கணினித் திரையில் உருவங்களைக் கையாளும் (manipulating) ஒரு சாதனமே கணினிச் சொடுக்கி ஆகும். இது சுண்டெலியை ஒத்திருக்கும் ஓர் உள்ளீட்டுப் (input) பொறியமைப்பு. கணினிச் செயல்முறைகளில் உருவாக்குதல் (creating), தேர்வு செய்தல் (selecting), கையாளுதல் போன்றவற்றைத் திரையில் (screen) மேற்கொள்ளவேண்டி இருக்கும். திரையில் சுட்டியை (cursor) விரும்பும் இடத்திற்குக் கொண்டுசென்று இச்செயல்முறைகளைக் கணினிச்சொடுக்கியால் மேற்கொள்ள இயலும்.

கணினிச் சொடுக்கி கையால் இயக்கப்படும் ஒரு சுட்டுச் (pointing) சாதனமாகும்; சமதளப் பரப்பின் மேல் இழுக்கப்படும்போது, இயக்கத்தை உணர்ந்து தகவல்களை இச்சாதனம் கணினிக்குத் தெரிவிக்கிறது. இந்த வழிமுறையால் உருவங்கள், உரைகள் ஆகியவற்றைத் திரையில் வேண்டிய இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும்; அல்லது பட்டியலில் (menu) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்டதொரு செயலை மேற்கொள்ள முடியும். சொடுக்கியில் சாதாரணமாக ஒன்று அல்லது மூன்று பொத்தான்கள் (buttons) இருக்கும்; பொத்தானை அமுக்கி சுட்டியின் அப்போதைய இடத்தைப் பதிவு செய்ய முடியும்.

தற்போது பல்வகைக் கணினிச் சொடுக்கிகள் பயன்பாட்டில் உள்ளன; இருப்பினும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவது பொறிமுறைச் சொடுக்கியே (mechanical mouse) ஆகும். இதன் அடிப்பகுதியில் சிறு பந்து (ball) போன்ற ஓர் அமைப்பு உள்ளது; இது சொடுக்கியை நகர்த்தும்போது சமபரப்பில் உருளும்; உள்ளே சின்னஞ்சிறு சக்கரங்கள் இரண்டு அமைந்து, பந்து உருளும்போது அதனைத் தொட்டுக்கொண்டு உருளச் செய்யும். பொறிமுறை அல்லாத சொடுக்கியில் (non-mechanical) உருளும் பந்தோ, சுழலும் சக்கரங்களோ இருப்பதில்லை; இதனை ஒளிவச் சொடுக்கி (optical mouse)என அழைப்பர்.

About The Author